இளைஞர்மணி

சுற்றுச்சூழல் மேலாண்மைப் படிப்பு!

30th Jul 2019 12:23 PM

ADVERTISEMENT

தென் மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த 1997 -ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் என்ற ஊரில் திராவிடப் பல்கலைக்கழகம் (Dravidian University) தொடங்கப்பட்டது.
திராவிடப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, 2005 -இல் இங்கு தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் துறை உருவானது. திராவிடக் குடும்பத்தின் பிற முக்கிய மொழிகள் தொடர்பாக தமிழ் ஆய்வுகளை உருவாக்குதல், இன்றைய வேலைச் சந்தையில் குறிப்பிட்ட முக்கியத்துவத்துடன் மொழி ஆய்வுகளின் நவீனப் பயன்பாட்டை உருவாக்குதல், திராவிட இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தின் ஒப்பீட்டு அம்சங்களில் கவனம் செலுத்துதல், மொழிபெயர்ப்புக்கான சிறப்புப் பயிற்சி அளித்தல் ஆகியவை இந்தத் துறையின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.
ஆனால் வித்தியாசமாக இந்தப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் சுற்றுச்சூழல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (A Master's Degree in Environmental Management) தொடங்கப்பட்டுள்ளது. மனிதனின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளுக்கும், சுற்றுச்சூழலின் தேவைகளுக்கும் இடையில் ஓர் இணக்கமான சமநிலையை உருவாக்கும் செயல்பாடுகளை மேலாண்மை செய்யும் முதல்தர சுற்றுச்சூழல் மேலாளர்களாக மாணவர்களை மாற்ற இந்தப் பாடத்திட்டம் உதவுகிறது. தற்போதைய நிலையில், அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துவதால், இதற்கான வேலை வாய்ப்புகளும் மிக அதிகமாகவே உள்ளன. இதைப் பயிலும் மாணவர்களுக்கு அதிகப் பயன்தரக்கூடிய படிப்பாகும் இது. 
இந்த முதுநிலை பட்டம் சுற்றுச்சூழல் நிர்வாகத்தை ஆதரிக்கும் விஞ்ஞான கொள்கைகளில் உறுதியான அடிப்படையை வழங்குகிறது. 
சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் சட்ட அம்சங்கள், இயற்கை வள மேலாண்மை, பேரழிவு மேலாண்மை, மாசுபாடு மற்றும் கழிவுகளை அகற்றும் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கான பகுப்பாய்வு முறைகள், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, பல்லுயிர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, நிலையான எரிசக்தி மேலாண்மை, உலகளாவிய காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் தணிக்கை போன்ற அம்சங்கள் இந்த சுற்றுச்சூழல் மேலாண்மையில் உள்ளடங்கியுள்ளன. 
சுற்றுச்சூழல் மேலாண்மையில் முதுகலைப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விஞ்ஞானி, சுற்றுச்சூழல் மேலாண்மை பகுப்பாய்வாளர், மேலாளர்- சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் அலுவலர் மற்றும் மேலாளர், சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர், சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்ப நிபுணர், சுற்றுச்சூழல் துப்புரவு அதிகாரி, அரசு மற்றும் தனியார் துறைகளில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி, அரசு மற்றும் தனியார் துறைகளில் சுற்றுச்சூழல் ஆலோசகர், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறையில் தயாரிப்பு மேலாளர் என இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதில் சேர BE, BBA, B.sc.,பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் மட்டும் ரூ. 56,700. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 30 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
சுற்றுச்சூழல் மேலாண்மை படிப்பு தவிர, தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் துறையில் முழுநேர முதுநிலை பட்டம், முழுநேரம் மற்றும் பகுதிநேரம் கொண்ட எம்.பில். பட்டம், முழுநேர மற்றும் பகுதிநேர பி.எச்.டி. பட்ட வகுப்புகளும், ஓராண்டு டிப்ளமா படிப்பு, 6 மாதங்கள் கொண்ட சான்றிதழ் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் திராவிட இலக்கியம் மற்றும் தத்துவ துறை ஒப்பாய்வு (Department of Comparative Dravidian Literature and Philosophy - CDL&P) 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. வரலாறு, திராவிட இலக்கியம், தத்துவம், கலாசார ஒப்பாய்வு மற்றும் மதம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி, வெளியீடு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் துறை தொடங்கப்பட்டது.
இதில், வழக்கமான எம்.ஏ. தத்துவம் (2 ஆண்டுகள்), முழுநேரம் மற்றும் பகுதிநேர எம்.பில். தத்துவம் அல்லது திராவிட இலக்கியம் ஒப்பாய்வு, முழுநேர அல்லது பகுதிநேர பி.எச்.டி. தத்துவம் அல்லது திராவிட இலக்கியம் ஒப்பாய்வு பயிலலாம்.

எனினும் இந்த ஆண்டு தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்புப் பாடங்களை அதிகமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்புத் துறை தலைவர் டி. விஷ்ணுகுமாரன் கூறியது:
"இந்தப் பாடங்கள் குறித்து மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே இதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம். மேலும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பெறும் தமிழ் பட்டம் தங்கள் மாநிலத்தில் உரிய மதிப்பை அளிக்குமா என்பதில் மாணவர்களுக்கு ஐயம் இருக்கலாம். 
எங்கள் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்ற மாணவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இங்கு ஏராளமான வசதிகள் உள்ளன. இந்தத் துறை இதுவரை தமிழ் மொழியில் ரூ. 10.25 கோடிக்கு மேல் ஆராய்ச்சித் திட்டங்களை முடித்துள்ளது. இந்த ஆண்டு 4.5 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு அதிநவீன நூலகத்தைக் கட்டியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக, மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் உறைவிடத் தேவைகளுக்கான முழு உதவித்தொகையை அரசு வழங்கி வருகிறது. தற்போது, பி.எச்.டி.யில் முழுநேரமாக 7 மாணவர்களும், பகுதிநேரமாக 7 மாணவர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. எங்கள் மாணவர்களில் 60 பேர் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் மத்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதோடு, குடியரசுத் தலைவர் விருது வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார் அவர். 
இரா.மகாதேவன்

ADVERTISEMENT
ADVERTISEMENT