தினமணி கொண்டாட்டம்

அந்த நாள் ஞாபகம் வந்ததே...!

எஸ். சந்திர மௌலி

சென்னை செம்மொழிப் பூங்காவில் சுமார் இருபது பேர் அண்மையில் கூடி 40 ஆண்டுக்கு முந்தைய சம்பவங்களைப் பேசி மகிழ்ந்தனர். இவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

அவர்கள் இந்தியன் வங்கியின் கோடம்பாக்கம் கிளையில் 1974 முதல் 1982-ஆம் ஆண்டு வரையிலான 8 ஆண்டு காலத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். அவர்களில் பலர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்றுதான் ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள்.

இதுகுறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சங்கரன் கூறியதாவது:

""1970-களில் கோடம்பாக்கம் பகுதியில் மிக முக்கியமான வங்கியாகச் செயல்பட்டு வந்தது இந்தியன் வங்கி. ஆற்காடு சாலையிலேயே இருந்தது. தற்போது டிரஸ்ட்புரம் பகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்டது. நாலைந்து அதிகாரிகள். 12 எழுத்தர்கள், சில கடைநிலை ஊழியர்கள் என்று மொத்தம் 20 பேர் பணியாற்றினோம். அப்போது, பணியாற்றிவவர்களின் சராசரி வயது 25.

நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, 22 வயதில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். நான்தான் எல்லோரையும்விட வயதில் சிறியவன். பெரும்பாலானவர்கள் சைக்கிளிலோ, பஸ்ஸிலோ வருவார்கள். மேலாளர் ராமச்சந்திரன் ஸ்கூட்டரில் வருவார்.

அப்போது வங்கிக் கிளையின் வேலை நேரம் வித்தியாசமாக இருக்கும். காலை எட்டு மணி முதல் பத்தரை வரை மறுபடியும் பிற்பகலில் மூன்று முதல் ஐந்து மணி வரை வேலை செய்வோம். பெரும்பாலானவர்கள், மதியம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.

தொழில்நுட்பமெல்லாம் கனவிலும் எட்டிப் பார்க்காத காலம் அது. எவ்வளவு வேகமாக வேலை செய்தாலும், கூட்டம் அதிகமாக இருக்கும். சில வாடிக்கையாளர்கள் சண்டையும் போடுவார்கள்.

ஆற்காடு சாலையிலேயே ஓரிடத்திலிருந்த வங்கிக் கிளை, வேறு ஓரிடத்துக்கு மாறியபோது, முதல் நாள் வங்கித் தலைவராக இருந்த லட்சுமிநாராயணன் எங்கள் கிளைக்கு வந்தார். அப்போது, வங்கியில் பணிபுரியும் அனைவரும் "டை' கட்டிக் கொண்டு வந்தோம்.

ஏ.வி.எம். நிறுவனம், விஜயா-வாஹினி, சாருசித்ரா ஃபிலிம்ஸ் உள்ளிட்ட திரைத்துறை நிறுவனங்களின் வங்கிக் கணக்கு எங்களிடம் இருந்தது. நடிகர் அசோகன், இயக்குநர் கர்ணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கும் இருந்தது.

காலையில் வங்கிப் பணி முடிந்த பிறகு, பிற்பகல் மீண்டும் பணி நேரம் தொடங்குவதற்கு முன்பான இடைவெளி நேரத்தில் பல நாள்கள் திரைத்துறையினரை வேடிக்கை பார்க்கச் சென்றது உண்டு.

நடிகர் கமலின் "சகலகலா வல்லவன்' படப்பிடிப்புக்குச் சென்று, அவரை சந்தித்ததும் எனக்கு நினைவிருக்கிறது. பிரிவியூ ஷோக்கள் திரையிடும்போது எங்கள் கிளையில் உள்ள அனைவரையும் அழைப்பார்கள். நாங்களும் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்போம்.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலானோம். சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்ற மீனாகுமாரி, தனது மகனின் திருமணத்தின்போது நான் திருச்சியில் பணியாற்றியதை அறிந்து அழைப்பிதழை அனுப்பினார். சிலரும் திருமணத்துக்கு வந்திருந்தார்கள். மற்றவர்களைப் பற்றி தகவல் அறிந்துகொள்ள முயற்சிகளைச் செய்தோம். 2010-ஆம் ஆண்டில் 12 பேர் குறித்த விவரம் கிடைத்தது. 2015-ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆஃப் வாயிலாக, இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

நாளடைவில் 1974-82-ஆம் காலகட்டத்தில் ஒன்றாகப் பணியாற்றியோரின் தொலைபேசி எண்களையும் திரட்டி விட்டோம். "இந்தியன் வங்கி கோடம்பாக்கம்' என்ற வாட்ஸ் ஆஃப் குழு முழு மூச்சில் இயங்க ஆரம்பித்தது. பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பறிமாறிக் கொண்டோம். கரோனா காலத்தில் ஒவ்வொருவரும் மற்றவரை அக்கறையுடன் விசாரித்துகொண்டோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் குழுவில் இரண்டு பேரை கரோனா தொற்று பலி கொண்டது. இன்னும் இருவர் மாரடைப்பால் இறந்தனர்.

எல்லோரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றோம். பெரும்பாலானோர் சென்னையில் வசித்தபோதிலும், சில பிற இடங்களில் தங்கியுள்ளனர். எல்லோருக்கும் வசதியான ஒரு தேதியில் சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சிகள் எடுத்தோம். ஜனவரி 18-இல் தேதி பிற்பகல் செம்மொழிப் பூங்காவில் சந்தித்தோம்.

இருபது பேர் மட்டுமே வந்திருந்தனர். வெளியூர்களிலிருப்பவர்களால் வர முடியாமல் போனது. அன்றைய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது.

பணியிட ருசிகர சம்பவங்கள், குடும்ப வாழ்க்கை போன்றவற்றை பகிர்ந்துகொண்டோம். ஒருசிலர் பாட்டுகளைப் பாடினார்கள். ஒருவர் "மவுத் ஆர்கான்' வாசித்தார். சுமார் இரண்டு மணிநேரம் பொழுதைப் போக்கிவிட்டு, உட்லண்ட்ஸ் உணவகத்துக்குப் போய் உணவு அருந்தி விடை பெற்றோம்.

நினைவுப் பரிசுகளைப் பகிந்துகொண்டு பிரிந்தபோது, "குடும்ப உறவுகளைப் பேணுவோம். உடல் நலத்தைக் கவனித்துக் கொள்வோம்! மீண்டும் சந்திப்போம்!' என்று கூறி விடைபெற்றோம்.'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT