கட்டுமானத் தொழில்; இளைஞர்களுக்கு பயிற்சி!

விவசாயத்திற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலாக உள்ளது கட்டுமானத் தொழில்.
கட்டுமானத் தொழில்; இளைஞர்களுக்கு பயிற்சி!

விவசாயத்திற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய தொழிலாக உள்ளது கட்டுமானத் தொழில். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதமாகும். என்றாலும், திறமையற்ற தொழிலாளர்களால் இந்தத் தொழில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சீனா- 47%, இங்கிலாந்து- 68%, ஜெர்மனி- 74%, ஜப்பான்- 80%, தென் கொரியா- 96% என்ற அளவில் திறன்மிகு தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 4% பேர் மட்டுமே திறமையானவர்களாக உள்ளனர். மிகவேகமாக வளர்ந்து வரும் இந்தத் துறையில், அதற்கேற்ப திறமையான தொழிலாளர்கள் இல்லை.
தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) கே.பி.எம்.ஜி (Klynveld Peat Marwick Goerdeler) அறிக்கையின்படி, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைக்கு மட்டும் அடுத்த 10 ஆண்டுகளில் கூடுதல் திறன்கொண்ட 4.5 கோடி தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
ஒருபுறம் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை, மறுபுறம் வேலைவாய்ப்பின்றித் திண்டாடும் இளைஞர்கள் என தொழில்துறை ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது.
இந்த நிலையில்தான், கட்டுமானம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் திறன் மேம்பாடு குறித்து ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கக் கூட்டமைப்பு (The Confederation of Real Estate Developers Association of India - CREDAI) அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தக் கூட்டமைப்பு, 2011 - ஆம் ஆண்டில் தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து புணேவில், அதன் பயிற்சித் திட்டமான "குஷால்' மூலம் திறன் அரங்கில் நுழைந்தது. அப்போது முதல், அதன் மாநில மேம்பாட்டாளர்கள் மூலம் 24 மாநிலங்களில் உள்ள 156 நகரங்களில், கட்டுமானத் தளங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஆன்-சைட் பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது.
மேலும், நாடு முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் திறமையை வளர்க்க CREDAI இந்த அறக்கட்டளை (CCF) என்ற ஒரு தனி அமைப்பை கடந்த 2015 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கக் கூட்டமைப்பு அமைத்தது. இந்த அறக்கட்டளையும், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பிற பிரிவுகளும் இணைந்து 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தளங்களில் 1 லட்சம் தொழிலாளர்களுக்கு இதுவரை பயிற்சி அளித்துள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் (2019 - 2021) குறைந்தது 1 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களை திறன்மிக்க தொழிலாளர்களாக மாற்றுவதை CREDAI நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கக் கூட்டமைப்பு பயிற்சி, 4 வாரங்களுக்கு கட்டுமானத் தளங்களில் நடத்தப்படும் "வகுப்பறை மற்றும் வேலை பயிற்சி ‘ஆகியவற்றின் கலவையாகும். இந்தப் பயிற்சிகள் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் தேசிய தொழில்சார் தரநிலைகள் (National Occupational Standards) மற்றும் தகுதி தொகுப்பு (Qualification Packs- QP) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதில், தொழில்நுட்ப அம்சங்களைத் தவிர வகுப்பறை பயிற்சி, பயிற்சியாளர்களின் சமூக மற்றும் நடத்தை பழக்கங்களை மையமாகக் கொண்ட மென்திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
கட்டுமானத் தொழிலாளர்களை மேம்படுத்துவதற்காக, CREDAI மற்றும் PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை 2014 முதல் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 8 திறன் நிறுவனங்களுடன் சேர்ந்து, 15 மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தில்லி, ஆந்திரம், பிகார், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.

இந்த முன்முயற்சியின் கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்கள் தொழிலாளர்களின் முன்கற்றலை வலுப்படுத்துகின்றன. இதன்மூலம் முறையான, தொடர்ச்சியான வேலைவாய்ப்புகளுக்கு ஏதுவாகிறது கட்டுமானத் தொழிலாளர்களின் திறன்களை உலகளாவிய வரையறைகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
CREDAI & PNBHFL ஆகியவை இந்த 5 ஆண்டுகளில் 27,500 தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், 2019 - 20 நிதியாண்டில் 13,000 தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க CREDAI இலக்கு நிர்ணயித்துள்ளது. 
கட்டுமான வேலை, இரும்பு பட்டை வளைத்தல், சுருள் கதவு, மின்சார வேலை, வர்ணம் பூசுதல், வெல்டிங், நிர்மாணம், பிளம்பிங் ஆகிய தொழில்களில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டம், இந்திய கட்டுமான திறன் மேம்பாட்டு கவுன்சிலால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவது, திட்டச் செயல்பாடு, முன்னேற்றம் மற்றும் முடிவுகளை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. 
கட்டுமானத் துறையில், திறமையற்றவர்களுடன் ஒப்பிடுகையில், திறன்மிக்க உழைப்பு, பொருள் குறைவாக வீணாவது, நேரம் சேமிப்பு போன்றவற்றால் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கட்டுமானத் துறையில் உள்ள பயிற்சியற்ற இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவதன் மூலம் தொடர் வேலைவாய்ப்பையும், கூடுதல் ஊதியத்தையும் பெறமுடியும் என துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
- இரா.மகாதேவன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com