சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 50

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 50

மைனிங் துறையில் உயர்கல்வியை எடுத்துக் கொண்டோம் என்றால், அவற்றை Materials & Manufacturing,  Water Research,  Energy,  Subsurface,   Biology ஆகிய ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  அதில்  மெட்டீரியல்ஸ் அண்ட் மேனுஃபேக்சரிங் பிரிவில் நிறைய  ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன.  ஸ்டீல் புராசசிங் அண்ட் புராடக்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சிப் படிப்பு உள்ளது. அடிட்டிவ் புராசெசிங் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி,  அட்வான்ஸ்டு  நான் - ஃபெரஸ் ஸ்ட்ரக்சுரல் அலாய்ஸ் பற்றிய ஆராய்ச்சி,  ஹைடிரேட்ஸ் மற்றும் பிற சாலிட்ஸ் தொடர்பான ஆராய்ச்சி,  வானவெளியில் சுரங்கத்துறை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஸ்பேஸ் ரிசோர்செஸ்,  வெல்டிங், ஜாயினிங், கோட்டிங்ஸ் ஆராய்ச்சி, அட்வான்ஸ்டு  செராமிக்ஸ் தொடர்பான  ஆராய்ச்சி, தாதுப் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சி,  நியூக்ளியர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் தொடர்பான ஆராய்ச்சி,  ரினிவபிள் எனர்ஜி மெட்டீரியல்ஸ் ஆராய்ச்சி, அட்வான்ஸ்டு நான் - ஃபெரஸ் ஸ்டரக்சுரல் அலாய்ஸ் தொடர்பான ஆராய்ச்சி என நிறைய ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. 

எனர்ஜி பிரிவில் ஹைட்ரேட்ஸ் மற்றும் பிற சாலிட்ஸ் தொடர்பான ஆராய்ச்சி, ஃபியுயெல் செல் தொடர்பான ஆராய்ச்சி,  நியூக்லியர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் தொடர்பான ஆராய்ச்சி,  ரினிவபிள் எனர்ஜி மெட்டீரியல்ஸ் தொடர்பான ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.  

The Microintegrated Optics for Advanced Bioimaging and Control ஆராய்ச்சிப் படிப்பு பயாலஜி பிரிவில் உள்ளது. சப் சர்ஃபேஸ் பிரிவில் எர்த் மெட்டீரியல்ஸ், மெக்கானிக்ஸ் மற்றும் கேரக்டரிசேஷன் என்ற ஆராய்ச்சி,  எக்ஸ்ட்ராக்டிவ் மெட்டாலர்ஜி என்ற ஆராய்ச்சி,  ரிசர்வாயர் ஆராய்ச்சி,  நேச்சுரல் கேஸ் மற்றும் எண்ணெய் தொடர்பான ஆராய்ச்சி உட்பட பல ஆராய்ச்சி படிப்புகள்உள்ளன. 
வாட்டர் ரிசர்ச் பிரிவில்  அட்வான்ஸ்டு வாட்டர் டெக்னாலஜி, என்விரான்மென்ட் ரிஸ்க்,  சர்ஃபேஸ் என்விரான்மென்டல் புராசெஸ்,  இன்டெகரேட்டடு கிரவுண்ட் வாட்டர் மாடலிங்,  அர்பன் வாட்டர் இன்ஃபிராஸ்ட்ரக்சர் ஆகிய ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன. 

இந்தியாவில் மிகப் பழமையான வைரப் புதையல் ஒன்று  உள்ளது. தென் அமெரிக்காவின்,  பிரேசிலுக்கு அடுத்து 3000 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்திலுள்ள பன்னா என்ற இடத்தில் அமைந்துள்ள  வைரச் சுரங்கம் உலகின் மிகப் பழமையான வைரச் சுரங்கங்களில் ஒன்றாகும். இது மத்திய அரசின் கீழ் அமைந்துள்ள "நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்' கீழ் இயங்கி வருகிறது.  இங்கே கிடைக்கக் கூடிய வைரங்கள் மிகச் சிறந்த வைரங்களாக உலகச் சந்தையில் கருதப்படுகின்றன. 

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினப் பெண்கள்  இந்த வைரத்தைக்   பார்த்தவுடனேயே வைரம் என்று தெரிந்து எடுத்துத் தருவது வழக்கம்.  அதற்குப் பிறகு நவீனத் தொழில்நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்பட்ட டைமண்ட் பிக்கரிங் மெஷின் பூமியிலுள்ள  வைரங்களைக் கண்டறிவதற்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது.  ஆனால் இந்த மெஷின் "இது டைமண்ட் இல்லை' என்று ரிஜெக்ட் செய்தவற்றில் ஏராளமான வைரங்களை மக்கள் கண்டுபிடித்துக் கொடுத்தனர்.  அதனால்   இந்த மெஷினைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்கள்.  மக்களே வைரத்தைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்முறை இப்போது வரை தொடர்கிறது.

சுரங்கத்துறையில் ஆராய்ச்சிகளும், சுரங்கத் தொழிற்துறை சார்ந்த சுற்றுச்
சூழல் பாதுகாப்புத் தேவைகளும் அதிகரித்துள்ளன. இத்துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று நாம் தாதுப் பொருள்களை எடுத்து ஸ்டீலை உருவாக்கவில்லை என்றால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டத்தை நோக்கி நாம் சென்று இருக்க முடியாது.

விண்வெளியில் மனிதர்களைத் தங்க வைக்க முடியுமா என்ற ஆராய்ச்சி செய்தால் அங்குள்ள நிலப்பரப்பு எப்படி உள்ளது? அவற்றில் உள்ள நன்மை, தீமைகள் எவை? என்று ஆராய வேண்டியதிருக்கும்.  அதுவும் கூட சுரங்கத் தொழில்துறையுடன் தொடர்புடையதேயாகும்.  இத்தகைய  ஆராய்ச்சி தொடர்பான  வேலை வாய்ப்புகளும் உள்ளன. எனவே மாணவர்கள் எந்தத் துறையையும்  புறக்கணிக்காமல், ஒருதுறையில் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் தங்களுடைய முழு கவனத்தையும் ஈடுபாட்டையும் செலுத்தி, கல்லூரியின் பாடத்திட்டத்திற்கப்பால் அத்துறையின் வளர்ச்சி சார்ந்த படிப்புகளை எடுத்துப் படித்தோம்  என்றால், நமக்கு உலகளாவிய வாய்ப்புகள் உள்ளன என்பதில்  ஐயமில்லை.

பெரும்பாலான மக்களால் புறக்கணிக்கப்படும் இன்னொரு துறையைப் பற்றிப் பார்ப்போம்.  வரலாற்றுப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் வேலை கிடைக்காது; இந்தத் துறையில் வளர்ச்சி இல்லை என்று  வரலாற்றுத்துறை குறித்து    தவறாகக் கருதப்படுகிறது. கிரேக்க மொழியில் ஹிஸ்டோரியா என்பதே  பின்னர் ஹிஸ்டரி என ஆனது.   கேள்வி கேட்டு,  அதாவது ஏன், எப்படி, யார், எதற்கு என பல கேள்விகளைக் கேட்டு, அவற்றிற்கான பதில்களைக் கண்டறிந்து, அவற்றை ஆவணப்படுத்துவதே வரலாறு ஆகும்.   வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்து அவற்றைத் தொகுத்து அந்த விஷயங்களை மக்களுடைய மனதில் எளிதாகக் கொண்டு செல்லும் வகையில் வகைப்படுத்தி, பழங்காலத் தகவல்களை  இப்போது புரியும்படி எடுத்துச் சொல்வதே வரலாற்றுத்துறையின் முக்கியப் பங்காகும்.  கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை  இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு புரியும் வண்ணம் தொகுத்து வழங்குபவர்களை நாம் வரலாற்றாளர்கள் என்று கூறுகிறோம். 

உதாரணமாக   சென்னையில் அண்மையில் மறைந்த முத்தையா ஒரு சிறந்த வரலாற்று ஆய்வாளர் ஆவார். அவர் தமிழ் மக்களுக்கு எண்ணற்றதகவல்களை வழங்கி வந்தார். அவர்  ஆசிரியராக இருந்த "மெட்ராஸ் மியூசிங்க்ஸ்' என்ற இதழின் மூலம் வரலாற்றுத் தகவல்களை ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றார்.

இன்றைக்கு  வரலாற்றுத் துறையானது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது.  இதற்காக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் கூட இயங்கி வருகிறது.   பழைய வரலாற்றுச் செய்திகள் இந்த தொலைக்காட்சி மூலம் திரும்பத் திரும்ப மக்களுக்கு வழங்கப்படுகின்றன.   தற்போதைய வரலாற்று  மாணவர்கள் -ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அது தொடங்கியது முதல் இன்று வரை அது கடந்து வந்த வளர்ச்சிப் பாதைகளையும், பெற்ற வெற்றிகளையும் புத்தக வடிவில்  ஆவணப்படுத்துகிறார்கள்.  குறும்படமாக ஆவணப்படுத்துகிறார்கள். இணைய தளம் மூலமாக உலகிற்குத் தெரியப்படுத்துகிறார்கள். 

சிறிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும்  ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் பல வரலாற்று அருங்காட்சியகங்கள் உள்ளன.  அங்கே பல வரலாறு தொடர்புடைய பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  அவற்றை இளையதலைமுறையினர், பள்ளி மாணவர்கள் பார்த்து, அவர்களுடைய முன்னோர்களின் வாழ்க்கையை, அவர்கள் பயன்படுத்திய  பொருள்களைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்கிறார்கள். முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த அடித்தளத்தின்மீது  இன்றைய வளர்ச்சி எவ்வாறு அமைந்து உள்ளது என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.  

ஆனால் நம்நாட்டில் பல வரலாற்று ஆவணங்களை  நாம் ஆவணப்படுத்தவில்லை.  இதனால் அவை யாராலும் கண்டுகொள்ளப்படாமல் அழிந்துவிடுகின்றன. சேதமடைந்துவிடுகின்றன. 

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட உருவாக்கப்பட்ட நிகழ்வு, கட்டடம், ஓவியம் என எதுவாக இருந்தாலும்,  அவற்றை அதற்கு முந்தைய கால நிலையுடன் ஒப்பிட்டு இவை எவ்வாறு வளர்ச்சி, மாற்றம் அடைந்துள்ளன என்பதை ஆவணப்படுத்தி வைத்தால்,   அந்த ஆவணங்களைப் பார்ப்பவர்கள், அந்த வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஆவணப்படுத்துபவர்கள் வரலாற்றாளர்கள்தாம். 

ஒரு கோயிலைப் பற்றி வரலாற்றாய்வாளர் ஆவணப்படுத்தும்போது,  அந்தக் கோயிலின் கட்டடக் கலை,  எதற்காக அந்தக் கோயில் கட்டப்பட்டது, யார் கட்டியது, அதைக் கட்ட யார் பயன்படுத்தப்பட்டார்கள்,  பிறநாட்டு கட்டடக் கலைஞர்கள் கட்டினார்களா அல்லது அந்தப் பகுதியில் வாழ்ந்த கட்டடக் கலைஞர்கள் கட்டினார்களா,  அந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, எவ்வாறு வடிவமைக்கப்பட்டன,  அந்தக் கோயிலின் உள்பகுதியில் உள்ள கூரையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் தன்மை என்ன? அந்தக் கோயிலின் இசை நிகழ்ச்சிகள் நடத்த அமைக்கப்பட்டிருந்த மேடைகள், இசையை ரசிக்கும் மக்கள்   அமர்ந்து கேட்கச் செய்திருந்த ஏற்பாடுகள்,  அக்கால கட்டத்தில் நடந்த நடனம், கூத்துகள், திருவிழாக்கள், கோவில் விழாக்கள், கோவிலில் உள்ள இலக்கியச் சான்றுகள்,  கோயிலின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அவர்கள் ஏற்படுத்திய ஏற்பாடுகள் இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒரு வரலாற்றாய்வாளர் ஆவணப்படுத்துகிறார்.  அதிலிருந்து    கோயிலின் சிறப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றை மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்:  சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com