மாறுங்கள்... உண்மையானவராக!

கள்ளம் கபடம் இன்றி பிறருக்கும், தனக்கும் உண்மையாக இருக்கும் மனிதர்களை யாருக்குத்தான் பிடிக்காது?
மாறுங்கள்... உண்மையானவராக!

கள்ளம் கபடம் இன்றி பிறருக்கும், தனக்கும் உண்மையாக இருக்கும் மனிதர்களை யாருக்குத்தான் பிடிக்காது? அனைவராலும் விரும்பப்படும், மதிக்கப்படும் நபர்களாக இருக்கும் இந்த சிறந்த மனிதர்களுக்கும் எட்டுத்திக்கு சென்றாலும் வெற்றி கிட்டும். அவர்களிடம் உணர்வுசார் நுண்ணறிவு மிகுதியாக இருக்கும். அதன்மூலம் தனது உணர்வுகளை கட்டுப்பாட்டுடன் கையாளவும், பிறரது உணர்வுகளை அறிந்து மதிப்பளிக்கவும் அவர்களால் முடிகிறது. 

அவர்களது 58 சதவீத வெற்றிக்கு இந்த உணர்வுசார் நுண்ணறிவே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், 90 சதவீத வெற்றியாளர்களுக்கு உணர்வு சார் நுண்ணறிவுகள் மிகுந்துள்ளன என்பதை வேறு சில ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்துகிறது. இத்தகைய உணர்வுசார் நுண்ணறிவு  நம்மில் பிரதிபலிக்க வேண்டுமெனில், எண்ணத்திலும், செயலிலும், குணம் மாறாமல் எப்போதும் நாம் உண்மையாக இருக்க வேண்டும்.

உண்மையாக இருக்கும் மனிதர்களிடத்தில் சில குணாதியங்கள் உள்ளன. அவர்களின் பழக்க வழக்கங்களை நம்முடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பிறர் கவனத்தை ஈர்க்க விரும்பாதவர்

உண்மையாக இருக்கும் மனிதர்கள், தாங்கள் யார் என்பதை நன்கு அறிந்து கொண்டிருப்பார்கள். அவர்களை சிலருக்கு பிடிக்கலாம்; சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ள மாட்டார்கள். தனது கொள்கை, கோட்பாடுகளுக்கு எது சரியென்று படுகிறேதோ அதை எவரது விருப்பு, வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் எதிர்ப்புகளை கடந்து செய்து முடிப்பார்கள்.

தன்னை அனைவரும் திரும்பிப் பார்க்க வேண்டும், பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் எள்ளளவும் எண்ண மாட்டார்கள். ஆனால் அவர்களின் நேர்மையான பேச்சிலும், எளிமையான தோழமைப் பண்பிலும் ஈர்க்கப்பட்டு அனைவரும் அவரை தேடி வருவார்கள்.

தவறான கணிப்புகளுக்கு இடம் கொடாதவர்

தான் பிடித்த முயலுக்கு  மூன்று கால் என்று விதண்டாவாதம் பேசுபவர்களிடம் யாரும் பேசுவதற்கு முன் வர மாட்டார்கள். ஆனால் உண்மையாக உள்ள மனிதர்கள் திறந்த மனதுடன் எந்த கணிப்புகளும், முடிவுகளும் இன்றி பிறர் கூறுவதைக் கேட்பார்கள்.

தன்னிலையில் இருந்து மட்டும் யோசிக்காமல் பிறரது நிலையில் இருந்தும் யோசிப்பார்கள். ஒருவர் ஒன்றை தீர்க்கமாக நம்புகிறார்கள் என்றால் அவர்கள் ஏன் அவ்வாறு நம்புகிறார்கள்? என்பதை முழுமையாக உணரும் வரை அவர்களது நம்பிக்கையினை சரியென்றோ, தவறென்றோ முடிவு செய்ய மாட்டார்கள்.

தனிப் பார்வையுண்டு; பாதையுண்டு

தன்னைப் பற்றி பிறர் இவ்வாறு நினைப்பார்கள். அதனால் நாம் இப்படி இருக்க கூடாது என்பன போன்ற எண்ணங்கள் அவர்களிடம் அறவே இருக்காது. அவர்களுக்கென ஒரு பார்வை இருக்கும். அவர்களது உள்ளுணர்வு காட்டும் பாதையில் பயணிப்பார்கள். நாம் இதை செய்தால் யாரும் தவறாக எண்ணுவார்களோ என்று எண்ணாமல், தன் மனதுக்கு சரியென்று பட்டால் உடனே செய்து முடிப்பார்கள்.

இருப்பதைக் கொடுத்து மகிழ்பவர்

தனக்கு தெரிந்தவற்றை பிறருக்கு சொல்லிக் கொடுத்து, தான் பெற்ற அறிவை பிறருக்கு பயனுள்ளதாக ஆக்குவார்கள். பிறரது வெற்றியோ, உயர்ச்சியோ தனது வெற்றியையும், நிலையையும் எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று உறுதியாக நம்புவார்கள். பிறரது வெற்றியை தனது வெற்றியாக எண்ணி மகிழ்வார்கள்.

அனைவரையும் மதிக்க தெரிந்தவர்

நம்மில் பலர் பிறர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் செல்லிட பேசியே உலகம் என்று மூழ்கிக் கிடக்கிறோம். கண்ணும், கருத்தும் செல்லிட பேசியில் இருக்க, வாய் மட்டும் நம்மிடம் பேசுபவர்களிடம் "உம்' கொட்டுகிறது. 

ஆனால் உண்மையாக இருப்பவர்கள் இந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தன்னைப் போல பிறரையும் எண்ணுவார்கள். அனைவரையும் சரிசமமாகப் பாராட்டி மரியாதையாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார்கள். தங்களுடன் உரையாட விரும்பும் உண்மையான நபர்களின் கருத்துகளுக்கு முழு ஈடுபாட்டுடன் செவி மடுப்பார்கள்.

பகட்டு ஆடம்பரங்களுக்காக வாழாதவர்

தன்னை மற்றவர்கள் பெரிதாக நினைக்க வேண்டும் என்றெண்ணி, ஆடம்பரப் பொருள்களை தன்வசம் வைத்திருக்கும் பகட்டு அவர்களிடம் இருக்கவே இருக்காது.  அவர்களுக்கான மகிழ்ச்சி,  ஆடம்பரப் பொருள்களில் இருக்காது; நல்ல காரியங்கள் செய்வதிலும், நல்ல உறவுகளை உருவாக்குவதிலுமே இருக்கும்.

நம்பிக்கையானவர்கள்

உண்மையாக இருக்கும் மனிதர்களிடம் மக்கள் பெரிதும் ஏற்கப்பட காரணம், அவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்களிடம் சென்றால் நம்மையும் நம்புவார்கள் என்பதானாலேயே ஆகும்.

அவர்கள் விளையாட்டாகக் கூட , தான் நம்பாதவற்றை பிறருக்கு எடுத்துச் சொல்ல மாட்டார்கள்.  

போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும்

தனக்கு உண்மையாக இருக்க நினைக்கும் மனிதர்கள், தன்னைத் தானே அறிந்து சுயமதிப்பீடு செய்து கொள்வார்கள். தன்னை மிகைப்படுத்தி பெருமையாகக் கூறினாலும் சரி, சிறுமைப்படுத்தும் நோக்கில் தவறாகக் கூறினாலும் சரி, அவற்றில் சிறிதும் கவனம் செலுத்தாமல் தன் பணியை செவ்வனே செய்வார்கள். தன்னை இழிவுப்படுத்தி விட்டார்களே, அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றெல்லாம் எண்ணி தனது நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.  

சொல்வதை செய்வார்; செய்வதை மட்டுமே சொல்வார்

நம்மில் பலர் சொல்வது ஒன்றாக இருக்கும். செய்வது ஒன்றாக இருக்கும். ஊருக்கு மட்டும்தான் உபதேசம்  என்பது போல பிறருக்கு சொன்ன வார்த்தைகளை தாங்கள் கடைப்பிடிக்க பலர் தவறிவிடுகின்றனர்.

ஆனால் உலகுக்கும், தனக்கும் உண்மையாக இருப்பவர்களுக்கு சொல்லே செயல். செயலே சொல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com