இளைஞர்மணி

வாழ்வின் அடிப்படை மூன்று! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

2nd Jul 2019 11:58 AM

ADVERTISEMENT

தன்னிலை உயர்த்து! 51
இந்திரலோகத்தினை ஆளும் இந்திரன் ஒரு நாள் தேவர்கள் நலமாக வாழ்வதற்காக ஒரு யாகத்தை நடத்தத் திட்டமிட்டார்.
சிறப்பு வாய்ந்த இந்த யாகத்தை நிகழ்த்த தகுதி வாய்ந்தவர் விஸ்வரூபன் என்பதறிந்து அவரை அழைத்து யாகத்தை நடத்தச் சொன்னார். விஸ்வரூபனும் இசைந்தார். யாகம் தொடர்ந்து சிறப்பாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருநாள் இந்திரன் வந்தார். தனது வஜ்ஜிராயுதத்தால் அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருந்த விஸ்வரூபனின் தலையில் ஓங்கி அடித்தார். அவரது தலைகள் மூன்றும் பறவைகளாக மாறிப் பறந்தன.
தேவர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். அப்பொழுது இந்திரன், "இந்த யாகத்தை தேவர்களுக்காக நடத்தச் சொன்னேன். ஆனால் விஸ்வ ரூபனோ யாகத்தின் மொத்த பயனையும் தானே பெறவேண்டும் என்று பேராசைப்பட்டான். தேவர்களின் பெயர்களுக்குப் பதிலாக தனது பெயரையே உச்சரித்தான். இதனை ஞான சக்தியால் அறிந்தேன். ஆதலால் தான் நான் அவனை அழித்தேன்'' என்றார். பிறரை வஞ்சிக்க நினைப்பவர்கள், விரைவில் அழிந்து விடுகின்றனர். "கெடுவான், கேடு நினைப்பான்' என்ற பழமொழிக்கேற்ப பிறருக்குத் தீங்கு நினைப்பவர்களே முதலில் கெடுதல் அடைகிறார்கள். நல்ல எண்ணங்களோடு வாழ்பவர்களே மனித வாழ்க்கைக்கு நங்கூரமாய்த் திகழ்கிறார்கள்.
எண்ணம், சொல், மற்றும் செயல்தான் ஒரு மனிதனின் உருவாக்கம். இந்த மூன்றும் நல்லதாக இருந்தால் அவை விலையுயர்ந்த ரத்தினங்களாகும்.
நல்லெண்ணம், நன்மொழி மற்றும் நன்னடத்தையுமே ஒரு மனிதனின் புனிதமான செயல்பாடுகளாகும்.
மனிதனை வழிநடத்துபவை எண்ணங்களேயாகும். அந்த எண்ணங்கள் அழுக்காகும்போது வாழ்வே இழுக்காகின்றது. எண்ணங்கள் அழகாகும் போது வாழ்வு அற்புதமாகிறது. 
"நல்லவே எண்ணல் வேண்டும்'' என்பார் மகாகவி பாரதியார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற உலகளாவிய சகோதரத்துவ சிந்தனைதான் கணியன் பூங்குன்றன் என்னும் தமிழ்க்கவிஞனை ஓர் உலகக் கவிஞனாக்கியது.
பழுதுபடாத எண்ணங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் பட்டாம்பூச்சி போல் வண்ணமயமாக்குகிறது. எண்ணங்கள் பெரும் வலிமை வாய்ந்தவை. அவை ஒற்றை நொடியில் இந்த உலகையே தாண்டிப் பறக்கும் ஆற்றல் கொண்டவை. இருப்பினும் அவை நல்லெண்ணங்களாலும், தீய எண்ணங்களாலும் கலந்து நிற்பவை. தீய எண்ணங்களைக் கழித்து, நல்லெண்ணங்களைப் பெருக்கும்போது மனம் ஒளிப்பிழம்பாய் மாறுகிறது. 
எண்ணங்கள் நாற்றாங்காலைப் போன்றவை. அவற்றில் தீய எண்ணங்கள் களைகள். அவை பிடுங்கி எறியப்பட வேண்டியவை. நல்ல எண்ணங்களே பயிர்கள். அவை வளர்க்கப்பட வேண்டும். நற்பயிர்கள் வளர்வது நாற்றங்காலுக்கு மட்டும் பயனல்ல, நாட்டிற்கே பயன். அதுபோல நல்லெண்ணம் கொண்ட மனிதர்களே நாட்டிற்கு வளமாய் அமைகின்றனர். அத்தகைய நல்லெண்ணங்களை வளர்ப்பதற்கு எவ்வித செலவும் தேவையில்லை. 
எண்ணங்களின் ஒலி வடிவமே சொல்லாகும். நம் உடலிலிருந்து மூச்சு கார்பன்டை ஆக்ûஸடாக வெளிப்படுகிறது. அது சுவாசத்தின் எதிரி. தோலிலிருந்து வெளிப்படும் வியர்வையும், கழிவாய்ச் செல்லும் சிறுநீரும், மனதின் வெளிப்பாடான கண்ணீரும் உப்புச் சுவையுடையவை. அவற்றை யாரும் விரும்புவதில்லை. எச்சிலை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் வாயிலிருந்து வெளிப்படுகின்ற நல்ல சொற்களால் மட்டுமே மனதைக் குளிர்விக்க முடியும்.
இனிய சொற்களை விளைநிலமாக மாற்றி, பிறருக்குக் கொடுக்க வேண்டியவற்றை விதையாக விதைத்து, கடுமையான சொற்களைக் களையாக்கி, நேர்மையான சொற்களை உரமாக்கி, அன்பை நீராகப் பாய்ச்சினால், அறம் என்னும் கதிர் விளையும். அதனைக் கொண்டு வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஓர் அருமையான உணவை உருவாக்க வேண்டும் என்பதை 
"இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்' 
-என்கிறது அறநெறிச்சாரம். 
பிறருக்குப் பொருளைக் கொடுத்தால் பணம் செலவாகும். ஆனால், நல்ல சொற்களை உதிர்ப்பதற்கும், ஆக்கப்பூர்வமாகப் பேசுவதற்கும் எந்தப் பணமும் தேவையில்லை. நல்ல சொற்கள் உருவாவதற்கு நல்ல மனமிருந்தால் போதும்.
சொற்களால் ஒரு மனிதனின் மனதைப் புண்படுத்தவோ, உற்சாகப்படுத்தவோ முடியும். நல்ல சொற்களில் நிறைந்திருக்கிறது உலகம். அவற்றை நல்லவற்றிற்காக மட்டுமே பயன்படுத்துதல் நலம். சாக்ரடீûஸ ஒரு ஞானி சந்தித்து, "நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்'' என்றார். அதற்கு சாக்ரடீஸ், "தாங்கள் கூறுவது உண்மையா?'' என்றார். "இல்லை, பிறர் கூறக் கேட்டேன்'' என்றார் ஞானி. அவரிடம் இரண்டாவது கேள்வியாக, "நீங்கள் கூறும் செய்தியால் நமக்கு நன்மை ஏதும் உண்டாகுமா?'' என்றார். வந்திருந்த ஞானியிடம் பதிலில்லை. "உண்மையுமில்லாத, நன்மையும் தராதவற்றைப் பேசுவதில் எந்த உபயோகமும் இல்லை. "இவ்வுலகில் பேசப்படுவதற்கு விலை மதிப்பற்ற எத்தனையே நிகழ்வுகள் இருக்கின்றன. எனவே, முக்கியமில்லாத நிகழ்வுகளுக்காக நாம் சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் அவசியமில்லை'' என்றார். 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' 
என்பார் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர். நல்ல சொற்கள் பழங்களைப் போல இனிப்பானவை. கடுமையான சொற்கள் கசக்கும் காய்களைப் போன்றவை. பழங்கள் இருக்கும்போது காய்களை எவரும் உண்ணுவதில்லை. அதே போல் நல்ல சொற்கள் இருக்கும் போது கடுமையான சொற்களை, ஏன் பயன்படுத்தவேண்டும் என்பது தான் திருவள்ளுவரின் கேள்வி.
எண்ணங்கள் மொழியாகி அதன்பின்பு செயல் வடிவம் பெறுகிறது. எண்ணங்கள் செயல்வடிவம் பெறுகின்றபோது அது கல்லில் செதுக்கிய சிலைபோல் ஒவ்வொருவரின் மனதிலும் நிலைபெறுகிறது. செயல்களே ஒரு மனிதனை அடையாளப்படுத்துகின்றன. 
ஒரு கோடை மாதத்தில் ஏசு கிறிஸ்துவும், அவரது சீடர்களும் ஜெருசலேத்திலிருந்து ஜெரிக்கோ நோக்கிப் பயணம் சென்றார்கள். அப்போது சாலையில் ஒரு குதிரையின் லாடம் ஒன்றிருந்தது. இயேசு கிறிஸ்து அவரது சீடரான பீட்டரிடம் அதை எடுக்கக் சொன்னார். ஆனால், பீட்டரின் மனதிலே இந்த சிறிய குதிரை லாடத்தினை எடுத்துச் செல்வதினால் பெரிய நன்மை ஒன்றும் ஏற்படப்போவதில்லை என நினைத்தார். அதனால் இயேசு கிறிஸ்து சொல்லியும் லாடத்தினை எடுக்கவில்லை. இதனைக் கவனித்த இயேசு அக்குதிரை லாடத்தினை எடுத்து தனது அங்கியில் போட்டுக்கொண்டார்.
வழியில் தென்பட்ட கிராமத்தில் குதிரை லாடத்தினைக் கொடுத்தார். 
மக்கள் அதற்குச் சமமாக நிறைய செர்ரி பழங்களைத் தந்தனர். பின்னர் அக்கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்கு ஒரு மலையைக் கடந்து பயணித்தனர். அப்போது இயேசு தன்னிடமிருந்து செர்ரி பழங்கள் ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொடுத்தார். அச்செயல்பாட்டின் மூலம் தனக்குக் கிடைக்கும் சிறு பொருளைக் கொண்டும், பிறருக்கு உதவ முடியும் என்பதை உணர்ந்தான் சீடர் பீட்டர். ஒரு செயல் சிறிது அல்லது பெரிது என்பது அச்செயலின் தன்மையைப் பொறுத்து அல்ல. அதன் விளைவைப் பொறுத்தே அமைகின்றன. சிறிய செயல்கள் கூட மிகவும் ஈடுபாடோடு செயல்படும் போது அருஞ்செயலாகிவிடுவது இயல்பாகும்.
எண்ணமும், சொல்லும், நடத்தையும் தன்னைப் பற்றியே இருக்கின்ற மனிதரால் வளர்ந்து விட முடியும். ஆனால், எவரையும் வளர்த்து விட முடியாது. அதேவேளையில், மனிதனின் சிந்தனையும், மொழியும், செயலும் சகமனிதர்களின் வளர்ச்சிக்குத் துணையாயிருந்தால் அது நம் மனித சமூகம் இவ்வுலகில் தழைத்தோங்கி நிற்க வழிவகை செய்யும். 
ஜென் ஞானிகளில் ஒருவரான சீகோவைக் காண ஓர் இளைஞன் வந்தான். அவரிடம், "சுவாமி! என்னை தாங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார். "ஏன்?'' என்ற குருவின் கேள்விக்கு, " நானும் தங்களைப்போல் பிறருக்கு உதவியாக வாழவேண்டுமென்று விரும்புகிறேன்'' என்றான். அவ்விளைஞனிடம், "அப்படியானால் அருகில் இருக்கும் கிணற்றில் என்ன தெரிகிறது?' எனப் பார்'' என்றார்.
கிணற்றை எட்டிப் பார்த்துவிட்டு வந்த இளைஞன், "சுவாமி! எந்த கலங்கலும் இல்லாத தெள்ளிய நீரில் எனது முகம் தெரிந்தது'' என்றான். அதனைக் கேட்டதும் ஞானி சிரித்தார். 
இளைஞனுக்கு ஞானியின் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. ஞானி அந்த இளைஞனிடம், "மீண்டும் அந்தக் கிணற்றை தெளிவாகப் பார்த்துவிட்டு வா'' என்றார். இளைஞன் வெகுநேரம் அக்கிணற்றினைப் பார்த்துவிட்டுத் தெளிவோடு வந்தான். "சுவாமி! இப்பொழுது அக்கிணற்றில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடுவதைக் கண்டேன். கிணற்று நீரின் அடியில் பல வண்ணக் கூழாங்கற்களையும் கண்டேன்'' என்றான். அந்த இளைஞனை ஆரத் தழுவிக்கொண்ட குரு, "தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவனால் இந்த உலகில் வேறு எவருக்கும் உதவி செய்ய முடியாது. உலகத்தில் பல நிகழ்வுகளைக் காண்பவரால் மட்டுமே மற்றவர்களுக்கு உதவியாக வாழ முடியும். அவர் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகும் இந்த உலகத்தாரால் நினைக்கப்படுவார்'' என்றார். 
வாழ்வின் அடிப்படை மூன்று!
நல்வழியில் வாழ்வதே நன்று!
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT