தினமணி கொண்டாட்டம்

பெண்கள் சமையலில் ஜொலிக்க...!

28th May 2023 12:00 AM | பா.சுஜித்குமார்

ADVERTISEMENT


"உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதர்களுக்கு அத்தியாவசியத் தேவைகள். ஆனால், இன்றைய பெண்கள் பலர் உணவு சமைத்தலை சரியாக அறிவதில்லை. இவர்கள் சமையல் கலையில் சிறந்து விளங்கி வீட்டில் உள்ளோரை மகிழ்ச்சி அடைய செய்தும், பணிபுரிந்து சம்பாதிக்கவும் ஓர் அருமையான வாய்ப்பு உள்ளது'' என்கிறார் காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லூரியின் உணவு அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியை வண்டார்குழலி.

அவரிடம் பேசியபோது:

நவநாகரிகப் பெண்கள் இப்போது சமையல் அறைக்குச் செல்வதே இல்லை. இன்றைய விவகாரத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று பெண்ணுக்கு சமையல் தெரியவில்லை என்பதாகும். இந்த நிலையைப் போக்க, பெண்கள் சமையல் அறிவியலையே படிக்கலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு நாவுக்கு ருசியாகச் சமைத்தும், நோய்களை அறிந்து அதற்கேற்ப "உணவு மருத்துவர்'-
ஆகவும் செயல்படலாம்.

உண்ணும் உணவு உற்பத்தி செய்யப்படுவது முதல் உடலுக்குள் உணவாகச் செல்வது வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் அறிவியல் நுட்பங்களுடன் ஆராய்ந்து படிப்பதுதான் உணவு அறிவியல் துறை. வேளாண் அறிவியலின் அடிப்படையையும், ஊட்டச்சத்து அறிவியலின் நுட்பங்களையும் ஒருங்கிணைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் 12 ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுடன் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், மனையியல் போன்ற அறிவியல் பிரிவு பாடங்களைப் படித்திருக்க வேண்டும்.

இளங்கலை பிரிவில் நோய்களுக்கான உணவுமுறை, உணவுக்கட்டுப்பாடு தொடர்பான படிப்புகள் உள்ளன. மனித உடலியங்கியல், உடலுறுப்புகளில் ஏற்படும் நோய்கள், அதன் அறிகுறிகள், அவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான உணவு முறை மாற்றங்கள், உணவுக்கட்டுப்பாடு சார்ந்த வழிகாட்டுதல்கள், உணவுப் பொருள்களை உருவாக்குதல், பக்குவப்படுத்துதல், உணவு பதப்படுத்துதல், உணவிலுள்ள அறிவியல் கூறுகளை ஆராய்ந்துப் படித்தல், உணவு வேதியியல், புலன் உணர்வுச் சோதனைகள், உணவின் தரம் பரிசோதிக்கும் செயல்முறைகள், உணவிலிருக்கும் நுண்ணுயிர்கள், அவற்றுக்கான சோதனைகள் போன்றவை உள்ளன.

முதுகலைப் படிப்பையும், முனைவர் ஆராய்ச்சிப் முடிப்பவர்களுக்கு அடுத்த சிறப்பு நிலை பணிவாய்ப்புகள் அதிகம்.

மருத்துவம், உணவகத் துறையில் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தற்போது பெருகி இருக்கும் நீரிழிவு, உடற்பருமன்,இதயம், சிறுநீரக நோய்கள் போன்றவற்றுக்கு மருத்துவமனைகளிலும், விளையாட்டு வீரர்களுக்கு உணவு ஆலோசனை வழங்கவும் சிறப்பு மருத்துவ உணவியல் வல்லுனர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.

பரவலாகக் காணப்படும் உணவு, ஊட்டச்சத்து தொடர்பான குறைபாடுகளான ரத்தச் சோகை, வைட்டமின் குறைபாடு, அயோடின் சத்து குறைபாடு, நீரிழிவு நோய் போன்றவற்றுக்கான உணவு ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை அளிக்கலாம்.

அரசு சாராத உணவும் உடல் நலனும் சார்ந்த நிறுவனங்கள், உணவு சார்ந்த ஒழுங்குமுறை ஆணையங்கள், உணவியல் தொடர்பான பத்திரிகைத் துறை உள்ளிட்ட பல்வேறு பணிவாய்ப்புகள் உள்ளன என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT