திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஆராய்ச்சி மாணவர்களுக்கு அளப்பரிய வாய்ப்புகள்!

DIN | Published: 06th August 2019 12:15 PM

2021, ஜூலை முதல் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி பட்டம் கட்டாயமாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்துள்ளது. 
அதேநேரத்தில், கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிஎச்டி ஆய்வறிக்கையின் தரம் குறித்து மறுஆய்வு செய்ய பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) திட்டமிட்டுள்ளது. நாட்டில் ஆராய்ச்சியின் தரம் குறைவது மற்றும் பிஎச்டி ஆய்வறிக்கைகள் பிறவற்றின் நகலாக இருப்பது குறித்து பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட கவலையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், சர்வதேச அளவில் சிறந்த முதல் 500 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கலை, வர்த்தகம், மனிதநேயம், கல்வி, சட்டம், சமூக அறிவியல், அறிவியல், மொழிகள், நூலக அறிவியல், உடற்கல்வி, பத்திரிகை, பொதுமக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாக நேரடி பணி நியமனம் பெற தகுதியானவர்கள் என பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு தேவையான சதவீதத்துடன் பிஎச்டி பட்டம் பெற்றவர்களும் நேரடி பணி நியமனத்துக்குத் தகுதியுடையவர்கள் என்றாலும், சர்வதேச பல்கலைக்கழகங்களில் பிஎச்டி முடித்தவர்களுக்கு, இந்திய மாணவர்களின் முதுநிலை திட்டம் தொடர்பான குறைந்தபட்ச தேவைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சர்வதேச பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், நேர்காணலில் அவர்கள் பங்கேற்று தங்கள் செயல்திறனை நிரூபிக்க வேண்டும்.
இந்த நிலையில், சிறந்த 200 சர்வதேச பல்கலைக்கழகங்களில் பிஎச்டி பட்டம் பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெறும் இந்திய மாணவர்கள், மீண்டும் இந்தியாவுக்கு வந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஏதாவதொரு உயர்கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும்.
40 வயதிற்கு உட்பட்ட இளம் இந்திய கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களின் நிரந்தர வருவாய் மற்றும் இடம்பெயர்வுக்கு வசதியாக இந்தப் புதிய பிஎச்டி திட்டம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வகுக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. Prime Minister Academician return Scheme என்ற இந்த முன்மொழியப்பட்ட திட்டம் 2020-க்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச பல்கலைக்கழகங்களில் பி.எச்டி. முடித்து திரும்பி வரும் அறிஞர்கள், இந்திய நிறுவனங்களில் சேர்ந்தவுடன் பொருத்தமான ஊதிய தொகுப்பு பெற தகுதி பெறுவார்கள். மேலும், இடமாற்றத்துக்கான தொகை மற்றும் ஆராய்ச்சி மானியம் ஒருமுறை வழங்கப்படும். தொடர் ஆராய்ச்சிகளுக்கு 5 ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கவும், விரைவான விசா மற்றும் விரைவான இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை அட்டைக்கு (Overseas Citizenship of India-OCI card) விண்ணப்பிக்கவும் இந்த அறிஞர்கள் தகுதியுள்ளவர்கள்.
மேலும், அறிஞரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு இந்தியாவில் பொருத்தமான வேலை தேடலுக்கான உதவியும், அவர்களுக்கு விரைவான விசாவைப் பெறுவதற்கு உதவியும் வழங்கப்படவுள்ளது.
இதேபோல, முனைவர் ஆய்வை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு பிரதமரின் ஆராய்ச்சி பெல்லோஷிப் திட்டம் (Prime Minister's Research Fellowship (PMRF) Scheme for Doctoral Studies-Ph.D.) மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றில் முனைவர் ஆய்வுக்கான சிறந்த திறமையான மாணவர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.
2018-19 இல் தொடங்கி, 7 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 1650 கோடியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் இந்திய அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் பி.டெக்., ஒருங்கிணைந்த எம்.டெக்., எம்.எஸ்சி. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் குறைந்தது 8 ஒட்டுமொத்த தர சராசரி புள்ளிகள் (சிஜிபிஏ) பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உரிய தேர்வு செயல்முறைகளுக்குப் பிறகு இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு நேரடி அனுமதி வழங்கப்படும். இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 
ஆய்வுக்குத் தேர்வு பெறும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 70 ஆயிரம், 3ஆம் ஆண்டில் ரூ. 75 ஆயிரம், 4 மற்றும் 5 ஆம் ஆண்டுகளில் மாதம் ரூ. 80 ஆயிரம் ஆராய்ச்சி உதவித்தொகையாக வழங்கப்படும். இதுதவிர, ஆய்வுக் கட்டுரைகளை வழங்குவதற்கான வெளிநாட்டுப் பயணச் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 2 லட்சம் ஆராய்ச்சி மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 3 ஆண்டு காலத்தில் 3 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான நிதி ஆதரவை மத்திய அரசு வழங்குகிறது. 
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை இந்திய நிறுவனங்களில் தொடர பல முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆசிரியர் புத்துணர்வுத் திட்டம், பல்கலைக்கழக மானிய குழுவின் சி.வி. ராமன் முனைவர் பட்டத் திட்டம், ராமானுஜன் பெல்லோஷிப், ஜே.சி. போஸ் பெல்லோஷிப், ஸ்வர்ண்ஜயந்தி பெல்லோஷிப், இளம் விஞ்ஞானி திட்ட விருது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மகளிர் விஞ்ஞானி திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறையின் ராமலிங்க சுவாமி மறுநுழைவு பெல்லோஷிப் உள்ளிட்டவை இந்த முன்னெடுப்புகளில் அடங்கும்.
- இரா.மகாதேவன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காடுகளில் 11 ஆண்டுகள்...50 ஆயிரம் புகைப்படங்கள்!
கை அசைவால் இயங்கும் சக்கர நாற்காலி!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 204 - ஆர்.அபிலாஷ்
விதி
அறிவால் உருவாகும் ஆரோக்கிய சமுதாயம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)