ஒருசமயம் பொதுக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது, சென்னை வால்டாக்ஸ் சாலையின் கடைசியில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியவாறு காமராஜரின் கார் வலதுபுறம் திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரிடம் காமராஜர், ""ஏம்பா... இப்படி திரும்பறே? வழக்கம்போல அந்தப் பக்கம் போய்விட்டு திரும்பி வாயேன்..'' என்றார் கண்டிப்புடன்.
கார் உடனே இடதுபுறம் திரும்பி மெமொரியல் ஹால் வரையில் சென்று அரசு பொது மருத்துவமனையை ஒட்டியவாறு வலதுபுறம் திரும்பிவர ஆரம்பித்தது.
போக்குவரத்து விதிமுறையின்படி, அப்படித்தான் வர வேண்டும். ஆனால் காரில் இருந்த ஒருவர், "" இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து குறையும். அதனால் கடைசி வரை போய் திரும்பி வர வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது'' என்றார்.
""நிர்பந்தம் இல்லை என்பதால் இரவில் போய் பழகிவிட்டால் இதே பழக்கம்தானே பகலிலும் வரும். நம்ம காரே இப்படி முறை தவறிப் போனால் அதைப் பார்த்து மற்றவர்களுக்கு அதிகமாகச் செய்யத் தோன்றாதா?'' என்று காமராஜர் கடுமையாகச் சொன்னார்.