வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

கோடைக்கால ஆராய்ச்சிப் பயிற்சி!

By இரா.மகாதேவன்| Published: 11th June 2019 12:31 PM

அறிவியல் மற்றும் அதனுடன் இணைந்த துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி. ராமனால் 1934-இல் பெங்களூருவில் தொடங்கப்பட்டது இந்திய அறிவியல் கழகம் (Indian Academy of Sciences). கல்விச் செயல்பாடுகளில் உள்ள அறிவியல் படைப்பு நடவடிக்கைகளை இந்த அகாதெமி அங்கீகரிப்பதோடு, கண்டுபிடிப்பின் போக்கில் இளைஞர்களிடையே உள்ள விஞ்ஞான திறமைகளைக் கண்டுபிடித்து அவற்றை   வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.  

1990 - இன் மத்தியில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களுக்காக இந்திய அறிவியல் கழகம் பலவித நடவடிக்கைகளைத் தொடங்கியது. அவற்றில் முக்கியமானது, இந்த அகாதெமியிலும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள சக துறை நிபுணர்களுடனும் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பணியாற்றும் கோடைகால ஆராய்ச்சிப் பயிற்சி (Summer Research Fellowship Program) ஆகும்.

1996  - இல் இந்திய அறிவியல் கழகம் சார்பில், அறிவியல் கல்வி தொடர்பான மாத இதழும் கொண்டு வரப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகும் இந்த இதழ், அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. குறிப்பாக, இளநிலை அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கருத்தில் கொண்டு இந்த இதழில் கட்டுரைகள் பிரசுரிக்கப்படுகின்றன.

கடந்த 2007, ஜனவரி முதல் புதுதில்லியில் உள்ள National Science Academy, அலகாபாத்தில் உள்ள The National Academy of Sciences, India, ஐய்க்ண்ஹ ஆகியவையும் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் முக்கிய கல்வித் திட்டங்களில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதில், கோடைகால ஆராய்ச்சிப் பயிற்சித் திட்டத்தில் திறமையான மாணவர்கள், ஆர்வமிக்க ஆசிரியர்கள், அகாதெமியின் நிபுணர்கள் மேற்கொண்டுவரும் ஆராய்ச்சித் திட்டங்களில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

1995 இல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் அண்மைக்காலமாக பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது.  2014 முதல் 2018 வரையான 5 ஆண்டுகளில்  இதுவரை மொத்தம் 17,225 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

நிகழாண்டில், நாடு முழுவதும் இருந்து பங்கேற்றுள்ள 1,774 பேரில், சுமார் 352 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட 20 சதவீதம். நிகழாண்டு மட்டுமல்லாது, தொடக்கம் முதலே இந்தப் பயிற்சியில் பங்கேற்பதில் தமிழக மாணவர்கள் முன்னணியில் உள்ளனர் என்பது சிறப்புக்குரியது. என்றாலும், அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் இல்லாதது ஒரு குறையாக உள்ளது. 

இந்திய அறிவியல் கழகத்தின் கோடைக்கால ஆராய்ச்சிப் பயிற்சி (Summer Research Fellowship Program)  குறித்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் எம்.ஆரோக்கியசாமி சேவியர் கூறியது:

""அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இளைஞர்களுக்கு ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்திய அறிவியல் கழகம் ஆண்டுதோறும் 2 மாத கோடைகால ஆராய்ச்சிப் பயிற்சியை வழங்குகிறது. இதில், அறிவியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட பொறியியல் துறைகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். 

குறிப்பாக, இளங்கலை அறிவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களும், முதுகலை அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர்களும் இப்பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை இதற்கான இணையதளங்களில் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும். பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் குறித்த விவரம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும். 

தேர்வுபெறும் மாணவர்களுக்கு நாடு முழுக்க உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIT) உள்ளிட்ட உயர்கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில், தலைசிறந்த விஞ்ஞானிகளின் ஆய்வகங்களில், உதவித்தொகை, போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு ஆகிய வசதிகளுடன் ஆராய்ச்சிப் பயிற்சி வழங்கப்படுகிறது. 

எங்கள் கல்லூரியின் வேதியியல்துறை மாணவர்கள் பலர் கடந்த ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்று தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

நிகழாண்டு இப்பயிற்சிக்குத் தேர்வாகியுள்ள இளங்கலை இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை மாணவர் எம்.எல். கீர்த்திவாசன்- பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்திலும் (IISC-Bangalore), ஜாக்ஆலன்- திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் (IISER), இதே துறையைச் சேர்ந்த முதுகலை முதலாம் ஆண்டு  ஆக்ஸிலியா ரூபி- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திலும் (IIT-M), ரிச்சர்ட்- கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்திலும் (IGCAR) பயிற்சி பெற்று வருகின்றனர். 

175 ஆவது ஆண்டைக் கொண்டாடி வரும் எங்கள் கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கும் இந்த மாணவர்களையும், அவர்களை நெறிப்படுத்தி, ஊக்கமூட்டிய வேதியியல் துறை பேராசிரியர்களையும் மனமாரப் பாராட்டுகிறேன்'' என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மனங்கொத்தி மாணவர்கள்!
"மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு!
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!
தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி!
இலவசமாகப் பாட நூல்கள்!