தினமணி கொண்டாட்டம்

ரத்த தானத்துக்கு வழிகாட்டும் இயந்திரம்

1st Oct 2023 12:00 AM | வெ. முத்துராமன்

ADVERTISEMENT

 

மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக வருவோருக்கு ரத்தம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால், மனித உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பி.பி.வி. சாலை மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எம். கிருஷ்ணபிரசாத், கே. சக்திப்ரியன் ஆகிய இருவரும் அறிவியல் தொழில்நுட்பப் பயிற்சியாளர் ஆர்.வெங்கடேஷ் உதவியுடன் ரத்த தானம் பெற புதிய இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஏ.டி.எம். போல், கொடையாளர்கள் தங்களது ரத்த வகை, முகவரி, கைப்பேசி எண் முதலியவற்றை பதிவேற்றம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட மருத்துவர், கணினி மூலம் உடனடியாக அறிய முடியும். அதன்படி, நோயாளிகளுக்கு உடனடி தேவையான ரத்த வகையை, இடைத்தரகரின்றி உடனடியாகப் பெற்று சிகிச்சை அளிக்க முடியும்.

இதுகுறித்து ஆர். வெங்கடேஷ் கூறியதாவது:

ADVERTISEMENT

""நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள் பொது சேவைக்காக 2 முதல் 5 சதவீத நிதியை மத்திய அரசுக்கு செலுத்தி வருகின்றன. இந்த நிதி மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் "அடல் டிங்கரிங் ஆய்வகம்' ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வகத்தை தனியார் தொண்டு நிறுவன அமைப்பான "லேனிங் லிங்ஸ் பவுன்டேஷன்' நடத்தி வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 11 பள்ளிகளில் இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. பாடத் திட்டத்தைத் தாண்டி, அறிவியல் உபகரணங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படும். அப்போது மாணவர்கள் எம். கிருஷ்ண பிரசாத், கே. சக்தி ப்ரியன் ஆகிய இருவரும் ரத்தம் கிடைக்காமல் உயிரிழக்கும் நோயாளிகள் குறித்து தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காலதாமதமின்றி நோயாளிகளுக்கு ரத்தம் கிடைக்கவும் வழிவகை தேடினோம். இருவரும் சேர்ந்து ஏ.டி.எம். வடிவில் ஒரு கருவியை, என்னுடைய வழிகாட்டுதலின்பேரில் கண்டறிந்தோம்.

இந்தக் கருவியை அரசு மருத்துவமனைகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் முதலான இடங்களில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறுவ உள்ளோம். இந்த இயந்திரத்தில் ரத்த தானம் அளிக்க விரும்புவோர் தங்களது ரத்த வகை, முகவரி, கைப்பேசி எண்களைப் பதிவிட்டால், தகவல்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவருக்குச் சென்றுவிடும். இதன் மூலம் இடைத்தரகர்கள், கால தாமதமின்றி நோயாளிகளுக்கு உரிய ரத்தம் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

க்யூ ஆர் கோடு மூலமும், ரத்தம் வழங்க பொதுமக்கள் கூடும் இடங்களில் வில்லைகளை ஒட்ட உள்ளோம். இதன் மூலம் மருத்துவமனைகளில் ரத்தம் பற்றாக்குறை இருக்காது,சிகிச்சை தாமதமின்றி உயிரிழப்பு தடுக்கப்படும்.

சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில் 70 பள்ளிகளைச் சேர்ந்த 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பாலையம்பட்டி பள்ளி மாணவர்களின் ரத்த தானத்துக்கு வழிகாட்டும் இயந்திரம் முதல் பரிசை வென்றது. இந்த மாணவர்களின் ஆய்வக உதவிக்கு உதவியாளர் முருகபாண்டி பேருதவி புரிந்தார்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT