இளைஞர்மணி

முதியோர்களுக்கான மின் வணிகம்! தொடங்கிய இளைஞர்கள்!

27th Aug 2019 05:15 PM |  - வி.குமாரமுருகன் 

ADVERTISEMENT

நவநாகரீக இளையதலைமுறையினரை கவர்வதற்கான பல்வேறு வணிக, தொழில் வழிமுறைகள் பின்பற்றப்படும்  இக்காலத்தில்,  முதியவர்களுக்காக மின் வணிகத்தைத்  தொடங்கி  வெற்றிக்கனியை பறித்துள்ளனர் இரண்டு இளைஞர்கள். 

புனேவைச் சேர்ந்த தபன்மிஷ்ரா, ஆயுஷ் அகர்வால் ஆகிய இரண்டு இளைஞர்கள்தான் அந்த மின் வணிகத்தைத் தொடங்கியவர்கள்.  

இவர்கள் வேறு மாதிரி  சிந்தித்ததன் விளைவுதான், "சீனியாரிட்டி' என்ற மின்வணிகத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. அவரது வயதான அம்மா, அவருக்குத் தேவையான பல்வேறு பொருள்களை பல்வேறு கடைகளில் வாங்குவதைக் கண்ட ஆயுஷுக்கு உதித்ததுதான் இந்த சிந்தனை.    
2050-ஆம் ஆண்டில் 34 கோடிக்கும் அதிகமானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. சிறந்த சுகாதார பராமரிப்பு, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் போன்ற காரணங்களால் முதியோர்களின் ஆயுட்காலம் நீடித்துள்ளது. இந்தியாவில் தற்போது 120 மில்லியனுக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் உள்ளனர். இவர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர், மேலும், ஆரோக்கியத்திற்காகவும் செலவு செய்ய விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கென்று சிறப்பு மிக்க மின் வணிகம் எதுவும் இல்லை.  

""மின்வணிக நிறுவனத்தை அதன் செயல்பாடுகளும், லாஜிஸ்டிக்ஸ் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும் என்பதால் அந்தப் பகுதியில் அனுபவம் மிக்கவர் தேவைப்பட்டார். அதனால் அத்துறையில் நிபுணரான தபன்மிஸ்ராவுடன் இணைந்து இதைத் தொடங்கினோம்.  இதற்கு முன்பு யாரும் கவனம் செலுத்தாத பகுதியில் முற்றிலும் புதிய பிரிவுகளின் கீழ் எங்களது பிராண்ட் செயல்படுகிறது. எனவே எவையெல்லாம் முதியவர்களுக்குத் தேவை என்பதைப் புரிந்து கொள்ள தொடர்ந்து ஆழமாக ஆராய்ந்து, முதியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஷாப்பிங் தளத்தை உருவாக்கினோம். 

ADVERTISEMENT

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதில், மருத்துவம், ஆரோக்கியம், சமையலறைப் பொருட்கள், பொழுதுபோக்கு விஷயங்கள் என பல்வேறு பிரிவு
களின் கீழ் 6,000 பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வலைத்தளம் மட்டுமின்றி, பல்வேறு நகரங்களில் ஆப்-லைன் வர்த்தகத்தையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர். 

முதியோர்களைப் பராமரிப்பது இளைஞர்கள்தான் என்ற நிலையில், அவர்களுக்கு சேவையளிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் அவர்களே தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர். தினமும் 1,000 முதல் 1,300 ஆர்டர்களைக் கையாள்கிறோம். ஒரு மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எங்களது வலைதளத்தைப் பார்வையிடுகின்றனர்'' என்கிறார் ஆயுஷ்.

""பல லட்சம் முதியோர்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் நாங்கள் சில லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே சென்றடைந்துள்ளோம். எனவே வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை, தொழில்நுட்பத் தளம் போன்றவற்றில் முதலீடு செய்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தயாரிப்புகளை வழங்க விரும்புகிறோம்'' என்று கூறும் இவர்கள் விரைவில், முதியவர்களுக்கான பிரத்யேக செயலியையும்  அறிமுகம் செய்யவுள்ளனர். 

வாய்ப்புகளை உருவாக்கினால் வாழ்க்கை நம் வசமாகும் என்ற சிந்தனை இளைஞர்கள் மத்தியில் உருவாகி விட்டால் நிச்சயம் வெற்றி அவர்கள் கையில்தான். 

ADVERTISEMENT
ADVERTISEMENT