தினமணி கொண்டாட்டம்

உதகை 200

4th Jun 2023 12:00 AM | பொ.ஜெயச்சந்திரன்

ADVERTISEMENT

 

கோடை காலத்தில் தமிழ்நாட்டில் எங்கே சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைத்தால்,  பெரும்பாலானோர் தேர்வு செய்யும் இடமாக உதகை உள்ளது. இயற்கைச் சூழலைத் தாண்டி கொளுத்தும் வெயிலின் தாக்கத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமையை சமாளிக்க ஏற்ற பகுதிதான் இது.

உதகை உருவாகி 200-ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி,  படகு சவாரி, குதிரை சவாரி, புகைப்படப் போட்டி, தேயிலை கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி, காய்கறி கண்காட்சி.. என தொடர்ந்து  நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அசெம்ளி திரையரங்கில் மே- 17-இல் தொடங்கி 23-ஆம் வரையிலும் நடைபெற்ற திரைப்பட நிகழ்வில் ஆஸ்கர் விருது பெற்ற ஆவண குறும்படம்,  நீலகிரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மூலமாக ஏப்ரல் 16 முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மரபுவழி நடை பயணம் தொடங்கப்பட்டு. உதகமண்டலம், ஆதாம் நீறுற்று, அசெம்ளி திரையரங்கம். நீலகிரி நூலகம், மாவட்ட நீதிமன்றம், ஸ்டீபன் தேவாலயம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பீரிக்ஸ் பள்ளி போன்ற பல்வேறு இடங்களுக்கு மாணவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அழைத்துச் சென்று வந்தனர். மே 28-இல் இந்தப் பயணம் நிறைவடைந்தது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 125-வது மலர்க் கண்காட்சி 19-இல் தொடங்கி 23-இல் நிறைவு பெற்றது. 

விழாவை ரசித்த சிலரிடம் பேசியபோது:

பட்டிமன்றப் பேச்சாளர் கனிமொழி பிரகாஷ்,  திண்டுக்கல்:

உதகை கோடைவிழாவில், வண்ண அலங்காரத் தோரணமாய் மலர்கள், கண்ணுக்கு குளிர்ச்சியாக, பச்சை பசுமையாக புல்வெளியில் சிறுத்தை, பாண்டா கரடி, டால்பின், கடற்பசு போன்றவற்றின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.  பாரம்பரியக் கலைகளை மதிக்கும் பொருட்டு ஆங்காங்கே சிற்ப வடிவங்கள், மொத்தத்தில் இயற்கை அன்னையின் மடியில் நின்ற பெருமிதம் அடைந்தேன்.  ஒவ்வொரு குடும்பமும், பண்டிகை, சுபகாரியங்களுக்கு ஒதுக்கும் செலவுகள் பட்டியலில் சுற்றுலாவையும் சேர்க்க வேண்டும்.  அப்போதுதான் குழந்தைகளுக்கு படிப்பைத் தாண்டி புதுமையான மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் கொடுக்க முடியும்.

கா.ஜோதிலட்சுமி, நூலாசிரியர், சென்னை: 

கிடைத்த விடுமுறையை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்.  சுற்றுலா என்பது ஜாதி, மதம், இனம், மொழி போன்ற தடைகளைத்  தகர்த்துவிடும் என்று கூட சொல்லலாம். இந்தியா என்பது மனம், ஆத்மா,  ஐம்புலன்களில் கண்டுபிடிப்பு.  மார்க் ட்வைன், 'உலகின் பிற நாடுகளைப் பார்த்தாலும்,  இந்திய நாட்டின் சுற்றுலா வளத்துக்கு ஈடாக அதை கருத மாட்டார்கள்'  என்று கூறினார். 

கோடை  விடுமுறை காலத்தில் ஐந்து நாள்கள் சுற்றுலா வந்தாலும்,  அனைத்து இடத்தையும் பார்த்துவிட முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.  சுற்றுலா மனிதனுக்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.  அன்றாடம் உழைத்து அலுத்துப் போன தொழிலாளிக்கு இன்பம் தருகிறது. இயந்திரங்களையே சந்தித்துக் கொண்டிருந்த தொழிலாளியின் மனதில் ஏற்படும் கவலையைப் போக்குகிறது.  

இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக, உதகையைக் கண்டுபிடித்த ஜான் சல்லீவனின் 5-ஆம் தலைமுறை குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஓரியல் சல்லீவன் பங்கேற்றிருந்தார்.  அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலை,  உதகை- மைசூர் சாலை போன்ற பல்வேறு இடங்களில் கூட்டமும் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் கோடை கால விடுமுறையை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT