தினமணி கொண்டாட்டம்

எல்லாவற்றுக்கும் 'எஸ்' சார்...!

17th Sep 2023 02:39 PM | முக்கிமலை நஞ்சன்

ADVERTISEMENT

 

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தனது வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்தார்.

அவர் கூறியதாவது:

'நான் கோயம்புத்தூரில் நாலாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் இரண்டு மாத விடுமுறையில் போயிருந்த டவுன் இன்ஸ்பெக்டருக்குப் பதிலாக எனது தந்தை இன்ஸ்பெக்டர் வேலை பார்த்துவந்தார்.  எங்கள் வீடு ஆரிய வைசியத் தெருவில் இருந்தது.

ADVERTISEMENT

அதே வீதியில் ஏழெட்டு வீடுகளுக்கு அப்பால் காவல் நிலையம். காலை நேரங்களில் போலீஸ் கச்சேரிக்கு அடிக்கடி செல்வேன். 

அப்படி ஒருநாள் சென்றபோது,  என் தந்தை இன்ஸ்பெக்டர் உடையில் கச்சேரி வாயிலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது தெருக்கோடியில் ஒரு வெள்ளைக்காரத் துரை தென்பட்டார். அவர் கச்சேரியை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

துரை தூரத்தில் வரும்போதே எனது தந்தை,  அட்டென்ஷனில் எதிர்நோக்கி நின்றார்.  நெருங்கி வரும்போது, சல்யூட்டும் அடித்தார்.

துரையும் தனது தொப்பியை எடுத்து பதில் மரியாதை செய்துவிட்டு ஆங்கிலத்தில் பேசினார்.  என் தந்தைக்கு ஆங்கிலம் தெரியாது.  குட்மார்னிங், குட் ஈவனிங், எஸ், நோ, ஆல்ரைட், வெரிகுட் என்று சில வார்த்தைகள் மட்டும் உச்சரிப்பார்.

துரை கேட்ட கேள்விகளுக்கெல்லாம் 'எஸ் சார், எஸ் சார்' என்று சொல்லிக் கொண்டே இருந்தார் என் தந்தை.

'உமக்கென்ன பைத்தியமா? எல்லாவற்றுக்கும் எஸ் சார் என்கிறீரே..' என்று துரை கேட்க, அதற்கும் எனது தந்தை, 'எஸ் சார்..'' என்று சொன்னார்.

இதனால் கோபமடைந்த துரையோ எனது தந்தையைப் பார்த்து, 'நான்சென்ஸ்' என்று கூறிவிட்டு, கச்சேரிக்குச் சென்றுவிட்டார்.'' 

ADVERTISEMENT
ADVERTISEMENT