தினமணி கொண்டாட்டம்

தடைகளைத் தாண்டிய பயணம்..! 

1st Oct 2023 12:00 AM | பா.சுஜித்குமார்

ADVERTISEMENT

 

ஈரோட்டைச் சேர்ந்த தெற்கு ரயில்வே ஊழியர் ஆறுமுகம் மனைவி திலகவதி, புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு விளையாட்டாகத் தொடங்கிய புகைப்பட ஆர்வமானது தினசரி நிகழ்வாகிவிட்டது. தற்போது தமிழகத்தில் 92 இடங்களில் சுமார் 110 குடைவரை கோயில்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடைவரை கோயில்களை படம் பிடித்திருக்கிறார்.

அவருடன் ஓர் சந்திப்பு:

புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

ADVERTISEMENT

எனது சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம். சிறுவயதிலிருந்தே கட்டடங்கள், கோயில்கள், சிற்பங்கள் மீது எனக்கு தீராதக் காதல் உண்டு. அவற்றை எனது கனவுகளுடன் சேர்த்து புகைப்படங்களைத் தொகுத்துள்ளேன்.

நான் கைப்பேசியில் எடுத்த வீடுகள், பூக்கள், மரங்கள், சமையல், வீட்டுக்கு அருகிலிருக்கும் கோயில்கள்... என சிறிய உலகுக்குள் சுற்றி சுற்றி புகைப்படங்களை எடுத்தேன். அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். நண்பர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்தது. அதுவே புகைப்படக் கலை மீதான காதலை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கியது.

என் கணவர் ஆறுமுகம் என் பிறந்த நாளுக்கு டி.எஸ்.எல்.ஆர். காமிராவை பரிசளித்தார். அதன்வாயிலாக, இன்னும் சிறப்பாகவே பணி தொடர்கிறது.

குடைவரைக் கோயில்களைப் படம்பிடிக்க ஆர்வம் ஏற்பட்டது ஏன்?

தமிழர்களின் வரலாறை படம்பிடித்து ஆவணப்படுத்தி, புகைப்படத் தொகுப்பை தீராதக் காதலை கொஞ்சம் தீர்த்துக் கொள்ள நான் எடுத்து வைத்த ஒரு சிறு முயற்சியே இந்த குடைவரை கோயில்கள். தமிழகத்தில் உள்ள குடைவரை கோயில்களைப் பற்றி விவரம் சேகரிக்க தொடங்கினேன்.

92 இடங்களில் சுமார் 110 குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. அவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கலை வடிவம் பெற்றவையாகும். மேலும் மேற்கு வங்கம், அஸ்ஸாம், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கலைத்திறன் மிக்க இடங்கள் மிகவும் பிடித்தமானவை.

பயணம் செய்ய தொடங்கினேன்; படம்பிடிக்கத் தொடங்கினேன். தடைகள் பல கடந்து பயணித்து கொண்டிருக்கிறேன். இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட குடைவரை கோயில்களை படம் பிடித்திருக்கிறேன்.

முடிந்தவரை அனைத்து குடைவரை கோயில்களையும் படம் பிடித்து தகுந்த தரவுகளுடன் கட்டடக்கலையை நூலாக்கி, அடுத்தடுத்த தலைமுறைக்கு உயிர் மாறாமல் கடத்த வேண்டும் என்பதே என் தற்போதைய அதிகபட்ச ஆசை, மற்றும் கனவு என்றும் கூட சொல்லலாம்.

இந்தப் பயணத்தில் எனக்கு துணை நிற்கும் என் கணவர், நண்பர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்கள் உடனிருக்கின்றனர்.

சிறகுகள் பூட்டிக் கொள்வேன். பறவைகளுக்கு உலகம் கூடல்ல வானம். எனக்கும் தனியாய் ஒரு உலகமும் வானமும் இருப்பதாக எண்ணிக் கொண்டு அங்கு நானும் என் கேமராவும் அலைந்து திரிவோம்.

நீங்கள் மிகவும் ரசித்த குடைவரைக் கோயில் எது?

"ஒருகல் மண்டபம்' என்று அழைக்கப்படும் திருக்கழுக்குன்றம் குடைவரை கோயில்தான். செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கி. மீ. தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றம் குன்றில் அமைந்துள்ளது. இது 1,400 ஆண்டுகால தொன்மை வாய்ந்ததாகும். 550க்கும் மேலான செங்குத்தான படிகளையும் கொண்டது.

கி.பி. 610640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய "குடைக்கூளி' எனும் குடைவரை உள்ளது. இது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுகள் இங்கே கிடைத்துள்ளன. பேருந்து நிறுத்தத்தை ஒட்டியவாறு மேலெழும் நன்கு திருத்தமாய் அமைக்கப்பட்டிருக்கும் அகன்ற படிவரிசை குன்றின் மேலேறிச் செல்ல உதவுகின்றன. குடைவரைக்கு சற்று உயரே படிகளைக் கடந்து சென்றால் கீழே மரகதப் பச்சை வயல்களில் திருக்கழுக்குன்றம் ஊரின் அழகும், மையமாய் பக்தவத்சலேசுவரர் கோயிலும், சங்குத் தீர்த்தமும்கண்களுக்கு விருந்தாய் விரியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT