தினமணி கொண்டாட்டம்

விண்வெளிப் பயணம்!

ஆ. தமிழ் மணி

வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் இடையில் இருப்பது அனுபவம். படைப்பாளனின் அனுபவம் வாசகனின் அனுபவமாகப் பரிணமிக்கும்பொழுது படைப்பு சிறந்த இலக்கியம் ஆகிறது. வாசகர் எழுத்தாளர், பதிப்பாளர் இவர்களின் சங்கமமாக சென்னையில் ஜனவரி ஆறாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை 46-ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. மக்கள் திரளாக வந்து குவிந்த செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

புத்தகக் காட்சி என்று சொல்வதா?, புத்தகச் சந்தை என்று குறிப்பிடுவதா என சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடைபெற்றன. அனுபவமிக்க மூத்த எழுத்தாளர்களும் இந்த விவாதங்களில் கலந்து கொண்டனர். புத்தகக் காட்சியோ, சந்தையோ எதுவும் சம்மதமே. தேவை ஆழமும் அழுத்தமுமான விஷயங்களைப் பேசும் புத்தகங்களே என்பதில் பலருக்கும் உடன்பாடு இருந்தது.

சென்னை புத்தகக் கண்காட்சியோடு சர்வதேச புத்தகக் கண்காட்சியை அரசும் நடத்தியது. பல நாடுகளில் இருந்தும் பதிப்பகத்தார் பங்கு கொண்டனர். இதெல்லாம் ஊரறிந்த செய்திகள். கண்கவர் காட்சிகள். இத்தனை கொண்டாட்டம் அமளிதுமளிக்கு இடையில் சத்தமில்லாமல் சில காட்சிகள் அரங்கேறியத்தைப் புத்தகக் காதலர்கள் கண்டு மகிழ்ந்திருப்பார்கள் பயனடைந்திருப்பார்கள்.

வாசிப்பு என்பது இலக்கியங்களைப் படிப்பது மட்டுமல்ல; வாசிப்புக்கு எல்லைகள் இல்லை என்பதை புத்தகக் காட்சி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே சாலைகளில் சாரை சாரையாக இடம்பெற்றிருந்த புத்தகக் கடைகள் வெளிப்படுத்தின. கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் தொடங்கி வெளிநாட்டுப் பதிப்பகங்களின் புகழ் பெற்ற புத்தகங்கள் வரை அனைத்தும் கிடைக்கும் புத்தகச் சுரங்கமாக இந்தக் கடைகள் கம்பீரமாய் சாலையோரம் அணிவகுத்திருக்கின்றன. இந்தப் புத்தகக் கடைகளின் மற்றுமொரு சுவாரஸ்யம் புத்தகங்களை பேரம்பேசி வாங்கலாம் என்பது தான். மனித மனதிற்கு மிக நெருக்கமானதல்லவா இந்தப் பழக்கம்!

சில இடங்களில் ஆண்டு முழுவதும் கல்லூரிப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் விற்கப்படும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையானதை இத்தகைய கடைகளில் வாங்குவார்கள். ஆனால், புத்தகக் காட்சிக்கு வெளியே நாம் கண்ட கடைகளில் இன்ன துறை சார்ந்த நூல்கள் என்று வரைமுறை இல்லை. கைப்பேசி பழுது பார்ப்பது எப்படி என்ற புத்தகம் தொடங்கி பாதராயணரின் பிரம்ம சூத்திரம் வரை எல்லாமும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

வரலாறு, அரசியல், கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், புதினங்கள், உலக இலக்கியங்கள், சமய நூல்கள், அத்வைதம் முதல் மார்க்சியம் வரையிலான சித்தாந்த நூல்கள், சமையல் குறிப்பு நூல்கள், கவிதைத் தொகுப்புகள், சங்க இலக்கிய நூல்கள், ஜெர்மன் இலக்கியம், கொரிய சிறுகதைகள், லியோ டால்ஸ்டாய், ரவீந்திரநாத் தாகூர் முதல் பாரதி வரை சிந்தனையாளர்களின் படைப்புகள் ஷேக்ஸ்பியர் தொடங்கி சாய் தீபக் வரை பல்வேறு துறைகளின் சிறந்த நூல்கள் என்று வரிசை கட்டி நின்றன.

தங்களின் மிகவிருப்பமான உணவைச் சுவைப்பது போல வாசிக்கிறவர்கள் தங்களுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுவதை விரும்புவார்கள். ஆனால், தங்கள் புத்தகங்களை எவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கு இடையில் வாசகர்கள் தங்களுக்கான புத்தகங்களைத் தேடும் பரப்பரப்பைக் காணும் பொழுது பலநாள் தாகத்திற்கு நீர் பருகுவதைப் போல ஒரு பிரமை நமக்கு ஏற்படுகிறது.

"உன்னுடைய காகிதங்களை உனது இதயத்தால் சுவாசத்தால் நிரப்பு" என்றார் கவிஞர் வில்லியம்வேர்ட்ஸ்வேர்த். புத்தகம் என்பது எழுதியவரின் சுவாசம் என்றால் அதனை வாசிக்கும் வாசகனுக்கோ அது வாழ்வாகிறது. எழுத்தாளன், வாசகன் இருவருமே தங்களுக்கான வாழ்வின் பாதையைக் கண்டடைவதற்கான பயணமாக களமாக அறிவுடைச் சமூகத்தில் அமைந்துவிடுகிறது. அதற்கான உதாரணமாக சாலையோர புத்தகக் கடைகளைக் காணமுடிந்தது.

அன்றாடம் குளிப்பது, சாப்பிடுவது மாதிரி இந்தப் புத்தகக் கடைகளிலும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு அன்றாடம் தங்களுக்கான புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால், படிப்பு என்பது இங்கே சிறந்த சம்பளமுள்ள வேலைக்கான உத்தரவாதம் என்று தொடர்ந்து சொல்லப்படும் பொய்யை உடைத்தெறிந்தது என்று சொல்லுவேன். புத்தகங்களைக் கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்த எனக்கு வலப்பக்கம் அர்த்த சாஸ்திரம் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

இடப்பக்கம் ஒரு பெண்மணி, ஏழு வயது மதிக்கத்தக்க தன்னுடைய குழந்தையுடன் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தார். குழந்தை தனக்குப் பிடித்த புத்தகம் என்று ஓர் ஆங்கிலப் புத்தகத்தை வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தது. அழகழகான படங்களுடன் இருந்த தேவதைக் கதைகள் புத்தகம். அதற்கு விலை பேசுகிறார் அம்மா. குழந்தையின் ஆர்வம் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. பேச்சுக் கொடுத்தேன்.

அம்மா அன்றாடம் புத்தகத்தை வைத்துக் கொண்டே குழந்தைக்கு இரவு நேரத்தில் கதை சொல்வது வழக்கமாம். அந்த வழக்கம் குழந்தை வளர வளர அவளுக்கும் வாசிக்கும் பழக்கமாக வந்துவிட்டதாம். இப்பொழுது படிக்கும் புத்தகங்களில் இருக்கும் கதை மாந்தர்களை மனதில் வைத்துக் கொண்டு குழந்தை புதிதாகக் கற்பனை செய்து கதைகளைச் சொல்கிறாள்.

பெரியவளாக வளர்ந்து என்ன ஆகப் போகிறாய்? என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டு வைத்தேன். என்னை உற்றுப் பார்த்த குழந்தை," விண்வெளிக்குப் போக வேண்டும்" என்றாள். "தேவதைக் கதைகள் படித்தால் விண்வெளிக்குப் போக முடியுமா?" இது நான். "தேவதைகளால் எந்த இடத்துக்கும் போக முடியும்." என்றாள் குழந்தை. நெஞ்சில் சம்மட்டியடியாய் ஓர் உண்மை எனக்கு உரைத்து விட்டது. வாசிப்பு குழந்தையின் மனதில் ஏற்படுத்தியிருக்கும் இந்த நம்பிக்கை அவளை விண்வெளி வரை கொண்டு நிறுத்தினாலும் ஆச்சரியமில்லை. விண்வெளிக்குப் போக வாழ்த்தினேன். அவள் நன்றி சொன்னாள்.

அடடா... நானல்லவா இவளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். சாலையோரப் புத்தகக் கடை எனக்கு போதி மரமாயிற்றல்லவா! வாசிப்பது வாழ்க்கைக்கான ஊட்டம் என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டேன். வழி நெடுகப் புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொன்டு வியாபாரிகள் நிற்கிறார்கள்.ஆர்வமாய் தங்கள் விருப்பப் புத்தகங்களை வாசகர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகங்களும் வரிசையாக வாசிப்பவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

படம்: சாய் வெங்கடேஷ். உ.ச.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT