வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கின்றன. அப்படித்தான் இது. பெரிய திட்டமிடல் இருந்தது. எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி. முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு பேசுகிறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசித்துதான் சொல்கிறேன்.'' ஆர்வமாகப் பேசத் தொடங்குகிறார் டி.எம். ஜெயமுருகன். "ரோஜா மலரே', "அடடா என்ன அழகு' படங்களை இயக்கியவர். இப்போது "தீ இவன்' படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்குகிறார்.
கார்த்திக், சுகன்யா.... ஜோடியை மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...
எல்லாமே திட்டமிட்ட ஒன்றுதான். இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாகப் பேச வேண்டிய விஷயம் இது. அதை எடுத்துச் சொல்ல எல்லோருக்கும் தெரிந்த முகங்கள் வேண்டும். அதற்குத் துணையாக வந்தவர்கள்தான் கார்த்திக், சுகன்யா. இருவருக்கும் ஒரு இமேஜ் உண்டு. அது இந்தக் கதைக்காக சரியாகப் பொருந்தி வந்திருக்கிறது. கார்த்திக் யார் என்று விளம்பரப்படுத்தி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. பார்த்தாலே தெரிந்து விடும். கார்த்திக் சாருக்கு சினிமா பற்றி நல்ல கனவுகள் உண்டு. சிறு வயதில் இருந்தே சினிமாவில் பயணிக்கிறவர், அதுகுறித்தே யோசித்துக் கொண்டிருப்பவர். அந்த அர்ப்பணிப்புக்கு இன்னும் ஒரு தகுதியை உண்டாக்கி தரும் விதமாக இந்தப் படம் இருக்கும். ஷூட்டிங் சரியாக வர மாட்டார். சரியாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார் என்றெல்லாம் அவர் மீது ஒரு முத்திரை உண்டு. படப்பிடிப்புக்கு இடைவெளியில் அது பற்றி ஒரு பேச்சு வந்தது. "" ஜி... நீங்கள் சொல்லுவது மாதிரி நடந்திருந்தால்.. எப்படி 100க்கும் அதிகமான படங்களில் நான் நடித்திருக்க முடியும்...'' என்றார். அதோடு அந்த பேச்சு முடிந்து விட்டது. எல்லாவற்றுக்கும் அதுவே பதில். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இறுதி காலத்தில் கரோனா உச்சத்தில் இருந்தது. அப்போது கார்த்திக் சாருக்கு விபத்தில் காலில் காயம்... அந்த நிலையிலும் கேரவனுக்கு செல்லாமல் காரில் அமர்ந்திருந்து வந்தே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சம்பளத்தில் எனக்கு சுகம் செய்தார். சுகன்யா மேடமும் அப்படித்தான். எனக்கு இருவரும்தான் பலம். இவர்களுடன் சுமன்.ஜெ. ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, "சேது' அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன் இப்படிப் பலர் நடிக்கிறார்கள். எல்லோருக்கும் தனித்தனி இடம்.
கதை என்ன....
ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்குப் பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். கலாசாரம், பண்பாட்டுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.
பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...
தில்லியில் தன் நண்பனோடு கைகோர்த்துப் போன மருத்துவ பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரத்தமும் துடிப்புமாக அல்லாடிய அந்தப் பெண் மனதில் எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்? தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக் கிராமங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கண்டும் காணாமலும் நாம் கடந்து கொண்டுதான் இருக்கிறோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது யாரையும் பலாத்காரப்படுத்த அல்ல... பத்திரமாய் பாதுகாப்பதற்கு. சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள். அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தராத இந்த சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இருக்கும்.
பாடல், இசை என உங்களுக்கெனத் தனி முகம் உண்டு...
"ரோஜா மலரே', "அடடா என்ன அழகு' இந்த இரு படங்களின் பாடல்களும் இப்போதும் ஹிட் பட்டியலில்தான் இருக்கிறது. இடம், பொருள், ஏவல் பார்த்தெல்லாம் பாட்டு நமக்கு வராது. சூழல் சொன்னால், பாட ஆரம்பித்து விடுவேன். இது என்னுடைய தனித்திறமை. பாட்டை கேட்பவர்கள் எல்லாம், ஒரு நட்சத்திர நடிகர் படத்தில் இந்தப் பாடலை வைத்தால் வேறு இடத்துக்கு உங்கள் பெயர் போகும் என்று சொல்லுவார்கள். அதில் நமக்கு நாட்டமில்லை. என் உணர்வுகள், சினிமா என்றுதான் யோசிக்கிறேன். பணம் எப்போதுமே முக்கியமாகப் பட்டதில்லை. அதனால் எந்த யோசனையும் கிடையாது. இந்தப் படத்திலும் 7 பாடல்கள் வரை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு கலர். எல்லாமே அடுத்த பல வருடங்களுக்கு நீங்கள் விரும்பும் பாடல்களாக இருக்கும். ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்து கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம் மனிதர்களாகிறோம் என்பது நம்பிக்கை.