ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் டீசரை, தமிழில் தனுஷும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர். வழக்கமான டீசரையும் தாண்டி அமைந்துள்ள இந்த காணொலிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் மும்முரமாக இயங்கி வருகின்றனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், ""எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' அமைந்துள்ளது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி," என்றார். விறுவிறுப்பான ஆக்ஷன் பாணியில் இப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014- ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை கலந்த மாபெரும் வெற்றிப் படமான "ஜிகர்தண்டா'வைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகி வருகிறது.