22 செப்டம்பர் 2019

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 195

By ஆர்.அபிலாஷ்| DIN | Published: 11th June 2019 01:28 PM

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணுடன் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது நார்சிசிசம் பற்றி குறிப்பிடும் டாக்டர் சேஷாச்சலம் இதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு என்கிறார். அதைப் பார்ப்போமா!

சேஷாச்சலம்: நார்சிசிசத்தின் அறிவியல் விளக்கம் என்பது the pursuit of gratification from egoistic admiration of one's idealised self-image and attributes. 
 
கணேஷ்: எனக்கு ஃபைவ் ஸ்டார் ஓட்டல் மெனுவை படிக்கிற மாதிரி இருக்குது.
சேஷாச்சலம்: இரு, எது புரியலேன்னாலும் உடனே அதை கலாய்க்கிறது இந்த காலத்தில பேஷனாப் போச்சு. அப்படீன்னா நீ எதையுமே கத்துக்க முடியாது. தெரிஞ்சதை வச்சுட்டு காலத்துக்கும் தேங்கா மூடி கச்சேரி பண்ணலாம்.

நடாஷா: அதென்ன தேங்காய் மூடி கச்சேரி?

புரொபஸர்: அது தமிழில் உள்ள ஒரு சொலவடை. எங்க ஊரில் சில வித்வான்கள் கச்சேரி பண்ண வாய்ப்பில்லாமல் யார் கூப்பிட்டாலும் பாட கிளம்பி விடுவார்கள். இந்த மேடைகளில் சன்மானம் எல்லாம்  தர மாட்டார்கள். கச்சேரி முடியும் போது கையில் ஒரு தேங்காய் மூடியைப் பிரசாதமாய் கொடுப்பார்களாம். ஆனாலும் நாம பாடறதை கேட்டாங்களேன்னு இந்த வித்வான்களுக்கு அற்ப திருப்தி. ஒரு வாரத்துக்கு தான் கச்சேரி பண்ணின பெருமையைத் தம்பட்டம் அடிப்பார்கள். கிடைத்தது தேங்காய் மூடி என்பதை மறைத்து விடுவார்கள். 

நடாஷா: அடப்பாவி.

சேஷாச்சலம்: ஆமாம், இப்படி ஒன்றுமில்லாததுக்கு தம்பட்டம் அடிப்பதை ஆங்கிலத்தில் to blow one's own trumpet  என்பார்கள். இந்த சொற்றொடர் புலிகேசி படத்தில் வடிவேலு கலாய்ப்பாரே அந்த “"ராஜாதி ராஜ, ராஜமார்த்தாண்ட...'” ராஜ புகழ்ச்சியை குறிப்பிட்டு இங்கிலாந்தில் தோன்றினது தான். அன்று, அதாவது பதினாறு, பதினேழாம் நூற்றாண்டில் என வைத்துக் கொள், பெரிய ஜமீன்கள், செல்வந்தர்கள் தமது பரம்பரையின் மகிமையைப் புகழ்பாட ஆட்களை நியமிப்பார்கள். இவர்கள் ஊதுகுழலை முழக்கி இதை அறிவிப்பார்கள்.  ஒருவர்  தான்  பாராட்டப்படுவதற்காக  இப்படிப் பிரயத்தனப்படுவதை பிற்காலத்தில்  கிண்டலடிக்கத் தொடங்கினார்கள். சரி, நான் விசயத்துக்கு வருகிறேன். Pursuit என்றால் தேடல். Pursuit of Happiness படம் பார்த்திருப்பியே. Pursuit of gratification என்றால் தொடர்ந்து ஒருவர் ஒருவித திருப்தியை நாடுவது. என்னவிதமான திருப்தி? தன்னுடைய சுயபிம்பத்தின் லட்சிய வடிவை ரசிக்கும் ஈகோயிசமான திருப்தி. Self-image என்பது உளவியலில் முக்கியமான சொல். Self என்றால் சுயம். ஆனால் மனிதனால் தனது சுயத்தைத் தரிசிக்க முடியாது. அதை மொழியிலும் பிறரது செய்கைகளிலும் தன்னைப் பற்றின சமூக மதிப்பீடுகளிலும் தான் ஒரு மனிதன் அறிந்து கொள்ள முடியும். அதனால் தான் நமது செயல்பாடுகளை யாராவது பாராட்டினால் அப்படி ஒரு சந்தோஷம் நமக்குக் கிடைக்கிறது. அது பாராட்டுக்கான திருப்தி மட்டுமல்ல,  நம்மை நல்லவிதமாக அறிவதன் சந்தோஷமும் தான். இப்படித் தான் self என்பது self-image என உருக்கொள்கிறது. தேர்தலில் ஒரு தலைவர் வெல்லும் போது அவர் தன்னை மக்கள் தலைவனாய் எண்ணி மகிழ்கிறார்; அதற்கடுத்த தேர்தலில் படுதோல்வி அடையும் போது மக்களுக்கு தன்னை தேவையில்லையோ என உருக்குலைகிறார்.  

கணேஷ்: ஓ... அப்படி வரீங்களா?

சேஷாச்சலம்: ஆமாம். இது தான் சுயத்துக்கும் சுயபிம்பத்துக்குமான வித்தியாசம். மக்கள் தலைவனோ மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவனோ நிஜமான சுயம் அல்ல. அது ஒரு பிரதிபலிப்பு மட்டுமே. ஆனால் இப்படி ஒருவர் தன் சுயபிம்பத்தை சுயம் எனக் கருதி மயங்கும் போது ஈகோ ஏற்படுகிறது. இது எல்லாருக்கும் உள்ளது தான். நான் ஒரு டாக்டர் என்பது என் சுயபிம்பம். அந்த சுயபிம்பத்தின் வரையறை இன்றி உங்களிடம் நான் இதுவரை பேசியிருக்க முடியாதே. இந்த ஈகோ எப்போது அகந்தையாகிறது? ஒருவர் தனது சுயம்பிம்பத்தை மிகையாக அப்பழுக்கற்றதாக உத்தமானதாகக் கருதும் போது. அது தான் idealised self-image. இங்கு தான் கிரேக்க தொன்மக் கதையில் உள்ள நார்சிசஸ் வருகிறான். இந்த நார்சிசஸ் ஒரு பேரழகன். அவனது இந்த அழகினால் மிக அதிகமாய் கவரப்படுவது அவனே தான். அவன் தன்னையே ரசித்து  லயிக்கிறான். சதா தன்னைப் பற்றியே நினைத்து சிலாகித்து இருக்கும் அவனுக்கு பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அக்கறை இல்லை. இப்படி நார்சிசஸ் மீது மையல் கொள்ளும் பலர் தற்கொலை பண்ணுகிறார்கள். அவனோ யாரையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாய் இருக்கிறான். அப்போது ஒரு திருப்புமுனை வருகிறது.

கணேஷ்: என்ன?

(இனியும் பேசுவோம்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!
படிச்சுட்டா...பெரிய ஆளா?
வேலை...வேலை...வேலை...
சொற்கள்!
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!