தினமணி கொண்டாட்டம்

இது உலக பெண்களுக்கான கதை !

ஜி. அசோக்


"ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம். ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனுஷங்களா ஆகிறோம் என்பது நம்பிக்கை.'' பேச்சில் ஈர்க்கிறார் இயக்குநர் ஆர். கண்ணன். மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களும் கொண்டாடி தீர்த்த" தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை தமிழுக்கு கொண்டு வருகிறார். "ஜெயம்கொண்டான்', "கண்டேன் காதலை' உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர்.

மலையாள ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த படம்.... தமிழுக்கு வருகிறது என்ன எதிர்பார்க்கலாம்.....

இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. ரீமேக் படம் என்பதால், இமேஜூக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வையை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது. எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. மலையாளத்தில் நிமிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்.

ரீமேக் செய்வதில் என்ன சவால்....

மலையாள படத்தில் வசனங்கள் குறைவு. இங்கே கொஞ்சம் சேர்த்திருக்கிறோம். கிச்சன் தொடர்பான ஒலிகளை மலையாள சினிமாவில் அழகாகப் பயன்படுத்தியிருந்தார்கள். அதையும் அழகாக கொண்டு வந்திருக்கிறோம். கதையில் நான் கவனித்த இன்னொரு நுட்பமான விஷயம், யாருக்கும் பெயர்கள் இருந்ததாக நினைவில்லை. படத்தின் நாயகி சமைத்துக்கொண்டிருப்பாள், அவளின் கணவர் யோகா செய்துகொண்டிருப்பார். மாமனார் சாப்பிடுவார், தூங்குவார், சாப்பிடுவார், தூங்குவார்... ஒரு குடும்பத்தில் ஆண்கள் சாப்பிடுகிறார்கள், சாப்பாட்டைக் குறை சொல்கிறார்கள், அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கிறார்கள், சாப்பிட்டு வேலைக்குப் போய்விடுகிறார்கள். பெண்ணின் தேவைகள் மட்டும் நிறைவேறுவதில்லை. சமையலறையில் ஒழுகிக்கொண்டிருக்கும் குழாயை சரிசெய்ய பிளம்பர் கேட்கிறாள். அதுகூட படம் முடியும் வரை நிறைவேறவில்லை. டான்ஸ் டீச்சராக வேண்டும் என்ற அவளது ஆசையும் மறுக்கப்படுகிறது. கணவனுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களிலும் அவளின் சுய விருப்பங்கள் நிறைவேற்றப்படவில்லை. அவள் கணவனுக்கு ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறாள். இது உலக பெண்களுக்கான கதை. அதை கொண்டு வந்திருக்கிறோம். ஆணாதிக்க மனப்பான்மையையும், அடிப்படைவாதத்தையும் கொண்டிருக்கும் ஒரு வீட்டுக்கு பெண் ஒருவர் வாழ சென்றால் அவள் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னென்ன துன்பத்தை அனுபவிக்கிறாள்...அதன் வலியை இங்கே கொண்டு வந்திருக்கிறேன்.

வெற்றி, தோல்வி எல்லாம் பார்ப்பதில்லை... தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கிறீர்கள்....

சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும். வாய்ப்புகள் என்னைத் தேடி வந்ததா... நான் தேடிப் போகவில்லையா... என்பதை இப்போது கணக்குப் போட்டு பார்க்க முடியாது. பெரும் கனவு, லட்சியம் என கோடம்பாக்கத்துக்கு ஓடோடி வந்த நாள்கள் நினைவில் நிழலாடுகின்றன.

கனவு தேடி அலைந்த எல்லா இடங்களிலும் சின்ன சின்ன தோல்விகள். குடும்பம், மனைவி, மக்கள் என சமூகச் சூழல்களின் துரத்தல் ஒரு புறம். சிதைந்து விடாத சினிமா கனவு ஒரு புறம். இந்த இரண்டுக்குமான போராட்டங்களை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. அதை வாழ்ந்துப் பார்த்தால்தான் தெரியும். இத்தனை வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் நல்ல இருக்கையில் இருக்கிறேன் என நம்புகிறேன். பார்க்கலாம்.-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT