தன்னிலை உயர்த்து! - 42: உயர்ந்த வாழ்வின் அடித்தளம் பணிவு!

ஒரு நாள் மாமன்னர் அசோகர் தனது படைகளுடன் பயணம் சென்றார். அவருக்கு எதிரே வந்த ஒரு துறவியைக் கண்டதும் மன்னர் கீழே இறங்கி அவரது பாதத்தில் விழுந்து வணங்கினார்.
தன்னிலை உயர்த்து! - 42: உயர்ந்த வாழ்வின் அடித்தளம் பணிவு!

ஒரு நாள் மாமன்னர் அசோகர் தனது படைகளுடன் பயணம் சென்றார். அவருக்கு எதிரே வந்த ஒரு துறவியைக் கண்டதும் மன்னர் கீழே இறங்கி அவரது பாதத்தில் விழுந்து வணங்கினார். இச்செயல் மன்னரின் தளபதிக்கு பிடிக்கவில்லை. அரண்மனையை அடைந்ததும்  மன்னரிடம், ""அரசே! நாட்டினுடைய  அரசராகிய நீங்கள் ஒன்றுமில்லாத பரதேசியின் கால்களில் விழுந்து வணங்குவது சரிதானா?'' என்றார். மன்னர் அதற்குப் பதிலேதும் கூறாமல் அவரிடம், ""ஓர் ஆட்டின் தலையையும், ஒரு புலியின் தலையையும், ஒரு மனிதனின் தலையையும் உடனே கொண்டு வாருங்கள்''” என்றார். மூன்று தலைகளும் கொண்டுவரப்பட்டன. மன்னர், தளபதியிடம் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.  


ஆட்டுத்தலை சந்தைக்குச் சென்ற மறுகணமே விற்பனையானது. புலியின் தலையை வாங்க அனைவரும் யோசித்தனர். இறுதியாக ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டின் சுவரினை அலங்கரிக்க வாங்கிச் சென்றார். ஆனால், மனிதத்தலையைப் பார்த்ததும் அனைவரும் வெகுண்டு ஓடினர். அதை வாங்க எவருக்கும் மனம் வரவில்லை. இத்தகவலை அறிந்த மன்னர் அதை இலவசமாக கொடுத்து விடுமாறு தளபதிக்கு ஆணை பிறப்பித்தார். மனிதத்தலையை இலவசமாக பெற்றுக்கொள்ள கூட எவரும் முன்வரவில்லை. 


""மன்னா! மனிதத்தலையை இலவசமாக பெறுவதற்குக் கூட எவரும் முன்வரவில்லை''” என்றார் தளபதி. அதற்கு  மன்னர், ""மனிதன் இறந்துவிட்டால் அந்த உடலுக்கு மதிப்பே இல்லை. அவ்வாறிருக்க, உடலில் உயிர் இருக்கும்போதே  தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளின் பாதங்களில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு?''” என்றார் மன்னர்.
"உன்நிலை உயர்கின்றபோது அதைவிட பணிவு  உயர வேண்டும். அப்போது தான் நீ உயர்ந்த மனிதனாய்க்  கருதப்படுவாய்'” என்ற முகமது நபிகளின் வரிகளுக்கு இலக்கணமாய் தனது பணிவால் சக்கரவர்த்தியாய் உயர்ந்து நின்றார் மன்னர் அசோகர். "சாதனை படைத்த மனிதர்கள் அனைவரும் எப்போதும் பணிவுடன் இருப்பதையே விரும்புவார்கள்' என்ற எமர்சனின் வரிகளும், "அதிக அளவிலான பணிவு நம்மைச் சாதனையாளர்களுக்கு அருகில் கொண்டு செல்லும்' என்ற இரவீந்தரநாத் தாகூரின் வரிகளும் பணிவு ஒன்றே சாதாரண மனிதனையும் சாதனையாளராக்கும் என்கின்றன. 
பணிவு ஒரு மகத்தான பண்பு. பணிதல் உயர்ந்த வாழ்வின் அடித்தளம்.   நல்லொழுக்கத்திற்கு அடித்தளமும் பணிவேயாகும்.  பணிவு மனிதனின் பலம்.  அது ஓர் உத்தம குணம். பணிவு ஒரு  மாபெரும் சக்தி.  மனித அறிவின் முதல் அறுவடை,  பணிவே; அது பேச்சினில் பளிச்சிடும், செயலினில் துளிர்விடும். நம்பிக்கையை வளர்த்திடும். பணிவு எளிமையானவர்களின் பண்பு. எளிமையானவர்கள் என்றும் தங்களை வியந்து பேசுவதில்லை. மேலும், தங்களிடம் உள்ள திறமைகளும்,  தகுதிகளும் கடவுளால்  அருளப்பட்ட வரங்கள் எனக் கருதுவர். 
"பணிவு என்பது ஒரு நெறி'” என்பார் அன்னை தெரேசா. மேலும், "தன்னைப் பற்றி தானே வியந்து பேசாமலிருப்பது; பிறரின் குறை காணாமலிருப்பது; தனது பணியை செம்மையாகச் செய்வதில் கவனம் செலுத்துவது; எதிர்மறை கருத்துக்களை ஏற்றுக் கொள்வது; பிறரின் தவறுகளை எளிதில் மன்னிப்பது; இகழ்ச்சியினைத் தாங்கிக் கொள்வது; மனம் புண்பட்டாலும் தனது நிலையினை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது; தன்னை எவரும் கண்டு கொள்ளாமல் இருந்தாலும், மறந்தே போனாலும், வெறுத்து ஒதுக்கினாலும் அதனைப்பற்றி கவலைப்படாது இருப்பது;  பிறரின் தகுதி மற்றும் திறமையின் கீழ் வாழ மறுப்பது; எப்போதும் கடுமையாக உழைப்பது ஆகிய செயல்பாடுகள் பணிவினை வளர்க்கும்'  என்பார் அவர். 
இயந்திரங்களைப் போன்றுதான் சில நேரங்களில் மனதும் செயல்படுவதுண்டு. இயந்திரங்கள் செயல்படும்போது வெப்பம் வெளியாகும். அவ்வெப்பம் சில நேரங்களில் அவ்வியந்திரத்தையே பழுதாக்கிவிடும். இதே போன்று மனிதன் பதவியாலும், செல்வத்தாலும் உயரும்போதும் அகங்காரம் ஏற்படும். அகங்காரத்தை அடக்காவிட்டால் அது மனிதனையே அழித்துவிடும். இயந்திரம் பழுதடைவதைத் தடுக்க உயவுப்பொருளான எண்ணெய்யைப்போல், பணிவினால் மட்டுமே மனிதனது அகங்காரத்தைத் தடுக்க முடியும்.  "தன்னை உயர்வாகக் கருதிக்கொள்கிறவர் தாழ்த்தப்படுவார். தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவர் உயர்த்தப்படுவார்' என்கிறது பைபிள். 
"தேவதைகளை பூதமாக்குவது தற்பெருமை. ஆனால் மனிதர்களை தேவதைகளாக்குவது பணிவு' என்கிறார் புனித அகஸ்டின்.   பணிவு என்பது தன்னை குறைவாக நினைப்பது அல்ல, அது தன்னடக்கத்தோடு  நடந்து கொள்வது. உண்மையில் பணிவு என்பது ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்  பிரதம மந்திரியின் ஆலோசகராக இருந்தபோது ஒரு நாள் இராமேஸ்வரத்திற்கு வந்தவர் தனது கண் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்தார். தனது சொந்த அலுவல் என்பதற்காக அவரது பாதுகாவலர்கள் எவரையும் அழைத்து வரவில்லை. சிகிச்சைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் தேவைப்பட்டது. கலாமிடம் முன்னூறு ரூபாய் மட்டுமே இருந்தது. மீதத்திற்கு காசோலை தருவதாகக் கூறினார். அதற்கு ""காசோலையை நாங்கள் ஏற்பதில்லை, பணமில்லையென்றால் இலவச சிகிச்சை செய்து கொள்ளுங்கள்'' என்றனர். அப்பொழுதும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டு இலவச பிரிவிற்குச் சென்று சிகிச்சை பெற்று அவர்களின் ஆலோசனைப்படி ஒரு நாள் அங்கேயே தங்கினார்.
இரவாகியும் கலாம் அவர்கள் இராமேஸ்வரம் திரும்பவில்லை என்பதை அறிந்த பாதுகாவலர்கள் மதுரை விரைந்தனர். அங்கு அரவிந்த் கண் மருத்துவ
மனையில் ஏழை மக்களோடு, ஓர் அலுமினியத் தட்டில் வரிசையில் நின்று உணவைப் பெற்று உண்டுவிட்டு, ஒரு சிறிய பாயில் கலாம் அவர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தனர்.
இதனையறிந்ததும், இலவச சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததற்காக மருத்துவர்கள் மன்னிப்பு கேட்டனர். அதற்கு அப்துல் கலாம், ""நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே! இலவச பிரிவில் எனக்கு சிறப்பான சிகிச்சை அளித்தீர்கள், கனிவுடன் கவனித்தீர்கள். மேலும், ஏழை எளிய மக்களுக்கு ஆத்மார்த்தமாக சிகிச்சை அளிக்கும் ஓர் உன்னதமான இடத்தை காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது'' என்றார்  கலாம். உயர்ந்த பதவியில் இருந்தும், இக்கட்டான சூழலிலும் கூட அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, தன்னை இந்த மண்ணில் ஒரு சராசரி மனிதனாகவே அடையாளம் காட்டிக்கொண்ட பணிவுதான் அவரை குடியரசுத் தலைவராக்கியது. ""உண்மையில் ஒரு சிறந்த மனிதனை எடைபோடுவதற்கு அவனுடைய பணிவினை எடைபோட்டு பார்த்தால் போதும்'' என்கிறார்  இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் ஜான் ரஸ்கின்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற என்ற திருக்குறள் மூலம் "இனிமையாக பேசும் குணமும், பணிவும் ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள்' என்கிறார் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

பணிவானவர்கள் சமூக நலன் விரும்பிகள். அவர்களின் செயல்பாட்டில் தன்னலத்தைவிட பிறர் நலனே மேலோங்கியிருக்கும். அவர்களின் மூலமே மனித உறவுகளை வலுப்படுத்த இயலும்.  அமெரிக்காவின் பேலார் பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சியில் பணிவு கொண்டவர்கள் பிறரது துன்பத்தில் அதிகம் பங்கெடுத்துக் கொள்கின்றனர் என்றும், பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பணிவானவர்களின் செயல்பாடுகள் முன்மாதிரியாக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பணிவுடையவர்கள் அதிக காலம் உயிர்வாழ்கின்றனர் என்பதும் ஆராய்ச்சியின் முடிவு.

ஒரு மனிதன் இடர்பாடுகளில் இருக்கும் போது தான் அவரது உண்மையான பணிவினைத் தீர்மானிக்க முடியும். பணிவும் உடற்பயிற்சியும் ஒன்றே. சில காலம் உடலுக்குப் பயிற்சி செய்து பின்னர் தொடராவிட்டால் அது உடலுக்கு வலுவினைத் தராது. தொடர்ந்து செய்கின்ற உடற்பயிற்சியால் உடல் வலுப்பெறுவதுபோல எல்லாரிடமும் காட்டும் பணிவுதான் ஒரு மனிதனுக்கு உயர்வைத் தரும். 

உயரமாய் வளர்ந்தாலும், வளைந்து கொள்கின்ற மூங்கில்போல், நன்கு வளர்ந்த பின் பணிந்து கொள்கின்ற பயிர்க்கதிர்கள் போல், வளர்கின்றபோது பணிவு கொள்கிறவர்களே அறிவாளிகள். ஆகவே, மனிதன் கற்றுக் கொள்ளவேண்டிய அடிப்படையான பண்பு பணிவேயாகும். இராவணன் போரில் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்பொழுது இராமன் தனது தம்பி இலக்குவனை அழைத்து, “""இராவணனிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.  ஆட்சித்திறத்தினையும், வாழ்க்கை உபதேசங்களையும் அவரிடம் கற்று வா''” என்று அனுப்பினார். இராவணனிடம் செல்ல இலக்குவனுக்கு விருப்பமில்லை. ஆனாலும், அண்ணன் சொல்லைத் தட்டாமல் இராவணனிடம்  சென்று அவரின் தலையருகே அமர்ந்தார். ""உங்கள் ஆட்சித்திறத்தினையும், அரிய நல் உபதேசங்களையும் கூறுங்கள்'' என்றார். இராவணன் போரில் தோல்வியடைந்து, உடல் முழுவதும் காயங்களோடு இருந்தாலும் அப்போது அவர் இலங்கை நாட்டு மன்னர். எனவே, தன்னிடம் அறிவுரை கேட்க வந்த இலக்குவனின் அகந்தை இராவணனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, தனது காதில் எதுவும் கேளாதது போல் இராவணன் படுத்திருந்தார். 

இலக்குவன் தனது அண்ணன் இராமனிடம் திரும்பிச் சென்று இராவணன் எதுவும் பேசவில்லை என்பதைக் கூறினார். அதற்கு இராமர், ""நாம் ஒருவரிடம் பாடம் கற்க செல்லும் போது எப்பொழுதும் அவர்கள் பாதம் இருக்கும் புறமே பணிந்து நிற்க வேண்டும்'' என்றார். இலக்குவன் மீண்டும் இராவணனிடம் சென்று இராவணனின் பாதத்தின் அருகே சென்று மண்டியிட்டு உபதேசிக்கும்படி வினவினார். இராவணன் வாய்திறந்து வாழ்க்கை இரகசியங்களை உபதேசித்தார்.

""உடல் வளர்ச்சிக்கு அடிப்படை உணவு; 
உள்ள வளர்ச்சிக்கு அடிப்படை பணிவே !''

(தொடரும்)

 கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com