தினமணி கொண்டாட்டம்

இது ஓர் அழகான பயணம்!

28th May 2023 12:00 AM | ஜி.அசோக்

ADVERTISEMENT

 

""சினிமாவில் எனக்கென ஒரு வேகம் வைத்து ஓடிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது நடிக்கிற படங்கள் பற்றிதான் மனதில் நினைப்பு ஓடிக் கொண்டிருக்கும். அதுவும் சமீபமாக ரொம்பவே ஸ்பெஷல். "டி பிளாக்', "தேஜாவு', "டைரி', "துணிவின் குரல்' இப்போது வந்திருக்கிற "கழுவேத்தி மூர்க்கன்' வரை எல்லாமே ஸ்பெஷல். இது சந்தோஷம் என்றாலும், எனக்கு பொறுப்பு அதிகமாகி இருக்கிறது என்று தோன்றுகிறது. இனி என் படங்களைப் பற்றி நான் பேசாமல், ரசிகர்களை பேச வைக்க வேண்டும்....'' குறு குறு கண்களும் கிடா மீசை சிரிப்புமாக அருள்நிதியிடம் பேசும் போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக் கொள்கிறது.

அடுத்தடுத்து படங்கள் வெளியீடுகள்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்....

அருமையான பயணம். பரவசமும் இருக்கிறது. அதே சமயம் பயம். தாத்தாவுக்கு நான் சினிமாவுக்கு வருவேன் என்று தெரியாது. அப்பாவும் அப்படித்தான். படிப்பின் அருமை தெரிந்தவர் அப்பா. அப்போது அவருக்கு அதுதான் முக்கியமாக இருந்தது. பாண்டிராஜ் சாரை சந்தித்த நேரம் மிகப் பெரும் திருப்பு முனை. "வம்சம்' மாதிரி ஒரு படத்துக்கு தயாராகி வருவேன் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். குறிப்பாக அது மாதிரியான ஒரு எதிர்பார்ப்பை நான் என் ஒவ்வொரு படத்திலும் உணர்கிறேன். கடந்து வந்த அத்தனை படங்களிலும் என் அபரிமிதமான உழைப்பு இருக்கிறது. வெற்றி, தோல்வி என்பதெல்லாம் அடுத்தக் கட்டம். என் வேலையில் திருப்தி அடைந்திருக்கிறேன். அதுவே மன நிறைவு. பிசிக்கல், ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ் இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனின் வாழ்க்கை. தாத்தா, அப்பா பார்த்து வளர்ந்தவன். இதைத்தான் என் சினிமாக்களுக்கான எரிபொருளாக வைத்திருக்கிறேன். ஒரு நடிகன் தன் இமேஜை, இடத்தை தக்க வைத்தே தீர வேண்டும். இருபது, முப்பது வருடங்களாக ஒரு நடிகனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற ரசிகர்கள் திடீரென்று அவனை வெறுக்க ஆரம்பித்தால், அதற்கு முழு காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் மனதில் எப்போதும் ஓட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

ADVERTISEMENT

புதுமுக இயக்குநர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்கும் நடிகராக இருக்கிறீர்கள்.... பிரம்மாண்டம், முன்னணி ஹீரோயின் என திட்டம் இல்லையா...

ஒவ்வொரு இயக்குநரும் ஒரு விதத்தில் சிறப்பு. ஒருவர் புதுப்புது டெக்னிக்கை கொண்டு வருவதில் வித்தை காட்டுவார். சிலர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். இன்னும் சிலர் பி அன்ட் சி சென்டர் வரை இறங்கி அடிக்க வேண்டும் என விரும்புவார்கள். கதை என்பது தானாக நிகழ்வுது. அது எனக்கு பிடித்தால் அதில் நான் இருப்பேன். இப்போது உங்கள் பார்வைக்கு வந்திருக்கிற "கழுவேத்தி மூர்க்கன்' கதை கூட, எங்கேங்கோ போய் வந்த கதைதான். இன்னும் சில ஹீரோக்களுக்கு கூட சொல்லப்பட்ட கதை. என்னிடம் வந்தது பிடித்துக் கொண்டேன் அவ்வளவுதான். படம் பார்த்தவர்களுக்கு புது பரவசம். எனக்கே இது புது அனுபவம். ஒரு சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் மனதில் நிற்க வேண்டும். அதை எங்கள் உழைப்பு ரசிகர்களுக்கு கொடுத்திருப்பதாக உணர்கிறேன். ஒரு சினிமா பார்வையாளர்களுக்கு எதாவது ஒரு விஷயத்தை கடத்த வேண்டும். இந்தப் படம் கடத்திருக்கிறது. நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவு உண்டு. அடுத்தடுத்து அது நிகழும்.

எப்படி இருக்கிறது சினிமா பயணம்....

இது ஓர் அழகான பயணம். எல்லா ஹீரோக்களுக்கும் வருடத்துக்கு மூன்று படங்கள் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் நடிக்கிற படங்கள் அப்படி சின்ன சின்ன இடைவெளியில் முடியாததாக இருக்கிறது. காடு, மேடெல்லாம் சுற்றி, கிராமத்தில் திரிந்த முதல் படம் முதல்.... மழை, வெயில் பார்க்காமல் அலைந்த "மௌன குரு' படம் வரை பெரும் உழைப்பு இருக்கிறது. அதை விட ஒவ்வொரு படத்துக்கும் ரிகர்சல் அதிகம் எடுத்துக் கொள்வேன். அரசியல், சினிமா என அடையாளங்கள் முன் நின்றாலும், சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். எந்த இடத்திலும் சறுக்கி விடக் கூடாது என்பதில் நிதானம் வைக்கிறேன். அதனாலேயே அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொள்ள முடியவில்லை. இப்போது இன்னும் வேகமாக ஓட வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்து கமர்ஷியல் பேக்கேஜ், நல்ல கதை என நிறைய திட்டங்கள் இருக்கின்றன.

சினிமா ஐடியா எந்தளவுக்கு மாறியிருக்கிறது?

சினிமா அவ்வளவு ஈஸி இல்லை இணையதளம், விமர்சனங்கள், பைரசி என சினிமாவுக்கு நிறைய எதிரிகள் இருக்கும் பட்சத்தில், ஆதரிப்பவர்கள் யாருமே இல்லை. இதுதான் இன்றைய சினிமாவின் பெரும் சோகம். ஒரு கதை இருந்தால், அதற்கான கேரக்டர் தானாகவே விரிவடைந்து வரும் என ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். சினிமா பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் முன்பிருந்த ரசனை இப்போது இல்லை. நிறைய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால் ரசிர்களுக்கு ஏற்ற மாதிரி சினிமாக்கள் கொடுக்க வேண்டும். இது மட்டும்தான் சினிமாவில் இருக்கிற ஆரோக்கியமான விஷயம். ஒரு நல்ல கதை இருந்தால், ரசிகர்களின் ஆதரவும் நிச்சயம் உண்டு என சினிமா மாறி வந்திருப்பதில் சந்தோஷம். எங்கிருந்தோ வந்து விழுகிற ஒரு வாழ்த்து, ஒரு புன்னகை, அழுத்தமான கைக் குலுக்கல் இதெல்லாம் இன்னும் சந்தோஷம்.

சம கால ஹீரோக்களில் யாரை பிடிக்கும்....

எல்லோருமே பெஸ்ட்தான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT