இளைஞர்மணி

மாணவர்களின் அறிவியல் சூரிய கிரகண பயணம்!

27th Aug 2019 12:00 AM | - இரா.மகாதேவன்

ADVERTISEMENT

 

ஸ்பேஸ் இந்தியா (SPACE India) உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்புகளில் ஒன்று. இது இந்திய மக்களிடையே தீவிர விஞ்ஞான ஆர்வத்தை வளர்ப்பதையும், வானவியலைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஹெலியோடிஸி (Heliodyssey)  என்பது ஸ்பேஸ் இந்தியாவின் மாணவர் அறிவியல் ஆய்வுப் பயண நிகழ்ச்சியாகும். இது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் "அறிவியல் சூரிய கிரகண பயணத்தில்' பங்கேற்க வாய்ப்பளிக்கிறது. அதோடு, உலகெங்கிலும் நிகழும் சூரிய கிரகணங்களை ஆய்வு செய்ய வானியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

இது மிகச்சிறந்த வானியல், விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி அனுபவ கற்றல் திட்டமாக இருந்து, மாணவர்களிடம் STEM திறன்களை ஊக்குவிப்பதோடு, கிரகணங்களைக் கண்டுணர்தல், பகுப்பாய்வு செய்தல், பதிவு செய்தல் ஆகியவற்றின் மூலம் கற்றலை மேம்படுத்துகிறது. 

ADVERTISEMENT

வரும் டிசம்பர் 26 - ஆம் தேதி மத்திய கிழக்கு, ஆசியா, பசிபிக் நாடுகளில் வருடாந்திர சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

இந்த கிரகணம் சவூதி அரேபியா, கத்தார், UAE, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தொடங்கி, தொடர்ந்து அமெரிக்காவின் வடக்கு கடல் தீவுகளைக் கடந்து செல்லவுள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழ் தசாப்தத்தில் இந்தியாவிற்கு மிக முக்கியமான கிரகணங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. இதையொட்டி, அறிவியல் ஆர்வமிக்க குழுவினர் உலகெங்கிலும் சூரிய கிரகணங்களைப் பார்த்து ஆய்வு செய்வதற்காக பேரார்வத்துடன் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

ஸ்பேஸ் இந்தியாவின் இதுபோன்றதொரு பயணத்தில் ஆன்லைன் ஹெலியோடிஸி தேர்வில் வெற்றிபெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். இந்தப் பயணத்திற்கு ஸ்பேஸ் இந்தியா முழுமையாக நிதியளிக்கிறது. இந்தப் பயணத்தில் பங்கேற்கும் மாணவர்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள முக்கிய இடங்களிலிருந்து கிரகணத்தைக் கண்டு,  அவற்றைப் பதிவுசெய்து, பகுப்பாய்வு செய்வார்கள். மேலும், 2020 - ஆம் ஆண்டில் இந்த கிரகணத்தின் முடிவுகளையும் வெளியிடுவார்கள். 

சூரிய கிரகணங்களை ஆய்வு செய்வதற்காக ஸ்பேஸ் இந்தியாவின் குழுக்கள் ஹாங்காங், சீனா, ரஷியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு ஹெலியோடிஸி பயணங்களை மேற்கொண்டுள்ளன. இந்த ஆண்டு ஹெலியோடிஸி- 2019 பயணம், வரும் டிசம்பர் மாதம் 26 -ஆம் தேதி நிகழவுள்ள வருடாந்திர சூரிய கிரகணத்தை ஓமன் நாட்டிலிருந்தும், கேரளத்தின் செருவத்தூரிலிருந்தும் காண்பதற்காக மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்பேஸ் இந்தியாவால் நடத்தப்படும் விண்வெளி ஹெலியோடிஸி டெஸ்ட் 2019- இல் வெற்றிபெறும் 6-12 ஆம் வகுப்பு மாணவர்களும், இந்தப் பயணக் குழுவில் இடம் பெறவுள்ளனர். ஓமனுக்கான குழுவில் ஸ்பேஸ் நிபுணர்களுடன், நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்களும், கேரளத்தின் செருவத்தூருக்கான பயண அணியில் ஸ்பேஸ் நிபுணர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களும் இடம் பெறுவர்.

ஹெலியோடிஸி தேர்வுக்கான பதிவு இணையம் வழியாக ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறுகிறது. அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான இந்திய மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வில் பங்கேற்க பதிவுசெய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 990 செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு, பதிவைத் திருத்தவோ, ரத்து செய்யவோ முடியாது.

தேர்வு, தேசிய அளவிலான ஆன்லைன் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் அடிப்படையில் ஆங்கிலத்தில் இருக்கும். 6 -8, 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என தேர்வு இருபிரிவாக நடைபெறும். 2 பிரிவுக்குமான பாடத்திட்டங்கள் (Syllabus for Heliodyssey 2019) இதற்கான இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறிப்பாக, பொது அறிவியல், கணிதம், அண்டவியல், வானியல், பிரபல வானியலாளர்கள் மற்றும் ஒளியியல் ஆகிய தலைப்புகளில் இருக்கும். இணையத் தேர்வு வரும் அக்டோபர் 6 -ஆம் தேதி நடைபெறும். இதன் முடிவுகள் அக்டோபர் 10 -ஆம் தேதி அறிவிக்கப்படும். தேர்வுக்குப் பதிவுசெய்த மாணவர்கள் ஸ்பேஸ் இந்தியா இணையதளத்தில் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளில் பங்கேற்கலாம்.

தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் நவம்பர் முதல் வாரத்தில் ஒருநாள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். பயணம் குறித்து கலந்துரையாடுவது, தங்களுக்கான அறிவியல் கருவிகளைப் பெறுவது, சக மாணவர்கள் மற்றும் பயணத்திட்டம் குறித்து அறிவது, அறிவியல் சோதனைகள் மற்றும் உபகரணங்கள் குறித்து பயிற்சி பெறுவது இதன் நோக்கம். இதற்கான நாள் மற்றும் இடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும். ஓமனுக்கு செல்ல தேர்வுபெறும் மாணவர்கள் கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும். சூரிய கிரகணம் டிசம்பர் 26 -ஆம் தேதி நிகழ்வதால், டிசம்பர் 22 -ஆம் தேதி பயணம் தொடங்கும். 

இந்தப் பயணத்தின் போது, ஜூம் லென்ஸ்கள், மேகங்களுக்கு மேலாக பறக்கவிடப்படும் பலூன்கள் மற்றும் ட்ரோன்கள் வழியாக கிரகணம், வெவ்வேறு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில், புவியின் சுற்றுப்புற வெப்பநிலை, மண்ணின் வெப்பநிலை மற்றும் கிரகணத்தின் போது ஈரப்பதம் போன்ற சுற்றுப்புற இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம், உள்ளூர் சூழலில் கிரகணங்களின் பாதிப்பை புரிந்துகொள்ளும் பொருட்டு பதிவு செய்யப்படும்.

கிரகணத்தின்போது, விலங்குகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படும் (உயிரி இயற்பியல் பரிசோதனை). இளம் விலங்குகள், இரவுநேரங்கள் மற்றும் பறவைகள் மீதும் அந்த ஆய்வு இருக்கும். பின்ஹோல், தொலைநோக்கிகள், சூரிய நோக்கிகள், கேமரா படங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி கிரகணம் காணப்படும். 

பயிற்சி பெற்ற ஓவியர்கள் "ரிங் ஆஃப் ஃபயர்' எனப்படும் மோதிர வடிவில் நெருப்புக் கோளமாகக் காணப்படும் சூரிய கிரகணத்தை ஓவியமாகப் பதிவுசெய்வர். இந்த பயணத்தின்போது விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களால் பதிவுசெய்யப்பட்ட தரவுகளும், கணிதரீதியாகவும், புகழ்பெற்ற மென்பொருள்கள் மற்றும் வலைதளங்களால் கணிக்கப்பட்ட தரவுகளும் ஒப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு www.heliodyssey.org. Gu  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT