இளைஞர்மணி

பொறியியல் படிப்பில் உள்ள வேலை வாய்ப்புகள்

2nd Jul 2019 12:18 PM

ADVERTISEMENT

தற்போது பொறியியல் படிப்புக்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை எனக்கூறப்பட்டாலும், தரமான பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது நடைபெறும் சேர்க்கையில், சிவில் , இயந்திரவியல்(மெக்கானிக்கல்) ஆகிய இரு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்வதில் போதிய ஆர்வம் காட்ட வில்லை என பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கூறிவருகிறார்கள்.
 பொதுவாக பொறியியல் படிப்பு என்றால் அதன் அடிப்படையான பிரிவுகள் சிவில் மற்றும் இயந்திரவியல்துறைதான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படிப்புகளைப் படித்தால் சுய வேலைவாய்ப்புக்கள் மிக அதிகமாக உள்ளன.
 கடந்த காலங்களில் சிவில் படித்த மாணவர்கள் மிகச்சிறந்த முறையில் அடுக்குமாடி கட்டடங்கள், அணைகள், பாலங்கள், நான்கு மற்றும் ஆறுவழிச்சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து சாதனை படைத்துள்ளனர். கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழகத்தில் இனி வரும் காலங்களில், அரசு பதிவு பெற்ற பொறியாளர்கள் மட்டுமே கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட வேண்டும் என அரசு கடந்த பிப்ரவரிமாதம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சிவில் இன்ஜினியரிங் படித்த பொறியாளர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து சான்று பெற வேண்டும். இதன் மூலம் சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு சுய தொழில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணையின் மூலம் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி பொருளீட்டலாம்.
 கடந்த சில ஆண்டுகளாக கட்டுமானத்துறையானது நவீனமுறையில் கட்டடங்களை வடிவமைத்தல், பூகம்பம் மற்றும் இயற்கை இடர்பாடுகளைத் தாங்கும் சக்தி கொண்ட கட்டடங்களை அமைத்தல் , அதிவிரைவு கட்டுமானம், அதிக வலுவுடன் நீடித்த கட்டமைப்பு மற்றும் பழைய வலுவிழந்த கட்டடங்களைப் பழுது பார்த்தல் போன்ற துறைகளில் வளர்ச்சி பெற்று வருகிறது. இதன் காரணமாக கட்டடகலைத்துறைக்கு புதிய பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை கட்டுமானத்துறையில் இந்தியா வளர்ச்சி பெற்று வருவதால் வேலைவாய்புக்களும் அதிகரித்து வருகின்றன. தமிழகம் மற்றும் மத்திய அரசு துறைகளில் ரயில்வே பாலங்கள், பாலங்கள், அணுமின்நிலையம் விரிவுபடுத்துதல், நில அளவை, கட்டடம் கட்ட திட்டமிடுதல், வரைதல், டிசைன் மென்பொருள், மண்பரிசோதனை என நிறைய பணிகள் உள்ளன. இதனால் சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.
 அடுத்ததாக இயந்திரவியல் துறையைப் பார்ப்போம். வளர்ந்து வரும் உலக பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்தியாவில் நவீனமயமாக்கப்பட்ட தொழில் நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அத்தகைய தொழில் நுட்பத்தில் இயந்திரவியல்துறை
 முக்கிய பங்காற்றி வருகிறது. இத்துறை மாணவர்கள் தொழில் நுட்பத்துறை மாற்றத்திற்கு ஏற்றவாரு தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நவீனமயமாக்கப்பட்ட ஆற்றல், தொழிற்சாலைகளில் தானியக்கம், செயற்கை நுண்ணறிவு, வலையமைப்புகள், ட்ரோன்கள் வரும் காலங்களில் இத்துறையில் முக்கிய பங்காற்ற உள்ளன. இந்தியாவில் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம், தாவரங்கலிளிருந்து பயோ டீசல் தயாரிப்பது, எடை குறைந்த இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பது உள்ளிட்டவற்றை ஆட்டோ மொபைல் துறையில் செயல்படுத்துவது என வளர்ச்சி பெற்று வருகிறது. நவீன மயமாக்கப்பட்ட விவசாயக்கருவிகள் தயாரிக்கப்பட வேண்டும். எனவே இயந்திரவியல்துறை படித்த மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மின்சாரம் தயாரிப்பு, அனல் மின்சாரம் தயாரிப்பு, நீர்மின்சக்தி, ஆகிய துறைகளுக்கு இயந்திரவியல் படித்த மாணவர்கள் தேவைப்படுகிறார்கள். மின் மற்றும் மின்னணுவியல்துறை, மின் மற்றும் கருவியியல்துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை ஆகியவற்றை இணைந்து புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிவது , கப்பல்கட்டும் துறை, வானூர்தி கட்டும் துறை உள்ளிட்டவற்றில் இயந்திரவியல்துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் விண்வெளி ஆய்வு மையம் மேலைநாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. செயற்கைக் கோள் மற்றும் ராக்கெட் தயாரிப்பில் இயந்திரவியல்துறை வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். நவீன தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து சமுதாயப்பணியாற்ற இந்த படிப்பு ஒரு சிறந்த படிப்பாகும். சமீப காலங்களில் புதிய பொருள்கள் கண்டுபிடிப்பில் மிகவும் நானோ தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
 காலத்தைக் கடந்து என்றும் நிலைத்து நிற்கும் சிவில் இன்ஜினியரிங் மற்றும் இயந்திரவியல் துறையை மாணவர்கள் தேர்வு செய்து படித்து வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
 ச.பாலசுந்தரராஜ்
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT