பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று விட்டாலே, முழுமையான கல்வியைப் பெற்று விட்டதாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது உண்மையில்லை. தான் கற்ற கல்வியுடன் தொடர்புடையவற்றைத் தொடர்ந்து தேடித் தெரிந்து கொள்வது கூடுதல் தகுதியைத் தரும். மேலும், நம் தேவைக்கேற்ப புதிய நுட்பங்களை அறிந்து, அவற்றைப் பயன்படுத்தி நம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், நம் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் எந்த உயர்வையும் பெற முடியாமலே போய்விடும். வாழ்க்கையில் தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருப்பதற்கு ஓர் இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் Science, Technology, and Math, HUMANITIES, LANGUAGES, RESOURCES எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் எனும் தலைப்பின் கீழ் அறிவியல், கணிதம், சமூக அறிவியல்கள், கணினி அறிவியல், விலங்குகள் மற்றும் இயற்கை எனும் துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
மானுடவியல் எனும் தலைப்பின் கீழ் வரலாறு மற்றும் பண்பாடு, விஷுவல் ஆர்ட்ஸ், இலக்கியம், ஆங்கிலம், புவியியல், மெய்யியல், Issues எனும் துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இதோபோன்று, மொழிகள், ஆதார வளங்கள் தலைப்புகளின் கீழும் பல துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு துணைத் தலைப்புகளின் கீழ் துணைத் தலைப்புடன் தொடர்புடைய உள் தலைப்புகளும், ஒவ்வொரு உள் தலைப்புகளின் கீழும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் படத்துடன் கூடிய தகவல் குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் குறிப்புகளில் சொடுக்கினால், அது குறித்த முழுத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
முதன்மைத் தலைப்புகளுக்கேற்ப துணைத் தலைப்புகளில் இடம் பெற்றிருக்கும் செய்திகள் அடங்கியிருக்கின்றன. உதாரணமாக மொழிகள் என்ற முதன்மைத் தலைப்பைச் சொடுக்கினால், அதில் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச், இத்தாலி, ஜப்பானிய மொழி, மாண்டரின், ரஷியன்ஆகிய துணைத் தலைப்புகள் உள்ளன. இந்த மொழிகளில் ஒருவர் எதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறாரோ அந்த மொழியைச் சொடுக்கினால், அந்த மொழியைக் கற்றுக் கொள்ள நிறைய கட்டுரைகள், இலக்கணங்கள், உரையாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. வீடியோ வகுப்புகளும் உள்ளன. ஒரு மொழியைப் புதிதாகக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள், ஏற்கெனவே தெரிந்த மொழியைக் கூடுதலாகக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் மொழி என்ற முதன்மைத் தலைப்பில் இடம் பெற்றுள்ள செய்திகள் உள்ளன.
இந்தத் தளம் பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பல்வேறு அரிய செய்திகளை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தளத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் https://www.thoughtco.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.