அந்த நாள்களில் எம்ஜிஆரின் படப்பிடிப்புகளின்போது மதிய உணவு வேளைகளில் அவரோடு சிலராவது ஒன்று சேர்ந்து உணவு அருந்துவர்.
ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு நாளன்று படப்பிடிப்புக்கு வரும்போது, எம்ஜிஆர் ஒரு கைப்பையோடு வருவார். அதன் உள்ளே தடுப்பை அமைத்து, ஒரு பக்கத்தில் நூறு ரூபாய் நோட்டுகளும், இன்னொரு பக்கம் பத்து ரூபாய் நோட்டுகளும் இருக்கும்.
அறைக்குள் ஒப்பனை செய்துகொண்டிருக்கும்போது தனக்கு புத்தாண்டு வாழ்த்து கூற வருவோருக்கு பணத்தை எடுத்து எம்ஜிஆர் கொடுப்பார்.
புத்தாண்டு நாளன்று கைராசிக்காக, எம்ஜிஆரிடம் பணம் பெறுவதை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் திரைத் துறையினர் கொண்டிருந்தனர்.
அப்போது பணம் பெற வருகை தரும் கே.பாலாஜியிடம் எம்ஜிஆர் ""படம் எடுக்கிறதென்னவோ தம்பியை (சிவாஜி) வச்சி, பணம் வாங்குகிறது மட்டும் அண்ணன்கிட்டேயா? வாழ்க!'' என்பார். இதை கேட்டு பாலாஜி சிரித்துகொண்டே நழுவி விடுவார். ஆனால் அவர், "உங்களையும் (எம்ஜிஆர்) வைத்து ஒரு படம் எடுப்பேன்' என்று சொல்ல மாட்டார்.