தகவல்களைப் பகிரும் ஆப்களில் உலகத்திலேயே முதலிடத்தில் உள்ளது வாட்ஸ் ஆப். உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேரும், இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பேரும் வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்துகிறார்கள். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப பல்வேறு புதிய சேவைகளைப் பயன்பாட்டாளர்களுக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
எனினும், தகவல் திருட்டு, வைரஸ் போன்றவை அவ்வப்போது வாட்ஸ் ஆப்பில் தோன்றுகின்றன. தற்போது வாட்ஸ் ஆப்பில் புதிய "பக்' (வைரஸ்) பரவி வருகிறது. குரூப் (குழு) பயன்பாட்டாளர்களை மையமாக வைத்து பரவி வரும் இந்த வைரஸ், வாட்ஸ் ஆப் குரூப்பில் புகுந்துவிட்டால் அந்த மொபைல்போனில் உள்ள வாட்ஸ் ஆப் செயல்பாட்டையே முடக்கிவிடுகிறது. மீண்டும் வாட்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்வதுதான் ஓரே வழி. அப்படிச் செய்தாலும், எந்தக் குழுவில் வைரஸ் தாக்குகிறதோ அந்தக் குழுவில் உள்ள சாட் தகவல்கள் அனைத்தும் அழிந்துபோய்விடும். மீண்டும் அந்தக் குழுவே இருக்காது.
தற்போது ஒரு குரூப்பில் அதிகபட்சமாக 256 பேர் வரை இருக்க வாட்ஸ் ஆப் அனுமதி அளிக்கிறது. இந்த வைரûஸ அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களால் மட்டும் பரப்ப முடியும் என்று செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. வாட் ஆப் வெப்பைப் பயன்படுத்தி இந்த வைரஸ் குரூப்பில் பரப்பப்படுவதாகவும், உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தடுக்கவே இதுபோன்ற வைரஸ்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸுக்கான தீர்வை வாட்ஸ் ஆப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் அப்டேட் செய்யாதவர்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் பயன்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
-அ.சர்ஃப்ராஸ்