செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

உன்னையே நீ நேசி!

DIN | Published: 23rd April 2019 01:06 PM

நம்மை நாம் நேசிக்க வேண்டும். நம்மை நாம் நேசிக்கத் தொடங்கும்போது, நமக்குள் இருக்கும் கோபம், காழ்ப்புணர்ச்சி, பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் மறையத் தொடங்கும். புத்துணர்ச்சி பெற்ற புதிய மனிதராக நாம் வாழத் தொடங்குவோம். ஆனால் தன்னை நேசிப்பது எவ்வாறு என்று தெரியாமல் நம்மில் பலர் தவிக்கின்றனர். அதற்கான சில வழிகள்:
 பிறரை போல உன்னையும் நேசி
 நாம் எப்போதும், நாம் நேசிக்கும் குடும்பத்தினக்கும், நண்பர்களுக்கும், அவர்களது விருப்பங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம். உண்ணும் உணவு, உடுத்தும் உடை ஆகியவற்றை நமக்கு பிடித்தவர்களுக்கு வாங்கித்தரும் முன், பல முறை யோசித்து, அவர்களிடம் கேட்டு அவர்கள் விரும்பியவாறு வாங்கிக் கொடுக்கிறோம். அதுபோல, நமக்காக என்று நாம் எதுவும் யோசிப்பது கிடையாது.
 பிறரை நேசிப்பது போல நம்மையும் நேசித்து வாழ வேண்டும். பிடித்ததை உண்டு, பிடித்ததைச் செய்து வாழ்ந்தோம் என்றால், அந்த மகிழ்ச்சி நம்முள் பல நேர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். நம்மில் இருக்கும் இந்த நேர்மறை எண்ணங்கள் பிறரிடமும் பிரதிபலிக்கும்.
 வெற்றியைக் கொண்டாடுங்கள்
 மனித மனம் எளிதில் நிறைவு கொள்ளாது. ஒரு வெற்றியைப் பெறும்போது, இது போதாது. மேலும் உயர வேண்டும் என கூறிக் கொண்டே இருக்கும். அதனால் நம்மில் பலர், தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, தங்களது பலவீனத்தை நினைத்தே வருந்திக் கொண்டிருப்பர். இதற்கு காரணம், தன்னை அவர்கள் நேசிக்காததே.
 நம்மை நாம் நேசிக்கத் தொடங்கும்போது, நம்மிடம் இருக்கும் திறமைகளும், பலங்களும் மட்டுமே வெற்றியின்போது நினைவுக்கு வரும். அதற்காக பலவீனங்களை ஆராயக்கூடாது என்பதில்லை. வெற்றியின்போது, நம் பலத்தை நினைத்து நாம் கொள்ளும் பெருமிதம், நம்மை மேலும் உயர வைக்குமே தவிர தாழ்த்தாது. ஆனால் பலவீனத்தை நினைத்து வருந்தும் எதிர்மறையான எண்ணம் நம் மீது வெறுப்பையே தரும்.
 உன்னை உயர்த்துபவர்களோடு பழகு
 நம்மை நாம் நேசிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைபோல நம்மை நேசிப்பவர்கள் நம்மை சுற்றியிருப்பது மிகவும் முக்கியம். இந்த உலகில், உன்னால் முடியும் என்று நம்மை ஊக்குவிப்பவர்களை விட, உன்னால் முடியாது என்று சொல்பவர்களே அதிமாக உள்ளனர். அவ்வாறு, நம்மை தாழ்வாக எண்ணுபவரை அருகில் வைத்திருந்தால், நம்மை நாம் நேசிக்கவே முடியாது.
 எதிர்மறை எண்ணங்களை விட்டொழி
 இன்றைய காலகட்டத்தில், நாம் எங்கு நோக்கினும், எதிர்மறையான எண்ணங்களும், செயல்களுமே காணப்படுகின்றன. அதிலும், நாம் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில், பல பதிவுகள் எதிர்மறை எண்ணத்தையே பிரதிபலிக்கின்றன. அத்தகைய விஷயங்கள் நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் நம்மை அறியாது, ஓர் இனம் புரியாத வெறுப்புணர்வு நம்மில் இருந்துகொண்டே இருக்கும். எதற்குமே மாறுபாடான இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதால் எதையும் எதிர்மறையாக நீங்கள் யோசிப்பதை விட, நேர்மறையாக யோசிப்பதே சிறந்தது.
 தன்னம்பிக்கை உடல் தோற்றத்தில் இல்லை
 தன்னம்பிக்கை உடல் தோற்றத்திலும், அழகிலும்தான் உள்ளது என்று தவறாகப் புரிந்து கொண்டு, ஒருவரது உடல் தோற்றத்துக்குதான் மரியாதை அளிக்கப்படுகிறது என்றெண்ணி, சிலர் தங்களை வெறுத்துக் கொண்டிருப்பர். ஆனால், உண்மையில், ஒருவரது அழகு, தன்னம்பிக்கை ஆகியவை அவரது நடத்தையிலும், பிறரை அவர் எவ்வாறு நேசிக்கிறார் என்பதிலேயும்தான் உள்ளது.
 தனித்துவமாக இரு
 இதுதான் நீ செல்ல வேண்டிய பாதை என்று நமக்கு மூத்தவர்கள் ஒரு பாதையைக் காண்பிக்கும்போது, அது நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். எனினும் நம்மில் பலர் அதை ஏற்றுக்கொண்டு பின்னர் அதற்காக வருந்தி, தன்னை வெறுத்துக் கொண்டிருப்பர்.
 அவ்வாறு இல்லாது, நாம் பயணிக்க வேண்டிய பாதையை, நாம் வெற்றி பெற நினைக்கும் பாதையை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு நாம் பயணிக்கும் போது, நமக்கு வழிகாட்டிய நம் மூத்தவர்களும் நமக்கு துணையாய் இருப்பார்கள். நம் மீதும் நமக்கு அன்பு அதிகரிக்கும்.
 சுய மதிப்பீடு
 நம்மில் பலர் செய்யும் முக்கியத் தவறுகளில் ஒன்று. அடுத்தவர்கள் நம்மை பற்றி கூறியதை வைத்து, நம்மை நாம் மதிப்பிடுவது. நாம் நல்லது செய்தாலும், நம்மைப் பற்றி தவறாகப் பேசுவதற்கு நான்கு பேர் இருப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
 நம்மை பற்றி முதலில் நம்முள் கேள்வி எழுப்ப வேண்டும். நம்மை உற்று நோக்க வேண்டும். பிறர் கூறியதை விடுத்து, நம்மை நாமே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு மதிப்பிடும்போது, நம்மை பற்றிய நிறை, குறைகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு நம்மை நாம் கண்டறியும்போது நம்மை நாம் முழுவதும் நேசிக்கத் தொடங்கியிருப்போம்.
 க.நந்தினி ரவிச்சந்திரன்
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

காடுகளில் 11 ஆண்டுகள்...50 ஆயிரம் புகைப்படங்கள்!
கை அசைவால் இயங்கும் சக்கர நாற்காலி!
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 204 - ஆர்.அபிலாஷ்
விதி
அறிவால் உருவாகும் ஆரோக்கிய சமுதாயம்! விஞ்ஞானி வெ. பொன்ராஜ் (அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)