இளைஞர்மணி

நீர் மேலாண்மை: சிங்கப்பூர் ஒரு முன் மாதிரி! விஞ்ஞானி வெ. பொன்ராஜ்(அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

3rd Dec 2019 12:52 PM

ADVERTISEMENT

மிச்சமெல்லாம் உச்சம் தொடு45

டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்த போது, சிங்கப்பூருக்கு அரசுமுறை பயணம் 2006 -ஆம் ஆண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை மேற்கொண்டார். சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசியன் லூங் - ஐச் சந்தித்தோம். பயணத்தில் ராஜவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
அப்போது டாக்டர் கலாம் சிங்கப்பூர் பிரதமரிடம் என்னை இவர் எனது தொழில்நுட்ப இயக்குநர் என்று அறிமுகப்படுத்தினார், மறுநாள் பார்க்கவிருக்கும் கழிவு நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் விதத்தைப் பற்றியும், சிங்கப்பூரின் கழிவுநீர் சாக்கடைத் திட்டம் பற்றியும் உங்களிடம் சில கேள்விகளை கேட்க பொன்ராஜ் விரும்புகிறார் என்று என்னை பிரதமரிடம் டாக்டர் கலாம் மாட்டிவிட்டுவிட்டார். சிங்கப்பூர் பிரதமர் எங்களிடம் இதைப்பற்றி விளக்கினார். 
ஏன் என்னை டாக்டர் கலாம் மாட்டிவிட்டார் என்றால், சிங்கப்பூருக்குப் போவதற்கு முன்பு நாங்கள் பயண விவரங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் போது, கழிவு நீர் சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் மற்றும் கழிவு நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தைப் பற்றி விவாதித்தோம். 40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரும் சென்னை மாதிரி குப்பையும், சாக்கடையும் கொண்ட நகரமாகத்தான் இருந்தது.
இதை எப்படி மாற்றினார்கள் என்று விவாதித்துக்கொண்டிருந்தோம். இப்படிப்பட்ட தலை சிறந்த நகரக் கட்டமைப்பை எப்படி உருவாக்கினார்கள் 
என்பதை பார்த்து அறிவதும் எங்கள் பயணத் திட்டத்தில் இருந்தது.
அப்போது டாக்டர் கலாம் என்னிடம் கேட்டார்: "அங்கே போய் கழிவு நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை நீ குடிப்பாயா?'' என்று. "எனக்கு அதை நினைத்தால் அருவருப்பாக இருக்கும் சார், அதை எப்படி சார் குடிக்க முடியும். நீங்கள் வேண்டுமென்றால் குடியுங்கள். நான் மாட்டேன் சார்'' என்று சொன்னேன். சிரித்து விட்டு சொன்னார், "நீ வா, உன்னை அங்கே வந்து வைத்துக் கொள்கிறேன்'' என்றார். 
அதை உண்மையாக்குவது போல சிங்கப்பூர் பிரதமரிடம் அறிமுகப்படுத்தி வைத்து சிங்கப்பூரின் மழைநீர் வடிகால், கழிவு நீர் வடிகால், கழிவு நீரை குடிநீராக்கும் திட்டம் பற்றியெல்லாம் கேட்க வைத்துவிட்டார். 
சிங்கப்பூர் பிரதமர், 45 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் எப்படி இருந்தது என்றும், சிங்கப்பூரை உருவாக்கிய தந்தையும் 30 ஆண்டுகாலம் சிங்கப்பூரை கட்டியமைத்த பிரதமர் லீ குவான் யூ எப்படி சிங்கப்பூரை தனது தலைமையின் கீழ் "மூன்றாம் உலக நாட்டில்' இருந்து ஒரே தலைமுறையில் "முதல் உலக நாடாக' மாற்றினார் என்பதையும் விளக்கினார். 
மறுநாள் எங்களைக் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக்கும் நிலையத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் அழைத்துச் சென்றார். போனவுடன் 3 தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தார். சிங்கப்பூர் பிரதமர் அந்த பாட்டிலைத் திறந்து குடிக்க ஆரம்பித்தார். டாக்டர் கலாம் பாட்டிலைத் திறந்து கொண்டே என்னைப் பார்த்து புன்சிரிப்பு சிரித்தார். நான் உடனடியாக பாட்டிலை திறந்து குடிநீரைக் குடித்துவிட்டேன். குடித்தவுடன் கேட்டார், "தண்ணீர் நன்றாக இருக்கிறதா?'' என்று. "ஆம்... சார்'' என்று தலையாட்டினேன். எனக்கும் அவருக்கும் தானே தெரியும் நான் குடிக்க மாட்டேன் என்று சவால் விட்டதும், இப்போது குடித்து விட்டேன் என்பதும். 
ஆசியாவின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரவளம் உள்ள நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும், ஆனால் அதற்கு நம்பகமான தொடர்ந்து கிடைக்கும் நீர்ஆதாரம் இல்லை. அதன் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான தண்ணீர் இல்லை. சிங்கப்பூர் உலகின் சிறந்த மருத்துவம் மற்றும் கல்வியைக்கொடுக்கும் நாடுகளில் ஒன்றாகும். மேலும் உலகின் தூய்மையான மற்றும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக இருப்பது மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் நற்பெயரை உருவாக்கியது. அதற்கான காரணிகள் அனைத்தும் சிங்கப்பூரின் அனைத்து கட்டமைப்புகளிலும், கட்டடக் கலைகளிலும் பிரதிபலிக்கின்றன - திகைப்பூட்டும் வானளாவிய கட்டடங்கள் மற்றும் ஆடம்பரமான உயரமான கட்டடங்களைக் கொண்ட தீவு நகரம் சிங்கப்பூர். 
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் இறக்குமதி செய்யும் நீர் அதன் மொத்த விநியோகத்தில் 30 சதவீதமாகும். ஆண்டுக்கு 2.4 மீட்டர் மழைப்பொழிவுடன் - உலக சராசரி 1 மீட்டர் மட்டுமே - மழை என்பது சிங்கப்பூரின் மற்றொரு முக்கியமான நீர் ஆதாரமாகும். சிங்கப்பூர் முதலில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு, மனித கழிவு மற்றும் சாக்கடை கட்டமைப்பை தனித்தனியாக ஒன்றோடொன்று கலக்காத வகையில் அமைத்தார்கள். ஒவ்வோர் அடுக்கு மாடி கட்டடத்தில் இருந்தும், மழைநீரை மழைநீர் வடிகால் கட்டமைப்பில் அழகாக வரச் செய்தார்கள். எங்கும் குப்பை இல்லை. அதன் அடைப்பும் இல்லை. மழை பெய்தவுடன் எங்கும் மழை நீர் தேங்குவது கிடையாது. மழை நீர், நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு பின்பு அனைத்தும் பக்கத்தில் இருக்கும் நீர் நிலைகளைச் சென்று அடைய சிமிண்ட் கால்வாய்கள். எனவே 30 சதவீதம் தண்ணீர் இந்த தீவின் 17 நீர்த்தேக்கங்களிலிருந்து வருகின்றன. ஆனால் மேலும் நீர்த்தேக்கங்களைத் தோண்டுவது சாத்தியமில்லை. ஏனெனில் சிங்கப்பூரில் நிலம் குறைவு; எனவே விலை அதிகம். 
பெரிய நாடுகளில் இருக்கும் நீர் நிலைகள், தேக்கங்கள் சிங்கப்பூரில் இல்லை. இது மிகவும் சிறிய நாடு. அதற்கு நீரைச் சேமிக்க வழிகள் குறைவு. எனவே அதற்குப் பதிலாக, அதிகாரிகளுக்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தை அரசு உருவாக்கியது. சிங்கப்பூரின் நீர் விநியோகத்தில் கடல்
நீரைக் குடிநீராக்குவது 10 சதவிகிதம் மட்டுமே - அதுவும் அதிக செலவில்.
இதனால் 2003 -ஆம் ஆண்டில் "நியூ வாட்டர்" (NEWater) என்ற திட்டத்தை சிங்கப்பூர் அரசு மீண்டும் தொடங்கியது. இதில் கழிவுநீரை நன்றாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக மறுசுழற்சி செய்வது, செலவு மிகவும் குறைந்த மற்றும் சூழலுக்கு ஏற்ற தீர்வை வழங்குகிறது. இந்த முயற்சி ஏற்கெனவே நாட்டின் நீர் தேவையின் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது. மேலும் சிங்கப்பூர் தண்ணீர் தேவையின் அளவை 2060 - ஆம் ஆண்டில் 55%ஐ இந்த முயற்சி பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
சிங்கப்பூர் முழுவதும் ஐந்து சுத்திகரிப்பு நிலையங்கள் இப்போது ஒரு நாளைக்கு 500 மில்லியன் லிட்டருக்கு மேல் நீரை இத்திட்டம் மூலம் உற்பத்தி செய்கின்றன. இன்று, சிங்கப்பூரில் சுமார் ஐந்து சதவீத குழாய் நீர் நியூ வாட்டர் மூலம் வருகிறது. வறண்ட மாதங்களில், சிங்கப்பூரின் மழைநீர் நீர்த்தேக்கங்களில் இருப்புக்கள் விரைவாக வீழ்ச்சியடைவதால், கிரேவாட்டருடன் இந்த தண்ணீரை விநியோகம் செய்கிறார்கள். இந்த அதி சுத்தமான உயர்தர மறுசுழற்சி நீர், சிங்கப்பூரில் ஒரு வெற்றிகரமான மாநகர நிர்வாகத்தின் தலைசிறந்த ஆட்சிமுறையைப் பிரதிபலிக்கிறது. 
கழிவுநீரை குடிநீரில் மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் புதியதல்ல. பெரிய துகள்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களைப் பிரித்தெடுக்கப்பட்டு கழிவுநீர் வடிகட்டப்படுகிறது. பின்னர், தலைகீழ் சவ்வூடுபரவல் மூலம், மீண்டும் தண்ணீர் செம்மைப்படுத்தப்படுகிறது. மேலும் அசுத்தங்களைப் பிரித்து, நோயை உண்டாக்கும் கிருமிகளிடம் இருந்து விடுபடுகின்றன. இறுதியாக, புற ஊதா கிருமி நீக்கம் என்பது நீர் உண்மையிலேயே தூய்மையானது மற்றும் பயன்படுத்தத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தப் பயன்படுகிறது.
அண்டை நாடான மலேசியாவுடனான அரசாங்கத்தின் 100 ஆண்டு நீர் ஒப்பந்தம் 2061- இல் காலாவதியாகும். மேலும் அது நடக்கும் முன் தண்ணீர் தேவைக்கு சிங்கப்பூர் அரசு தனது சொந்த காலில் நிற்பதற்கான விநியோகத்தை தானே அமைக்க விரும்புகிறது. நமது அரசுகள் நதி நீர் ஒப்பந்தங்கள் காலியாகும் வரை சும்மா இருந்து விட்டு, பின்பு நீதிமன்றத்தை நாடி, அதன் பின்பு 30 ஆண்டுகள் போராடி தீர்ப்பைப் பெற்றும் காவேரியில் வெள்ளம் வந்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில் இந்தியாவின் ஆட்சி முறை நிர்வாகம் இருக்கிறது. தொலைநோக்குப் பார்வைத் திட்டங்களை நீர் மேலாண்மையில் முன்னெடுக்கவில்லை. எனவே தான் டாக்டர் அப்துல் கலாம் ஊருணிக்கு உயிர் கொடுப்போம் என்றார். கிராமப்புற மறுமலர்ச்சிக்கு "புராதிட்டம்' கொடுத்தார். நதி நீர் இணைப்பு மற்றும் அதி திறன் நீர் வழிச்சாலைதிட்டங்களை முன்னெடுக்க திட்டங்கள் கொடுத்தார். 
சிங்கப்பூரின் நீர் திட்டம் முழு ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கும், இந்தியாவிற்கும் ஏன் தமிழ்நாட்டிற்கும் ஒரு முக்கியமான மாதிரியாக மாறியுள்ளது. நீர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க ஓர் ஒற்றை நீர் ஆதாரம் இனி போதாது என்பதைத்தான் இது நமக்கு விளக்குகிறது. 
நீர் மேலாண்மைக்கு பல்வேறு வழிகளில் தீர்வை காணவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
சென்னைக்கு மட்டுமே ஈடான ஒரு நகரம் சிங்கப்பூர். ஆனால் அதன் பொருளாதார பலம் ஒட்டுமொத்த தமிழகத்தை விட 2 மடங்கு அதிகம் என்பதை நாம் உணர வேண்டும். 
அதற்குக் காரணம் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நேர்மையான ஒற்றைத் தலைவர் லீ குவான் யூ ஆவார். 
50 ஆண்டுகளுக்கு முன்பு குப்பையும், சாக்கடையும், மழை நீர் தேங்கி நிற்கும் அழுக்கான சென்னையைப்போல இருந்த சிங்கப்பூரை இன்றைக்கு தனியான மழைநீர் வடிகால் கட்டமைப்பு, சிக்கலில்லா சாக்கடை, குப்பை தேங்காத சிங்கார சிங்கப்பூராக மாற்ற ஒரு லீ குவான் யூவால் முடியும் என்றால் சென்னையை கட்டமைக்க முடியுமா, முடியாதா? 
ஒப்பற்ற தலைமைப்பண்புள்ள இளைஞர்களால் முடியும் என்று நான் நம்புகிறேன். 
ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ரூ 10,000 கோடி செலவழித்தும் சிங்கார சென்னை ஆக்க முடியாது; எழில்மிகு சென்னையாக்க முடியாது; சீர்மிகு சென்னையும் ஆக்கமுடியாது என்ற நிலையே தொடர்கிறது. 
2010 முதல் 2015 வரை 5 வருடத்தில் தமிழ்நாட்டில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு (நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு) வரி வருமானத்திலிருந்தும், மத்திய, மாநில அரசு நிதியில் இருந்தும் ரூ. 50,825 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணம் ஒட்டுமொத்தமாகச் செலவழித்து முடித்து பின்பு, கூடுதலாக ரூ. 4008 கோடி செலவு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆக ஒட்டு மொத்த செலவு ரூ. 54,833 கோடி. இவ்வளவு பணத்தைச் செலவு செய்தும் நிலை என்ன? செலவழித்து நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளை குப்பை கேந்திரங்களாக மாற்றி குப்பை தொட்டி இருந்தும் உபயோகம் இல்லாமல் குப்பையைத் தெருவில் கொட்டி, ஊர்புற ஒதுக்குப்புறத்தில், நீர் நிலைகளில் குப்பைக் கிடங்கை உருவாக்கி, நெகிழி மலையாக்கி, வியாதிகளின் உற்பத்தி கேந்திரமாக்கி, மழை நீரைச் சேமிக்க கூட வழியில்லாமல் தெருவெங்கும் சிமிண்ட் ரோடு போட்டு, மழை நீர் வடிகால் கட்டி அதில் சாக்கடையைக் கலக்க விட்டு, ஒட்டு மொத்த சாக்கடையையும் ஆற்றில் கலக்க விட்டு, அனைத்து நீர் நிலைகளையும், ஆறுகளையும், ஓடைகளையும் முடை நாற்றமெடுத்த சாக்கடைகளாக மாற்றியிருப்பதுதான் இன்றைய நிலை. 
மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர் (Defecto Head) தான் மாநகராட்சிக்கும், நகராட்சிக்கும் உண்மையான சட்டப்படியான தலைவர். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேயர் அல்லது நகராட்சி தலைவர் என்பவர் (Ceremonial Head) வெறும் அலங்காரப் பதவி வகிக்ககூடியவர் மட்டுமே. எனவே மேயரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எப்படி தேர்ந்தெடுத்தாலும் மக்களுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பது தான் இன்றைய நிலைமை. இந்த இரட்டை அதிகாரமுறை ஒழிக்கப்பட வேண்டும். 
மக்களுக்கு உண்மையாகவே நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் நிற்கும் ஒரு சிலரைக் கண்டுபிடித்து, அனைத்து வார்டுகளிலும் அவர்களிடம் உறுதிமொழி வாங்கிய பிறகு அவர்களைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, நேர்மையான தலைவர்களுக்கு ஆதரவு தரக்கூடிய நேர்மையான வார்டு கவுன்சிலர்கள் கிடைப்பார்கள். அந்த நகராட்சி, மாநகராட்சிகள் மட்டும் ஏதோ ஒரு சில வழிகளில் சிறப்படையும். 
இதுவரை கிராம மற்றும் நகர்புற உள்ளாட்சிகளில் மக்கள் பணம் கோடி, கோடியாக கொட்டிக்கொடுத்தும் வளர்ச்சி வரவில்லை. சரி ஒரு வேளை மக்கள் நல்லவர்களை, நேர்மையானவர்களை, திறமையானவர்களை, மக்கள் சேவையை மகேசன் சேவையாக செய்ய நினைப்பவர்களை தேர்ந்தெடுக்க முடிவெடுத்துவிட்டால் இந்தப் பஞ்சாயத்து தேர்தல் மூலம்- டாக்டர் அப்துல் கலாம் கொடுத்த "புரா' திட்டத்தின் மூலம் காந்தி கனவு கண்ட கிராம சுயராஜ்யத்தை, சுத்தமான சுகாதாரமான நகரங்களை எப்படி உருவாக்குவது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம். 
உங்கள் கனவுகளை, இலட்சியங்களை 
பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்:
vponraj@live.com  
(தொடரும்)
 

ADVERTISEMENT
ADVERTISEMENT