வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

விளையாட்டில் சாதனை...விருதுநகரிலிருந்து பூடானுக்கு!

Published: 13th August 2019 09:50 AM

மாணவர்கள் விளையாடினால் படிப்பு வீணாகிவிடும் என தற்போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைக்கும் காலமாக இருக்கிறது. அதுவும் ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்பு மாணவர்கள் நூறு சதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி சபையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கைப்பந்து விளையாட்டில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்காக வெளிநாட்டிற்கு விளையாடச் சென்றார்கள் என்பது வியப்புக்குரிய செய்திதான்.
 அப்பள்ளியைச் சேர்ந்த எஸ்.கிருபாகரன், எஸ்.பிரகாஷ் (பிளஸ் 2), எஸ்.மோகன்ராஜ், எஸ்.ராஜேஸ், எம்.காளீஸ்வரன் (பிளஸ் 1), எஸ்.சிரஞ்சீவி (9ஆம் வகுப்பு) ஆகியோர்தான் அந்த சாதனை மாணவர்கள். கைப்பந்து விளையாட 11 பேர் தேவை. இதில் ஆறு பேர் ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும்.
 இது குறித்து பள்ளியின் தாளாளர் ஏ.ஞானசேகரன் கூறியதாவது:
 "எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறிந்து அந்த விளையாட்டில் பயிற்சி அளிப்போம். கைப்பந்து விளையாட்டில் இந்த ஆறு மாணவர்களுக்கும் ஆர்வம் உள்ளதைக் கண்டறித்து முரளி என்ற பயிற்சியாளரை சிறப்புப் பயிற்சி அளிக்க நியமித்தோம். தொடர்ந்து மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, சரிவிகித உணவு வழங்கப்பட்டதால், பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளிலும், மண்டல அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.
 தமிழ்மாநில கிராமப்புற இளைஞர் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு கழகம், 2019 ஏப்ரல் 24-ஆம் தேதி 5 -ஆவது மாநில அளவிலான கிராமப்புற இளைஞர் விளையாட்டு போட்டிகளை கருர் மாவட்டம் தரகம்பட்டியில் நடத்தியது.
 இதில் எங்கள் பள்ளி மாணவர்கள் ஆறு பேரும் 17 வயதுக்குள்பட்டோர் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றனர். இதன் மூலம், தேசியப் போட்டிக்கு தகுதி பெற்று தமிழ்நாடு அணியில்இடம் பிடித்தனர். தேசியப் போட்டி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 2019 மே 31 -ஆம் தேதி முதல், ஜூன் 2 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியைக் "கிராமப்புற விளையாட்டுக்கள் மற்றும் இந்திய விளையாட்டுக்கழகம்' நடத்தியது. இதில் இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநில அணியை தமிழ்நாடு அணி வென்று தங்கப்பதக்கம் பெற்றது. இதில் எங்கள் பள்ளி மாணர்கள் ஆறு பேரும் பங்கேற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். இதையடுத்து எங்கள் பள்ளி மாணவர்கள் இந்திய அணியில் விளையாட இடம் பிடித்தனர். பின்னர் இந்தியா-நேபால் விளையாட்டுக்கழகம் சார்பில் ஜூன் 25-ஆம் தேதி காட்மண்டுவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இதில் சிறப்பாக விளையாடிய எஸ்.கிருபாகரன் மற்றும் எஸ். மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
 ஆசிய அளவிலான 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கைப்பந்து விளையாட்டில், விளையாட இந்த மாணவர்கள் தகுதி பெற்றதையடுத்து, "தமிழ்நாடு கிராமபுற இளைஞர் விளையாட்டுக்கள் மற்றும் விளையாட்டுக்கழகம்' மாணவர்களைப் பாராட்டியது.
 ஆசிய அளவிலான போட்டி பூடான் நாட்டில் நடந்தது. அந்தப் போட்டியிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கு கொண்டது எங்களுக்குப் பெருமையாக உள்ளது'' என்றார் ஞானசேகரன்.
 - ச.பாலசுந்தரராஜ்
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இஸ்ரோவின் விண்வெளி கண்காட்சி!
படிச்சுட்டா...பெரிய ஆளா?
வேலை...வேலை...வேலை...
சொற்கள்!
வருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்!