பாதை தெளிவானால் பயணம் எளிதாகும்!

எத்தனையோ படித்த இளைஞர்கள் தங்கள் முன்னால் எத்தனையோ பாதைகள் இருந்தாலும் அந்த பாதைகளில் எதைத் தேர்வு செய்வது என தீர்மானிக்காமலேயே காலத்தை வீணாக்கி வருகின்றனர்
பாதை தெளிவானால் பயணம் எளிதாகும்!

எத்தனையோ படித்த இளைஞர்கள் தங்கள் முன்னால் எத்தனையோ பாதைகள் இருந்தாலும் அந்த பாதைகளில் எதைத் தேர்வு செய்வது என தீர்மானிக்காமலேயே காலத்தை வீணாக்கி வருகின்றனர். இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 13 வயதிலேயே சம்பாதிப்பதில் காட்டிய ஆர்வத்தால் இன்று 3000 வாடிக்கையாளர்களுடன் கூடிய நிறுவனத்தை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார்.
அந்த சாதனை இளைஞரின் பெயர் அனுராக் பாட்டியா. கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதில் இவருக்கு பங்குச் சந்தையில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், எதுவும் தெரியாமல் ஆர்வத்தை மட்டுமே வைத்து பணத்தை அவர் முதலீடு செய்து கையைச் சுட்டுக் கொள்ள விரும்பவில்லை. மாறாக பங்குச் சந்தை நிபுணர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறார். ஊடகங்கள் மூலம் பங்குச் சந்தை குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டிருக்கிறார். அதன் பின்னரே, தனது பெற்றோர் தந்த சேமிப்பு பணத்தைக் கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். விவரம் தெரிந்து அவர் செய்த முதலீடு எல்லாம் லாபம் ஈட்டித் தந்துள்ளது. 
நிதி மேலாண்மையில் கொண்ட ஆர்வம் காரணமாக அனுராக், பல்வேறு நிதி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்துள்ளார். தொடர்ந்து நிதி மேலாண்மையைத் தெரிந்து கொள்வதற்காக பல்கலைக்கழகம் ஒன்றில் நிதிப் பிரிவில் பட்டம் பெற்றார். மேலும் நிதி கணிதத்தில் (Financial Mathematics) முதுகலை ஆராய்ச்சியிலும் அவர் ஈடுபட்டார். பின்னர் அமேசான் இந்தியாவில், ரிஸ்க் அனலிஸ்டாக பணியில் சேர்ந்தார். 
இருப்பினும், அவரது நிதி மேலாண்மைக் கனவு குறையவில்லை. 23 ஆவது வயதில், அமேசானில் பணியாற்றிக் கொண்டே மினான்ஸ் (Minance) என்ற நிதி மேலாண்மை அமைப்பைத் தொடங்கினார். பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், ஒரே மாதத்தில் 50 வாடிக்கையாளர்கள் இணைந்தனர். தான் பணியாற்றி வந்த நிறுவனத்தின் பணி நேரம் முடிந்ததும், தனது மினான்ஸ் நிறுவனத்திற்கான பணிகளை அவர் செய்யத் தொடங்கினார். அப்போது அவருடன், அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து உதவி செய்தனர். 
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அனுராக், அமேசான் பணியை விட்டு விலகி முழு நேரமாக மினான்ஸ் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். 2015-ஆம் ஆண்டு அவரது நண்பர்கள் ஆதிராஜ்சிங், சர்பசிஷ்பாசு இருவரும் அனுராக்குடன் இணைந்து மினான்ஸிற்காக பணியாற்றத் தொடங்கினர். இன்று மினான்ஸ் 3,000 வாடிக்கையாளர்களுடன் சுயநிதியில் இயங்கும் லாபகரமான நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் முக்கியமாக முதலீடு தொடர்பான ஆலோசனைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. எதில் முதலீடு செய்தால் சிறப்பான வருவாய் கிடைக்கும் என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தி, அதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணத்தையும் பெற்றுக் கொள்கிறது. பல்வேறு நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துதல், அவர்களுக்குத் தொடர்ச்சியான வருவாய் கிடைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றிக் கூறுதல், வளர்ந்து வரும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது பற்றிய தகவல்களை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் உட்பட பல்வேறு நிதி தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. விரைவில் புனே, ஹைதராபாத், சென்னை ஆகிய பகுதிகளில் சாட்டிலைட் அலுவலகங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் அனுராக். 
எந்தவொரு தொழிலிலும் ஈடுபடுவதற்கு முன்பு அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அதில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு அனுராக்கின் வெற்றியே முன்னுதாரணம். 
- வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com