சுமார் 40- 50 ஆண்டுகளுக்கு முன்பு 8 ஆம் வகுப்புவரை படித்திருந்தாலே கல்வி கற்றவர் என்ற வரையறைக்குள் ஒருவர் வந்துவிடுவார். பிறகு அது 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 என்றும், நாளடைவில் ஒரு சாதாரண வேலைக்குக் கூட குறைந்தபட்சம் ஓர் இளநிலைப் பட்டம் தேவை என்ற அளவுக்கு மாறியது. ஆனால், இன்று வெறும் இளநிலைப் பட்டம் மட்டுமே ஒருவரை கல்வி கற்றவர் என்ற நிலைக்கும், வேலைக்கான தகுதிக்கும் உயர்த்திவிடுவதில்லை.
அதற்கு அப்பால் முதுநிலைக் கல்வி, தத்துவக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி, தர்க்க அறிவு, விவாத சிந்தனை, படைப்பாற்றல், முன் பயிற்சி என ஒருவரின் கற்றல் தற்போது பல்வேறு படிகளில் விரிந்துகொண்டே செல்கிறது. அப்படியிருக்க, கற்றலுக்கும், வேலைத் தகுதிக்கும் வயது நிர்ணயிப்பது சற்றே சிரமம் என்றாலும், குறைந்தது 25 வயதை எட்டவேண்டியதிருக்கும்.
எனினும், ஒருவரின் ஆர்வமும், உழைப்பும் இத்தகைய எல்லைகளை உடைத்துவிடும் என்பதற்கு உதாரணம்தான் ஹசன் சஃபின். முதுநிலை பட்ட மாணவருக்கான 22 வயதில் நாட்டின் முதல் இளம் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி, தன்னுடைய 24 ஆவது வயதில் மாவட்ட காவல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்திருக்கிறார்.
குஜராத் மாநிலம், பழன்பூர் மாவட்டம், கனோதர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்தபா ஹசன்- நசீம்பானு தம்பதியினர். அங்குள்ள வைரச் சுரங்கப் பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள். இவர்கள் மகன்தான் ஹசன் சஃபின். மிகக் குறைந்த வருவாயைக் கொண்ட குடும்பம். பெற்றோர் தங்கள் குழந்தைக்கு உணவளிக்க போதுமான அளவு சம்பாதித்தாலும், சஃபின் வெறும் வயிற்றில் தூங்கச் சென்ற நாள்களும் இருந்தன.
அவர் சிறு வயதிலேயே படிப்பில் படுசுட்டி. பத்தாம் வகுப்பு தேர்வில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 பயின்றபோது அவரது மதிப்பெண்களைப் பார்த்து, சஃபின் பள்ளி முதல்வர் பள்ளிக் கட்டணம் ரூ. 80 ஆயிரத்தை தாராள மனதுடன் தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில், சஃபின் தந்தைக்கு வைரச் சுரங்கப் பணியும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஒரு தேநீர்க் கடை தொடங்கி குடும்பச் செலவை ஈடுகட்டினார். சஃபின் கல்விச் செலவுக்குக் கூடுதல் பணம் தேவைப்பட்டபோது, அவரது தாயார் நசீம்பானு உள்ளூர் உணவகங்களுக்கும், திருமண அரங்குகளுக்கும் நூற்றுக்கணக்கான சப்பாத்திகளை செய்துகொடுத்து அதை ஈடுசெய்தார்.
இதுகுறித்து சஃபின் கூறுகையில், "நான் சமையலறையில் படித்தபோது குளிர்ச்சியான காலை வேளையில் கூட என் தாய் வியர்வையில் நனைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன்'' என்கிறார்.
இந்த நிலையில், அவர் சூரத் நகரில் இருக்கும் சர்தார் வல்லபபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி) கடந்த 2016 - இல் பி.டெக். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முடித்தார். அவரது படிப்புக்காக சக மாணவர்கள், ஆசிரியர்கள் உதவினர். குறிப்பாக, சஃபின் பெற்றோர் அவரது கல்விக்காக காட்டிய கடின உழைப்பைப் போல, உள்ளூர் தொழிலதிபர் ஹுசைன் பொல்ரா, அவரது மனைவி ரெய்னா பொல்ரா ஆகியோரும் சஃபினுக்கு சரியான நேரத்தில் உதவினர். பொல்ரா குடும்பத்தினர், சஃபின் தில்லியில் 2 ஆண்டுகள் தங்கி சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குத் தயாராவதற்குப் பயிற்சிக் கட்டணம், அவரது பயணம் மற்றும் தங்கும் செலவுகளுக்காக தங்கள் சொந்த பணம் ரூ. 3.5 லட்சத்தை செலவழித்தனர்.
"என் கனவுகளை நிறைவேற்ற மக்கள் என் கையைப் பிடித்து கதவுகளைத் திறந்துவிட்டார்கள். சமுதாயத்தின் தயவு இல்லாவிட்டால், நான் ஒருபோதும் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது'' என்கிறார் சஃபின்.
2017 - இல் சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த அவர், ஜி.எஸ்.-3 ஆவது தாள் தேர்வின்போது ஒரு பெரிய விபத்தில் சிக்கினாலும், தேர்வுக்குப் பிறகு சென்று சிகிச்சை பெற்றதோடு, தைரியமாக அடுத்தடுத்த தேர்வுகளையும் எதிர்கொண்டார் சஃபின். இதேபோல, பல தடைகளைத் தாண்டி கடந்த 2018 -இல் அகில இந்திய தரவரிசையில் 570 -ஆவது இடத்தைப் பெற்று 22 வயதில் நாட்டின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். அப்போது நடைபெற்ற ஆளுமைச் சோதனையில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் 2-ஆவது இடத்தைப் பெற்றார். பயிற்சிக்குப் பிறகு தற்போது (2019, டிசம்பர் 23) ஜாம்நகர் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தற்போதைக்கு அவர் இந்திய காவல் சேவை (ஐ.பி.எஸ்) பணியில் சேர்ந்தாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது நீண்டகாலக் கனவை நிறைவேற்ற மீண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுவேன் என்றும் கூறியுள்ளார்.
சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குப் பிறகு, தனது ஓய்வு நேரத்தில் கனோதர் கிராமத்தின் ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்பித்த சஃபினுக்கு, ஒரு அதிநவீன குடியிருப்புப் பள்ளியைத் தொடங்குவதே கனவு. சஃபின் தனது வருவாயிலிருந்து ஏழை குழந்தைகளுக்காக ஒரு அதிநவீன குடியிருப்புப் பள்ளியைத் திறக்க விரும்புவதாகவும், இந்த சமுதாயத்திடம் இருந்து தான் பெற்றதை திருப்பிச் செலுத்த விரும்புவதாகவும் அவரது தாய் நசீம்பானு தெரிவித்துள்ளார்.
- இரா.மகாதேவன்