அக்ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நடராஜ், நா. ராசா ஆகிய இருவரும் தயாரித்து வரும் படம் "பூங்கா நகரம்'. தமன்குமார், ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள்.
அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒரு காதல் ஜோடி, இன்னொரு காதல் ஜோடிக்கு உதவி செய்யும் நிலை...
அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமே கதை. அதற்காக அந்த காதல் கடந்து வந்த தூரம், கொடுத்த விலை என கதை போகும். அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு'' என்றார்.