தினமணி கொண்டாட்டம்

மனதில் உறுதி வேண்டும்...!

4th Jun 2023 12:00 AM | தி.நந்தகுமார்

ADVERTISEMENT

 


""போதைப் பழக்க வழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். நம் உறவுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். மூடநம்பிக்கைகளில் சிக்கிக் கொள்ளாமல், மனச்சிதைவின் அறிவுப்பூர்வமான உண்மைகளை உணர வேண்டும் என்கிறார் ஈரோடு அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவர்செ.ஆனந்த்.

அவருடன் ஓர் சந்திப்பு:

மன நலம் பாதித்தோரை எவ்வாறு கண்டறிவது?

ADVERTISEMENT

ஆடைகளில் கிழிசல், முகத்தில் வழிசல், குளிக்காத உடல், துவைக்காத உடை, சவரம் செய்யாத முகம், சிக்கு பிடித்த தலை முடி, தெளிவற்ற பார்வை, உணர்வற்ற முகம், இலக்கற்ற நடை, காரணமற்ற சந்தேகம், தேவையற்ற உற்சாகம், சிலரை அடிப்பார்கள், சிலரிடம் அழுவார்கள், சிலரை துரத்துவார்கள், சிலரை சீண்டுவார்கள், சிலரிடம் பயந்து ஒதுங்குவார்கள், தானே பேசுவார்கள், தானே சிரிப்பார்கள். சிலர் நிறைய பேசுவார்கள். சிலர் பேசவே மாட்டார்கள். மொத்தத்தில் சூழலுக்கும் செயலுக்கும் தொடர்பற்று இருப்பர். இவர்கள் மனநோயாளிகள். சூழலை புரிந்து கொள்ளும் சக்தியின்றி எந்த விஷயத்திலும் தவறான புரிதலைக் கொண்டிருப்பவர்கள்.

இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்?

ஐம்புலன்களைப் பிரித்து புரிந்து கொள்ளுதலில் ஏற்படுகின்ற பிரச்னைகள்தான் மனச்சிதைவு நோயின் மிக முக்கிய அங்கங்களாகக் கொள்ளப்படுகின்றன. அவை உளவியலில் "ஹாலூசினேஷன்" அல்லது "மாயத் தோற்றங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

யாரும் பேசாதபோதும் யாரோ பேசுகின்ற குரல் காதிலே கேட்கும். சில சமயங்களில் விலங்குகளின் சப்தங்கள் கூட கேட்கலாம். இதை "ஆடிட்டரி ஹலுசினேஷன்" அல்லது "மாயக் குரல்கள்" என்பர். இதன் விளைவுகள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். அந்த குரல்களுக்கு சிலர் பயப்படுவர். சிலர் கோபம் கொள்வர். சிலருக்கு குழப்பம் வரும். சிலர் தனித்திருப்பர். கூட்டத்தை தவிர்த்து இருப்பர். சிலர் அந்தக் குரலுக்குரிய நபரைத் தேடுவர். உடன் இருப்பவரை சந்தேகப்படுவர். சதி செய்வதாக நினைப்பர். அந்தக் குரல்கள் சொன்னதையெல்லாம் செய்வர்.

யாரும் அருகில் இல்லாதபோது கூட அருகிலிருப்பது போல பிம்பங்கள் கண்ணுக்குத் தெரியும். அச்சுறுத்துவது போன்று சில பூச்சிகளோ விலங்குகளோ ஆயுதம் தாங்கிய நபர்களோ தன்னைச் சுற்றி இருப்பது போலவும் சுவரில் ஊறிக் கொண்டிருப்பது போலவும் பிம்பங்கள் தெரியும். அவற்றை நம்புவர். பயப்படுவர். அதற்கும் உடனிருப்பவரை சந்தேகப்படுவர். இவற்றை "விஷுவல் ஹலுசினேஷன்" அல்லது "மாய உருவங்கள்" என்று குறிப்பிடலாம்.

உணவில் அல்லது நீரில் வித்தியாசமான சுவை இருப்பது போல தெரியும். அதில் ஏதும் விஷம் கலந்திருக்கிறதோ என்ற சந்தேகமும் வரும். அந்தப் பண்டத்தை அளித்தவர் மேல் கோபம் வரும். தன்னை கொல்ல நினைத்ததாய் சந்தேகமும் வரும். இவற்றை "கஸ்டேட்டரி ஹலுசினேஷன்" அல்லது "மாயச் சுவைகள்" என்று குறிப்பிடலாம்.

காற்றில் ஏதேனும் புகை, விஷம், ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற பொருள் அல்லது பீடி சிகரெட் கலந்திருப்பதாய் வாசனை தெரியும். அந்த இடத்தில் இருக்கவே பயப்படுவர். சந்தேகப்படுவர். இவற்றை "ஆல்ஃபேக்டரி ஹலுசினேஷன்" அல்லது "மாய வாசனைகள்" என்று அழைக்கலாம்.

தன்னை யாரோ தொடுவது போலவும், இழுப்பது போலவும், அடிப்பது போலவும், தலையில் உடலில் மற்ற பிற பாகங்களில் பூச்சிகள் ஊர்வது போலவும், கடிப்பது போலவும் உணர்வுகள் ஏற்படும். இன்னும் சிலருக்கு தோலுக்கு உள்ளே கூட பூச்சிகள் ஊர்வதாக உணர்வுகள் தெரியும். இவற்றை "டேக்டைல் ஹாலூசினேஷன்" அல்லது "மாயத்தொடு உணர்வுகள்" என்று குறிப்பிடலாம்.

"அசைக்க முடியாத தவறான நம்பிக்கைகள்". தனது வாழ்வின் அனுபவங்களில் பெற்ற உள்ளுணர்வில், புரிந்து கொள்ளும் திறனில் ஏற்படும் பாதிப்புகள். உளவியலில் "டெல்யுஷன்" என்று அழைக்கப்படுகின்றன.

"பிரமைகள்" என்று அழைக்கப்படும் இந்த மாயத்தோற்றங்கள் தவிர, மனச்சிதைவு நோயின் முக்கிய அங்கங்களாய் கருதப்படுபவை. "எண்ணப் பிறழ்வுகள்" அல்லது "அசைக்க முடியாத தவறான நம்பிக்கைகள்".

நோயாளியின் மனதில் தோன்றும் காரணமற்ற அசாதாரணமான குழப்பங்களில் தான் இந்த எண்ணப் பிறழ்வுகள் தொடங்குகின்றன. ஒரு சாதாரண மனிதனால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இந்த குழப்பங்கள் நோயாளியைப் பாதிக்கும்.

மனிதர்கள், பொருள்கள் என அனைத்தின் மேலும் சந்தேகம் வலுவாகும். அனைவரும் பகையாய்த் தெரிவர். இப்படியாக ஒருவர் மனதில் காரணம் இல்லாமல் முளைக்கும் இந்த சந்தேக பூதமே "எண்ணப் பிறழ்வு" அல்லது "டெல்யூஷன்" என்று அழைக்கப்படுகிறது.

எண்ணப் பிறழ்வுகள் பல வகைப்படும். தான் அனைவராலும் துன்புறுத்தப்படுவதாக என்னும் எண்ணப் பிறழ்வுகள், சூழலின் நிகழ்வுகள் அனைத்தும் தன்னைக் குறிப்பதாய் எண்ணும் எண்ணப்பிறழ்வுகள், தன்னை பிறர் கட்டுப்படுத்துவதாய் அல்லது வசப்படுத்துவதாய் நினைக்கும் எண்ணப்பிறழ்வுகள், காதல் அல்லது காமம் குறித்த எண்ணப் பிறழ்வுகள், தான் மட்டுமே உயர்ந்தவன்(ள்) என்ற எண்ணப் பிறழ்வுகள் போன்றவையும் மனச்சிதைவுக்குக் காரணமாகும்.

எதனால் இவை உண்டாகின்றன?

டோப்பமைன், செரட்டோனின் ஆகிய நரம்பு ஹார்மோன்களின் மிகை செயல்பாடு அல்லது குளுட்டாமைன், காபா ஆகிய நரம்பு ஹார்மோன்களின் குறை செயல்பாடு ஆகியவை மனச்சிதைவு நோய் வருவதில் மிக முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளன. மூளை வளர்ச்சியிலும் மேற்கண்ட நரம்பு ஹார்மோன்களின் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படக்கூடிய மாற்றமும் மனச்சிதைவு நோயைத் தரலாம்.

கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், கட்டுப்படுத்தப்படாத ரத்தக் கொதிப்பு, விட்டமின் டி குறைபாடு, முழுமையான ஊட்டச்சத்து குறைபாடு, பிரசவ காலத்தில் குழந்தைக்கு பிராணவாயு குறையும் அளவுக்கு ஏற்படும் சில பிரச்சனைகள், குழந்தையினுடைய மூளை மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி குழந்தையினுடைய எடை ஆகியவற்றை மிக அதிகமாக பாதிக்கக் கூடிய மருத்துவ பிரச்சனைகள் ஆகியவை மன சிதைவு உருவாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

உணர்வுகள், மனதின் சமநிலையைப் பாதிக்கும் அளவுக்கு ஒரு மனிதனின் குழந்தை பருவ வாழ்வில் ஏற்படும் பொருளாதார இழப்புகள், உயிர் இழப்புகள், உறவு இழப்புகள், உறுப்பு இழப்புகள், தொடர் பதற்றச் சூழ்நிலைகள் மற்றும் தொடர் தோல்விகள் கடுமையான மன அழுத்தத்தை மட்டுமல்லாது மனச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.

மூடநம்பிக்கைகள் குறித்தும், நோய்க்கான தீர்வும் என்ன?

"மனச்சிதைவு பில்லி சூனியங்களாலும், மாய மந்திரங்களாலும் பேய் பிசாசு, காற்று கருப்பினாலும் உண்டாகும், மனச்சிதைவு உள்ளவர்களுக்கு புத்தி சாதுர்யம் கிடையாது, எந்த வேலையும் பார்க்க முடியாது, மருத்துவமனைக்குள் மட்டுமே கட்டி வைத்திருக்கப்பட வேண்டும், வைத்தியம் கிடையாது' என்று கூறப்படுவது அனைத்துமே கட்டுக்கதைகள்தான்.

ஹார்மோன் பாதிப்பை சரி செய்யும் மருந்துகளை எடுத்துக் கொள்கின்ற வரையில் ஒரு சராசரியான வாழ்வை அந்த நபரும் வாழ முடியும்.

மனச்சிதைவானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஒதுக்காமல், அவமதிக்காமல் அவருடைய சிகிச்சைக்கும் மறுவாழ்வுக்கும் உதவ வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT