18 ஆகஸ்ட் 2019

இணைய வெளியினிலே...  

Published: 18th June 2019 10:48 AM

முக நூலிலிருந்து....
* தருபவர் கைகளிலிருந்து
பெறுபவர் கைகளுக்கு
மாறும்போது கூட, 
சிரித்தபடியேதான் செல்கின்றன...
மல்லிகைப் பூக்கள்.
சுப்புராஜ் ரெங்கசாமி

* தவறுகளை நீங்கள் 
திருத்திக் கொள்ளாவிட்டால்,
அத்தவறுகளே... 
நாளை உங்களைத்
தண்டித்துவிடும்.
பிரபா அன்பு

* வாளினும் வலிமையானது மொழி
கத்திக் கூப்பிடலாம்...
குத்திக் கிழிக்கலாம்...
ஒத்தி வருடலாம்...
எதுவும் செய்யலாம்.
பரமேஸ்வரன்

* வெற்றிக்குப் பின்னால்
பல அவமானங்கள் இருக்கலாம்.
தோல்விக்குப் பின்னால்...
அவமானங்கள் மட்டுமே இருக்கும்.
பரிமேலழகன் பரி

சுட்டுரையிலிருந்து...
* திருவிழாக்களில் 
தொலைந்த குழந்தைகள்,
90களின் குழந்தைகளாகத்தான் இருக்கும்.
இன்றைய குழந்தைகள்
திருவிழாக்களையே 
தொலைத்துக் கொண்டிருக்கின்றன.
செவத்தபுள்ள

* பத்துப் பொருத்தம்
தேவையில்லை. 
"கால்' பொருத்தம் போதும்... செருப்புக்கு.
செங்காந்தள் 

* வம்பை விலை கொடுத்து 
வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
உண்மையாகப் பேசினாலே போதும்.
விஸ்வன்

* ஜன்னலோர இருக்கையில்
யாரையும் அமரவிடாமல்... 
எனக்காக இடம் போட்டு வைத்திருந்தது
மழை.
யாத்திரி

வலைதளத்திலிருந்து...
பூனைகள் 

பூனைகளைத் தெருவில் பார்ப்பது வர வர அரிதாகி விட்டது. இப்போது அடிக்கடி குறுக்கே போவதில்லை அவை. ஒரு வேளை நம்மை விட உயிர்ஆபத்து அதற்குத்தான் என்று உணர்ந்திருக்கலாம்.
பார்க்காத போது நுழைந்து பால்கனி வழியாக தப்பித்துப் போவது தான் பூனை என்றாலும், அது தப்பிக்கும் லாகவத்தை நீங்கள் எப்போதாவது பார்க்க வேண்டும்.
அளவோடு திருடுவதில் பூனைகள் பெருந்தன்மையானவை. அடுக்குப் பாலின் உயரத்தைக் கொஞ்சமாகக் குறைத்து விட்டுப் போகிறது... நமக்கு எச்சம் வைத்து விட்டு!
பூனையின் எச்சத்தை நாம் நிராகரிப்பதில்லை...நாயினதைப் போல!
ஏதோ ஓர் ஆசாரத்தனம்! உதவாத சுயநல ஜன்மமென்றாலும் உள்ளே வளைய வரும் சகஜத்தைத் தடுப்பதில்லை வீடுகள். தனியாக விடப்பட்ட முதியோர்களுக்கு பகலில் வளைந்து வரும் பேச்சுத் துணை. ஆனாலும் இப்போது வர வர பூனைகளைக் கண்டாலும் வாயடைத்துக் கொள்ளுகின்றன... வீடுகள்.
சில வீடுகளில் முதியோர்களும் பூனைகள் தாம்!
http://vydheesw.blogspot.com
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காடுகளில் 11 ஆண்டுகள்...50 ஆயிரம் புகைப்படங்கள்!
கை அசைவால் இயங்கும் சக்கர நாற்காலி!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 204 - ஆர்.அபிலாஷ்
விதி
அறிவால் உருவாகும் ஆரோக்கிய சமுதாயம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)