இளைஞர்மணி

பெயர் சூட்டிய பெரியார்- கரோலஸ் லினேயஸ்! மு.கலிய பெருமாள்

24th Dec 2019 12:15 PM

ADVERTISEMENT

சென்ற இதழ் தொடர்ச்சி...
லினேயசின் இயற்கை நூலறிவும் ஆர்வமும் ரூட்பெக்கை மிகவும் கவர்ந்தன. லினேயஸ் எதிர்காலத்தில் ஒரு சிறந்த இயற்கை நூல் அறிஞராகத் திகழ்வார் என்று அவர் அடிக்கடி கூறியது லினேயசுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததுடன் அவரது அறிவுச் சுடருக்கு அவ்வப்போது தூண்டுகோலாகவும் இருந்து வந்தது. ரூட்பெக் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதெல்லாம் இளமையில் தாம் செய்த லாப்லாந்து (Lapland 
expedition) பயணத்தைப் பற்றிய செய்திகளைச் சுவைபடவும் மகிழ்ச்சி ஊட்டும் வகையிலும் கூறுவார். பயணத்தின் போது அவர் கண்ட கவின்மிக்க கலைமான்கள், வெண்ணொளி பரப்பும் பனிக்கட்டிகள், அவை உருகிப் பெருக்கெடுத்தோடும் பளிங்கு நீர் அருவிகள், பல்வகைப் பாசிகள், காளான்கள், ஃபிர் (Fir) மரங்கள், இவை போன்ற பல காட்சிகளை விளக்கும் பாங்கு மாணவர்களை மெய்மறக்கச் செய்யும். கற்பிக்கிறோம் என்ற எண்ணமின்றி கதைபோலவே பாடங்களைச் சொல்லும் ஆற்றல் பெற்றவர் ரூட்பெக். எனவே, அவர் உரையைக் கேட்ட மாணவர்களுக்கு அவர் சென்றது போல் தாமும் அறிவியல் பயணம் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியதில் வியப்பில்லையல்லவா?
ஆசிரியர்ப் பணிபுரியும் பெரியவர்கள் வெறும் பாடத்தையே சொல்லிக் கொடுக்காமல், மேலும், மேலும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தை, உணர்வை அறிவுத் தாகத்தை மாணவர்கள் உள்ளத்தில் பதியுமாறு கற்பிக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையை அவர் அன்றே கடைப்பிடித்தார். லினேயஸ் ஓர் இயற்கை நூல் அறிஞராக ஆவதற்கு ரூட்பெக்கின் முயற்சியும் ஊக்கமும் பெருந்துணை புரிந்தன.
பல்கலைக்கழகப் படிப்பு முடிந்தது. இயற்கை நூலில் லினேயசுக்கு இருந்த அறிவைக் கண்ட ரூட்பெக் லினேயசிடம், ஓர் அறிவியல் பயணத்துக்கு (Scientific expedition) அனுப்பும் படி ஸ்வீடன் நாட்டு அரசினர் கழகத்திற்கு (Royal  Society of Sweeden) விண்ணப்பிக்கும்படி சொன்னார். பேராசிரியரின் விருப்பத்திற்கு இணங்க லினேயஸ் அக்கழகத்திற்கு மனுச் செய்து கொண்டார். அவருடைய மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தவை நகைச்சுவையை எழுப்பக் கூடியவையாக இருந்தன. அந்த அறிவியல் பயணத்தில் கலந்து கொள்வதற்கு மற்றத் தகுதிகளோடு அவருக்கு இயற்கை நூலறிவு இருந்தது. அதுமட்டுமல்லாமல், அந்த அறிவியல் பயணத்தைச் செய்து முடிக்க காடோ, மலையோ, காற்றோ எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் செல்வதற்கும், நீண்ட தொலைவுப் பயணத்திற்கும். ஏற்ற உடல் உரமும், கால்வலிமையும் தமக்கு உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளத்தைத் திறந்து எழுதிய அவரது எழுத்துகள் அவருடைய கால்களை விட வலிமையுடையனவாக இருந்தன. அவரது அறிவினாலோ, அவரது கால்களின் வலிமை கண்டோ அல்லது இரண்டினாலோ ஈர்க்கப்பட்ட அரசினர் கழகத்தினர் அவரது அறிவியல் பயணத்திற்கு இசைவு தந்தனர். அதன்படி 1732-ஆம் ஆண்டு மே திங்கள் 12-ஆம் நாள் பகல் 11 மணி அளவில் லினேயஸ் தமது அறிவியல் பயணத்தைத் தொடங்கினார். கால்நடையாகவே அறிவு தேடிப் புறப்பட்ட லினேயஸ் உட்சலா நகரத்திலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டார். அறிவுப் பசியோடு புறப்பட்ட லினேயஸ் தமது பயணத்திற்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் எடுத்துச் சென்றார்.
நடந்து சென்றே ஏறக்குறைய 1000 கல் தொலைவு தமது பயணத்தைச் செய்தார் லினேயஸ். கரடுமுரடான பாதைகள், மேடுபள்ளம் சூழ்ந்த மலைகள், செப்பனிடாத சாலைகள் இவை எல்லாம் அவர் கால்களின் வலிமைக்கு அஞ்சி வழி கொடுத்தன என்று சொல்லும் வகையில், இரவு பகல் என்று பாராமல் பல ஊர்களையும், நகரங்களையும், நாடுகளையும் கடந்து சென்றார். ஆங்காங்கு தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் தமது ஆராய்ச்சிக்கு உறுதுணையாகச் சேர்த்துக் கொண்டார் அவர். வழியில் எதிர்பாராத பல தொல்லைகளும் துன்பங்களும் அவரைச் சூழ்ந்தன உயிருக்கே கேடு விளைவிக்கச் கூடிய நிகழ்ச்சிகளும் ஏற்பட்டன. ஒருமுறை லாப்லாந்துக்காரர் ஒருவர் இவர் மீது ஐயங்கொண்டு இவரைத் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குறி தவறிய குண்டுகள் இவருக்கு உயிப்பிச்சை அளித்தன. மற்றொரு முறை, ஒருநாள் இரவில் பெருக்கெடுத்தோடும் ஆற்றை ஒரு கட்டுமரத்தின் உதவியால் கடந்து சென்றார். வெள்ளத்தின் வேகத்தைத் தாங்காத அக்கட்டுமரம் நடுஆற்றில் கட்டவிழ்ந்து அவரைக் கைவிட்டது. ஆற்று வெள்ளத்தில் பெரும் அவதிக்குள்ளான அவர் எப்படியோ தப்பிப் பிழைத்தார். அறிவு என்ன, அவ்வளவு எளிதில் கிடைத்து விடக் கூடியதா?
ஐந்து திங்கள் கழித்து, தமக்குப் பிரியாவிடை கொடுத்துனுப்பிய உப்சலா நகரத்தைக் கண்டார் லினேயஸ். அரசினர் கழகம் அவரை அன்போடு வரவேற்றது. சென்ற பயணத்தைக் குறித்தும், கண்ட கவின்மிக்கக் காட்சிகளைப் பற்றியும் அவர் அரசினர் கழகத்திற்கு எடுத்துச் சொன்னார். எழுத வேண்டியவற்றை எழுதிக் கொடுத்தார். லாப்லாந்து மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் பழக்க வழக்கங்களைப் பற்றியும் ஸ்வீடன் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொன்னார். லாப்லாந்தியர்களைப் பற்றி ஸ்வீடன் நாட்டுமக்களுக்கு அதற்கு முன் எதுவுமே தெரியாமல் இருந்தது. இந்த நாட்டு மக்களின் உடைகள், அவர்கள் குடிசைகள், அவர்கள் செல்வமாகிய கலைமான்கள் இவற்றை எல்லாம் எடுத்துச் சொன்னார். பர்க் ஜூரிலுள்ள (parkejour) மீன் பண்ணையைப் பற்றியும் விளக்கினார்.
லினேயஸ் திரும்பி வந்தபோது தன்னுடன் 23 வகை உலர்த்தப் பெற்ற செடிகளைக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த விந்தையான ஒரு வகைப் புல் எக்காலத்திலும் அழியாததாகும்.
இவர் கொண்டு வந்த மாதிரிப் பொருள்கள் லாப்லாந்தைப் பற்றிய செய்திகள். இவை எல்லாவற்றையும் விட அறிவியல் உலகத்திற்கு இவர் செய்த பணி இவரை உலகம் உள்ளவரை நிலைபெறச் செய்திருக்கின்றது. பல்வேறு செடிகளையும் விலங்குகளையும் வகைப்படுத்தி அமைக்கும் முறையைக் காண்பதே அவருடைய பயணத்தின் நோக்கமாகும். உப்சலா திரும்பி - மூன்றாண்டுகள் கழித்து, 1735- இல் லினேயஸ் தாம் கண்ட முறைகள் "இயற்கை அமைப்பு முறை' (systema natural) என்ற தலைப்பில் வெளியிட்டார். இயற்கையில் காணும் உயிர் பொருள்களுக்கு குறிப்பாக செடியினங்களுக்கு எவ்வாறு பெயரிடுவது என்பதை அதில் விளக்கியிருந்தார். அதுவரை பெருங்குழப்பத்தில் கலங்கிக் கொண்டிருந்த அறிவியல் உலகத்திற்கு அந்த நூல் அருமருந்தாகியது. அவர் அன்று வகுத்த வழியிலேயே இன்று உயிரினங்களின் பெயர் சூட்டுவிழா நடைபெறுகின்றது.
பன்னிரண்டே பக்கங்கள் கொண்ட அந்தச் சிறுநூல் அறிவுலகம் முழுவதையும் கவர்ந்தது. எல்லா இடங்களிலும் லினேயசைப் பற்றியும் அவர் நூலைப் பற்றியுமே பேச்சாக இருந்தது. அச்சிறுநூல் அவர் புகழ்பாடியது. அரும் பெரும் உழைப்பால் அழியாநிலை அடைந்தார் லினேயஸ்.
லினேயஸ் முறைப்படி ஒவ்வொரு செடியும், விலங்கும் இரட்டை லத்தீன் (Double  Latin) பெயரினைப் பெற்றிருக்கும். இரண்டு சொற்களில் முதல் சொல் அந்தசெடி எந்த இனத்தைச் சேர்ந்தது (genus) என்றும், இரண்டாவது சொல் எந்த வகையைச் (species) சேர்ந்தது என்றும் குறிக்கும். இனத்தைக் குறிக்கும் முதல் சொல் பெரிய எழுத்தில் (Capital letter) தொடங்கும். எடுத்துக்காட்டாக, " வெள்ளைத் தங்கம்' (white gold) என்று அழைக்கப்படும் பருத்தி (cotton) இனத்தில் (genus) 20 வகைகள் (spices) இருக்கின்றன. பருத்தி இனத்தைப் பொதுவாகக் குறிக்கக் "காசிப்பியம்' (gossypium) என்ற சொல்லைப் பயன் படுத்தினார். கம்போடியா பருத்தியைக் குறிக்க வேண்டுமானால் காசிப்பியம் இர்சுடம் (gossypium  hirsutum) என்றும் கருங்கண்ணியைக் காசிப்பியம் ஆர்போரியம் (gossypium arporeuim) என்றும் உப்பம் பருத்தியை காசிப்பியம் கெர்பேசியம் (Gossypium herbaceum) என்றும், பார்பான் (Bourbon) பருத்தியைக் காசிப்பியம் பார்படன்ஸ் (gossypium barbadens) என்றும் குறித்துள்ளார். 
இதே போலவே ஒரே இனத்தைச் சேர்ந்த உளுந்து, பயிறு, நரிப்பயிறு இவற்றில் உளுந்தை (black gram) பேசியோலஸ் முங்கோ (phoseolus mungo) என்றும் , பயிற்றை (Green gram) பேசியோலஸ் ரேடியேடஸ் (Phaseolus Radiatus) என்றும், நரிப்பயிற்றை பேசியோலஸ் க்ரிலோபஸ் (phaseolus  krilobus) என்றும் வழங்குகிறார்கள்.
இலை, தண்டு, பூ இவற்றின் அமைப்பில் ஒருமைப்பாடு கொண்டு உருளைக்கிழங்கு, மணத்தக்காளி, சுண்டைக்காய், கத்தரி முதலியவற்றைக் சொலானம் (solanum) என்ற இனத்தில் சேர்த்திருகின்றனர். ஆனால், உருளைக்கிழங்கைச் சொலானம் டியூபரோஸம் (Solanum tuberosum) என்றும், மணத்தக்காளியைச் சொலானம் நைக்ரம் (Solanum nigrum) என்றும், சுண்டைக்காயைச் சொலானம் டார்வம் (Solanum torvum) என்றும் கத்தரிக்காயைச் சொலானம் மெலஞ்சீனா (Solanum melongena) என்றும் குறிக்கிறார்கள்.
(அடுத்த இதழில்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT