தினமணி கொண்டாட்டம்

பாரம்பரியத்தைக் காக்கும் தெருக்கூத்து

1st Oct 2023 12:00 AM | வ.ஜெயபாண்டி, மதுரை

ADVERTISEMENT


புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம், முருகம்பாக்கம் கைவினைக் கலைஞர்கள் கிராம வளாகம் ஆகிய இடங்களில் அண்மையில் நடைபெற்ற "இந்திரஜித் தெருக்கூத்து' மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
மிருதங்கம் ஒலிக்க, சிறிய நாகஸ்வரம் போன்ற கருவிகள் இசைக்க, ஹார்மோனியம் ரீங்காரமிட, தாளத்துக்கேற்ப கம்பீரமாக வரும் இளைஞர் " வந்தேனே..வீரன் இந்திரஜித் வந்தேனே...தந்தானே..தந்தானே!' என ராகத்தோடு பாடுகிறார். கூடியிருக்கும் கூட்டமே கண்ணிமைக்க மறந்து கலையையும், வசன உச்சரிப்பையும் ரசிக்கிறது.
கம்பராமாயணத்தை தமிழ் வார்த்தையில் தெள்ளத் தெளிவாக பாடி நடிப்பது தமிழகத்தைச் சேர்ந்தவர்களல்ல; அந்த இந்திரஜித் தெருக்கூத்தில் வரும் 11 பாத்திரங்களுக்குரியவர்களும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் என்பது ஆச்சரியம்தானே! அதற்காக 25 நாள்களே பயிற்சி பெற்றுள்ளனர் என்பதும் வியக்க வைக்கிறது.
புதுதில்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியில் உள்ள நாடகத்துறை மூன்றாண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் 40 நாள்கள் பாரம்பரிய நாடகக் கலைப் பயிற்சி பெறுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டில் 24 மாணவ, மாணவியர் தமிழகத்தில் பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கர்நாடகம், அருணாசலப் பிரதேசம், புதுதில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி அருகே புரிசை கிராமத்தில் உள்ள பாரம்பரிய தெருக்கூத்து கலைமன்றமான "புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றம்' சார்பில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 23 இல் பயிற்சியை தொடங்கி, செப். 23இல் பயிற்சி முடித்து இந்திரஜித் தலைப்பிலான தெருக்கூத்தை புதுச்சேரியில் அரங்கேற்றியுள்ளனர். இவர்களுக்கான பயிற்சியை மன்ற இயக்குநர் பி.கே.சம்பந்தன் அளித்தார்.
இந்திரஜித் தெருக்கூத்தை பழைய வடிவம் மாறாமல் நவீன முறையில் அரங்கேற்றிவரும் வெளிமாநில மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரிந்து நாடகத்தை 11 கதாபாத்திரங்கள் மூலம் இரண்டரை மணி நேரம் நடத்துகின்றனர்.

சீதையை சிறைஎடுத்த ராவணன் மீது ராமர் போர் தொடுக்கும் நிலையில், இந்திரஜித்தின் நிலையை விளக்கும் வகையில் அமைந்துள்ளது அந்தத் தெருக்கூத்து. அதில், இந்திரஜித்தாக கர்நாடகத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் உள்பட 3 பேர் நடிக்கின்றனர். தெருக்கூத்தில் மண்டோதரியாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரார்த்தனா உள்ளிட்ட 3 மாணவியர் மாறி மாறி நடிக்கின்றனர்.
இதுகுறித்து மஞ்சுநாத் கூறியதாவது:
"" நாடகக் கலைக்காக தமிழ் மொழியை கம்பராமாயண இதிகாசத்துடன் சேர்ந்து கற்றது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் கற்பது கடினம் என நினைத்தேன். ஆனால், ராமாயணப் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கவேண்டியிருந்ததால் எளிதாகவே தமிழ் தெருக்கூத்து பாடல்களைப் பாடமுடிகிறது. இதேதான் எங்களது ஒட்டுமொத்த மாணவர்களின் நிலையும்'' என்றார்.
தெருக்கூத்து மன்ற இயக்குநர் பி.கே.சம்பந்தம் கூறுகையில், ""தெருக்கூத்து பயிற்சியை கண்ணப்ப தம்பிரான் காலத்திலிருந்து 50 ஆண்டுகளாகப் பயிற்றுவித்துவருகிறோம். வெளிமாநிலத்தவர்கள் மட்டுமின்றி, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் எங்களிடம் தெருக்கூத்து பயிற்சி பெற்றுச்செல்கின்றனர்'' என்கிறார்.
நாடகத்தின் உதவி இயக்குநர் எம்.பழனிமுருகன் கூறுகையில், ""தமிழின் இயல், இசை, நாடகம் என அனைத்து பிரிவுகளையும் தெருக்கூத்து உள்ளடக்கியுள்ளது. ஆகவே, தெருக்கூத்தை கற்பதன் மூலம் முத்தமிழையும் கற்கமுடியும். தெருக்கூத்து மூலம் தமிழை எந்த நாட்டவரும் எளிதில் கற்கலாம். நம்மூர் இளந்தலைமுறையும் தெருக்கூத்தை கற்பது நமது பாரம்பரியத்தை காக்க உதவும்'' என்கிறார்.

படங்கள் கி.ரமேஷ்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT