சரியான பார்வை...  சரியான வழி... சரியான செயல்! - 44

1958 ஆம் ஆண்டு யுனெஸ்கோ ரூபிள் ஃபண்ட் என்று சொல்லப்படக்  கூடிய சோவியத் யூனியன் வாயிலாக பெறப்பட்ட நிதியைக் கொண்டு  ஐஐடி - பாம்பே அமைக்கப்பட்டது. 
சரியான பார்வை...  சரியான வழி... சரியான செயல்! - 44

1958 ஆம் ஆண்டு யுனெஸ்கோ ரூபிள் ஃபண்ட் என்று சொல்லப்படக்  கூடிய சோவியத் யூனியன் வாயிலாக பெறப்பட்ட நிதியைக் கொண்டு  ஐஐடி - பாம்பே அமைக்கப்பட்டது. 

1959 ஆம் ஆண்டு ஐஐடி - கான்பூர் உருவாக்கப்பட்டது.   அதன் பிறகு, அந்நாளைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் முன்முயற்சியினால் உருவாக்கப்பட்ட  கல்வியாளர் குழு,   கான்பூர் இன்டோ அமெரிக்கன் புரோகிராம் (KIAP)  என்ற திட்டத்தை ஏற்படுத்தியது.  அமெரிக்காவின் கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,   மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT),    பர்டியூ யுனிவர்சிட்டி (PURDUE UNIVERSITY), யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபேர்னியா,  யுனிவர்சிட்டி ஆஃப் மிச்சிகன்  உள்ளிட்ட உள்ள 9 பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. 1962 ஆம் ஆண்டு முதல் 1972  ஆம் ஆண்டு வரை  அந்த பல்கலைக்கழகங்களிடம் இருந்து  தொழில்நுட்ப உதவிகளைப் பெற்று,   ஐஐடி - கான்பூருக்கான கல்வி திட்டத்தை அமைப்பது,  ஆய்வகங்களை மேம்படுத்துவது  ஆகியவற்றைச் செய்தது. பத்தாண்டுகளாக இந்த அமெரிக்க பல்கலைக்கழகங்கள்,  ஐஐடி கான்பூரின் ஒவ்வொரு துறையையும் சிறப்பாக உருவாக்கினார்கள்.  இன்றும் இத்தகைய உலகப் புகழ்பெற்ற கல்விநிறுவனங்களுடன் ஐஐடி - கான்பூர் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 

இதேபோன்று 1959 - இல்   ஹுமாயூன் கபீர் மத்திய அமைச்சராக இருந்தபோது, ஜெர்மன் அரசுடன் செய்து கொண்ட இன்டோ - ஜெர்மன் அக்ரிமெண்ட் வாயிலாக  ஐஐடி - மெட்ராஸ் 1959 -ஆம் ஆண்டு  உருவாகியது. 

எதிர்காலத்தில் இந்தியாவில் கல்வித்தரம் உயர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அன்றைய ஆட்சியாளர்கள் பல்வேறு நாடுகளுடனான தொடர்புகளைப் பயன்படுத்தி  இத்தகைய நிறுவனங்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள்.  அதற்கு வேண்டிய பண உதவிகளையும் மனித வள உதவிகளையும் தொடர்ந்து செய்தார்கள். இந்தியாவின் பல நாடுகளில் உள்ள தூதரங்களில் சயின்ஸ் கவுன்சிலர் என்ற புதிய ஒரு பதவியை உருவாக்கினார்கள்.  அதில் சிறந்த கல்வியாளர்களை நியமித்து, அந்த நாடுகளில் நமது இந்தியர்கள் எங்கெல்லாம் கல்விப் பணி மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டார்கள். அப்படிப்பட்டவர்களைத் திரும்பவும் இந்தியாவுக்கு வரச் செய்து,   நாட்டின் அறிவியல்,  தொழில்நுட்ப வளர்ச்சி,  கல்வி மேம்பாட்டுக்காக பணியாற்றச் செய்தார்கள்.   குறிப்பாக,  முனைவர் எம்.ஆனந்தகிருஷ்ணன் முதல் சயின்ஸ் கவுன்சிலர் பதவியில் அமெரிக்காவில் உள்ள  இந்திய தூதரகமான வாஷிங்டன் டிஸியில்  பணியாற்றினார். 

கல்வி நிறுவனங்களைச் சுதந்திரமாக, தன்னிச்சையாகச் செயல்படும்படி அன்றைய ஆட்சியாளர்கள்  அனுமதித்ததுடன், மக்களின் வரிப்பணத்தில் இருந்து கிடைத்த பணத்தை,  நாட்டின் எதிர்காலத்துக்காக- மாணவர்களின் கல்விக்காக - திட்டமிட்டுச் செலவிடுதல் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகவும்  இருந்தார்கள். 

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் பதவி வகிக்கக் கூடிய அமைச்சருக்கு   கல்வியைப் பற்றிய உலக  அளவிலான புரிதலும், தொலைநோக்குப் பார்வையும் இருக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் ஓர் ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவராக,  உலக அளவில் கல்விசார்ந்த அனுபவங்கள் உடையவராக  அவர் இருந்தால்,   நமது நாட்டின் கல்வித்தரத்தை உலக நாடுகளின் கல்வித்தரத்துடன் ஒப்பிட்டு,  நமதுநாட்டின்  கல்வித்தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்த முடியும். 

இன்று மத்திய அரசின் கல்விக் கூடங்களானாலும்  சரி, மாநில அரசின் கல்விக் கூடங்களானாலும்  சரி, இதில் பெரும்பான்மையானவற்றில் அரசியல் குறுக்கீடுகள்  இருப்பதால்,  இன்று துணைவேந்தர் நியமனத்திலிருந்து எல்லாவற்றிலும் சரியானமுறை கடைப்பிடிக்கப்படாததால், கல்வியின் தரம் நமது நாட்டில் வெகுவாகப்பாதிக்கப்படுகிறது.   இதனால் நமது நாட்டின் கல்வித்தரமானது உலகநாடுகளுடன் போட்டியிடுவதற்கு உகந்ததாக இல்லை. இத்தகைய சூழல்கள்  இருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி கல்வியில் தனிமுத்திரையைப் பதிக்க முடியும் என்பதற்கு உதாரணங்களாக   ஐஐடிகள், ஐஐஎம்கள்  உலக அளவில் சிறந்த கல்விநிறுவனங்களாகத் திகழ்ந்து வருகின்றன.  

இளம் மாணவர்கள் -  2017 இன் அளவீட்டின்படி 0-14 வயதுள்ளவர்கள் -  ஏறத்தாழ 35 கோடி மாணவர்கள் உள்ளார்கள். இவர்களை ஆக்கப்பூர்வமாக உருவாக்கக் கூடிய கல்விக் கொள்கை இக்கால கட்டத்தில் இன்றியமையாததாக உள்ளது. 

1948-இல் உருவாக்கப்பட்ட முதல் எஜுகேஷன் கமிஷனின் பரிந்துரைகளை  ( டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தலைமையிலான  அந்த குழு மாபெரும் கல்வியாளர்களை உள்ளடக்கியிருந்தது) எந்த ஓர் அரசாங்கமும் முழுமையாக நிறைவேற்றவில்லை. முதல் எஜுகேஷன் கமிஷன்    விவசாயம், பொறியியல், மருத்துவம், ஆர்ட்ஸ், அறிவியல்  என்று இந்தியாவின் எல்லாத்துறைகள் சார்ந்த கல்வியை நுட்பமாக ஆராய்ந்து,  இந்தியா 50 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வாறு இருக்க வேண்டும், அதற்கு எந்தவிதமான கல்வி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன்  சிறந்த பரிந்துரைகளை வழங்கியது.  750 பக்கங்கள் அடங்கிய  அந்தப் பரிந்துரை இன்று எடுத்துப் படித்தோமானால் மிகவும் வியப்பாக இருக்கிறது.  அது இந்தியாவின் எதிர்காலத்தை நுட்பமாக ஆராய்ந்தது. இந்தியாவுக்கு வளர்ச்சி ஏன் தேவை? அதற்கு எத்தனை கல்விக்கூடங்கள் தேவை?  அவை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்?   மனித வளத்தை எவ்வாறு வெவ்வேறு துறைகளில் ஈடுபடுத்த முடியும்? என்பதற்கான  பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.  இதுபோன்று மற்றும் ஒரு குழுவை   இன்று அமைப்பதற்கு ஆன சூழல் எந்த அரசாங்கத்தாலும் ஏற்படுத்தப்படவில்லை. 

தற்போது இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்கு கல்விக்கான ஒரு "திங்க் டேங்க்' உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் பள்ளி கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த மாதிரியான அணுகுமுறைகள் இருக்க வேண்டும், மக்கள் தொகையின் வளர்ச்சிக்கேற்ற எத்தனை ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்? அவர்களுக்குப் பயிற்சி தர எத்தனை  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும்?  அரசு இதற்கான நிதிமேலாண்மையை எவ்வாறு திட்டமிட வேண்டும்? படித்து முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை எப்படி, எந்த அளவு உருவாக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை ஒவ்வோர் ஆண்டும் வெளியிட வேண்டும். அப்போதுதான் கல்விக்கான தேவைகளை தெரிந்து கொள்ள முடியும். 

இதுபோன்ற திட்டமிடுதலுக்காக 1962 ஆம் ஆண்டு    "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷனல் பிளானிங் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. யுனெஸ்கோவினால் டெல்லியில் இது உருவாக்கப்பட்டது, இதன் முக்கிய குறிக்கோளே ஆசிய நாடுகளின் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றக் கூடிய  கல்வி மேலாண்மைசார்ந்த தலைவர்களை உருவாக்குவதே. இது 1965 வரை "ஏஷியன்இ இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷன் பிளானிங் அட்மினிஸ்ட்ரேஷன்' என்றழைக்கப்பட்டது.  

இதன் முக்கிய குறிக்கோள் இந்தியாவுக்கு மட்டுமல்லாது, தெற்காசிய நாடுகளில் உள்ள கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டுக்காகத் திட்டமிடுதலேயாகும்.  இன்றும் இந்த பல்கலைக்கழகம் சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால் இவர்களுடைய பரிந்துரைகளை அரசு ஏற்று அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது  குறைவாக உள்ளது. 

அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் கல்விசார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருகிறது. இன்டர்நேஷனல் கம்பேரேட்டிவ் எஜுகேஷன், இன்டர்நேஷனல் எஸýகேஷனல் பாலிசி இன் டிஃபரண்ட் கண்ட்ரீஸ்,   இன்டர்நேஷனல் எஜுகேஷனல் பாலிஸி அனலிஸிஸ், கரிகுலம் அண்ட் டீச்சர் எஜுகேஷன், எம்ஏ இன் எஜுகேஷன்/ எம்பிஏ,  எம்ஏ இன் பப்ளிக் பாலிசி அண்டு எஜுகேஷன், எம்ஏ இன் லா அண்ட்  எஜுகேஷன் உள்ளிட்ட  முதுகலைப் பட்டப்படிப்புகளை கல்வி சார்ந்து கற்றுத் தருகிறது.  இதுபோன்ற கல்வி சார்ந்த புதிய முயற்சிகளை இந்தியாவில் ஏற்படுத்தினால் மட்டுமே இந்த கல்விசார்ந்த படிப்புகளைப் படித்த மாணவர்கள் இன்றைய கல்விமுறை குறித்து நிறையக் கேள்விகளை எழுப்புவார்கள்.  அவ்வாறு கேள்விகள் எழுப்பப்படும்போது மட்டுமே கல்வியின் தரம் இந்தியாவில் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்தகைய கேள்விகளை எதிரான கேள்விகளாகப் பார்க்கக் கூடாது. 

மற்ற நாடுகள் இத்தகைய புதிய முயற்சிகளின் தேவையை நன்குணர்ந்து, அவற்றுக்காக உலகின் பல்வேறு  நாடுகளின்  வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஒப்பிட்டு அவற்றைப் பாடமாக மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் நாட்டில்  வீழ்ச்சிகள் ஏற்படாமல் தடுக்க முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.  தற்போது இந்தியாவின் கல்வித்தரத்தையும்  உலகின் பிற நாடுகளின் கல்வித் தரத்தையும்  பற்றி ஆராய்ச்சி செய்த அவர்கள்,  இந்தியாவின் கல்விப் பாதை  சரியான பாதை அல்ல என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.  இந்தியாவின் கல்வித் தரத்தை உயர்த்துவது சார்ந்த விஷயங்கள்,  இங்குள்ள ஊடகங்களினால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுவதில்லை.  கல்வித்தரம் சார்ந்த விஷயங்கள், மக்களுக்குச் சென்றடைந்தால் மட்டுமே மக்கள் அவற்றைப் புரிந்து அவர்களுடைய குழந்தைகளுக்கு முறையான,  

சரியான கல்வியைத் தேர்ந்தெடுக்கமுடியும்.  கல்வி வழங்கும் சரியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். 

மக்களுக்குக் கல்வி சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு இல்லையென்றால்,
முறைகேடான  கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். 

(தொடரும்)

கட்டுரையாசிரியர்:  சமூக கல்வி ஆர்வலர்

www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com