தினமணி கொண்டாட்டம்

அறிவியல் வளர்க்கும் ஆசிரியை!

சா. ஜெயப்பிரகாஷ்

போபாலில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில், "சிறந்த எக்ஸிபிட்டர்' விருதைப் பெற்று வந்திருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை தொடர்ந்து மாணவர்களுக்கு எளிமையாக அறிவியல் அறிவை ஊட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட கம்மங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியை செ. மைதிலி (36). இவர் வேதியியலில் முதுநிலைப் பட்டம், கல்வியியலில் முதுநிலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர்,  எம்.ஃபில். பட்டங்களைப் பெற்றவர். 8 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் மைதிலி செய்துள்ள சாதனைகள் குறிப்பிடத்தக்கவையாகும். 

இவரது முயற்சியால் மத்திய அரசின் "இன்ஸ்பையர்' விருதுகள் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு கிடைத்துள்ளன.  அதாவது,  தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசைக் கொண்ட இவ்விருது 2018-19ஆம் ஆண்டில் மூவருக்கும், 2019-20ஆம் ஆண்டில் மூவருக்கும், 2021-22-இல் இருவருக்கும் கிடைத்திருக்கிறது.

இவரது வழிகாட்டலில் நிகழாண்டின் மாநிலப் போட்டிக்கு இவரது மாணவர் பி. பாலமுருகன் (8ஆம் வகுப்பு) கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அறிவியல் ஆய்வுடன் சென்றிருக்கிறார். முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

தேசியத் திறனறித் தேர்வில் இவரது மாணவர்கள் 14 பேர் தேர்ச்சி பெற்று மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற்று வருகின்றனர். "விவிஎம்' என்றழைக்கப்படும் "வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்' தேர்வை இவரது மாணவர்கள் 23 பேர் எழுதியுள்ளனர்.

"சிறந்த ஆசிரியர்', "கனவு ஆசிரியர்', "புதுமை ஆசிரியர்' போன்ற விருதுகளைப் பெற்றுள்ள மைதிலி, கடந்த ஜனவரியில் போபாலில் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் பங்கேற்று, "சிறந்த எக்ஸிபிட்டர்' விருதைப் பெற்று வந்திருக்கிறார்.

மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற 15 ஆசிரியர்களில் புதுக்கோட்டையில் இருந்து சென்ற ஒரேயொரு ஆசிரியர் மைதிலி மட்டுமே!

மதுரையைச் சேர்ந்த "கலிலியோ அறிவியல் மன்றம்',  திண்டுக்கல் "வானொலிக் கல்வி'  ஆகியவற்றின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் மைதிலியின் எளிய அறிவியல் மாதிரிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

எளிய தொலைநோக்கி (டெலக்ஸ்கோப்), மேஜிக் கண்ணாடி, சிடி நிறமாலை, நிலாவின் வெவ்வேறு நிலைகள், நானோ சோலார் மாதிரி போன்றவற்றை திருவிழாவுக்கு வந்தவர்களிடம் காட்டி விளக்கம் அளித்திருக்கிறார் மைதிலி. இதைத் தொடர்ந்தே அவருக்கு சிறந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மைதிலி கூறியதாவது:

""டிஎல்எம்  என்றழைக்கப்படும் "கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள்' தயாரிப்பதில் ஆர்வம் உண்டு. "கிராமப்புற  ஏழை, எளிய சாதாரண மாணவர்களுக்கு அறிவியல் மாதிரிகளை வைத்துக் கொண்டு எளிய முறையில் அறிவியல் புகட்டுவது மிகவும் பிடித்தமானது.

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT