தினமணி கொண்டாட்டம்

லடாக் மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்!

எஸ். சந்திர மௌலி

சென்னை சேத்துப்பட்டு சர்வோதயா பெண்கள் விடுதியில் பொங்கல் நாளன்று சென்றவர்களை "இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்' என்று சொல்லி வரவேற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. காஷ்மீரை ஓட்டிய யூனியன் பிரதேசமான லடாக்கைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ, மாணவிகள். தூய தமிழில் அழகாக அவர்கள் பேசியது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

இவர்களுடன் ஓர் சந்திப்பு:

சென்னை வருகையின் நோக்கம்?

லடாக்கின் தலைநகரமான "லே' நகரத்தில் உள்ள "சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் புத்திஸ்ட் ஸ்டடீஸ்' என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம். மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் "பாரத தரிசனம்' எனும் திட்டத்தின்கீழ் 50 மாணவ, மாணவிகள் மூன்று ஆசிரியர்களுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறோம். தில்லி, வாரணாசி, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட மாநகரங்களுக்குச் சென்றுவிட்டு, சென்னைக்கு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் பாரம்பரியம் மிகுந்த பொங்கல் பண்டிகையின்போது நாங்கள் வந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

சர்வோதயா ஹாஸ்டல் மாணவிகளோடு இணைந்து பொங்கல் வைத்து, சூரியனைக் கும்பிட்டு, விழாவைக் கொண்டாடியது எங்களுக்கு புதுமையான அனுபவம்.

லடாக்கின் சிறப்பம்சம்?

அகண்ட திபெத்தின் ஒரு பகுதியாக விளங்கிய லடாக், 1834-இல் ஒரு போரின் மூலமாக ஜம்முவுடன் இணைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, லடாக்கை உள்ளடக்கிய ஜம்மு-காஷ்மீர் ஒரு தனி சமஸ்தானமாக விளங்கியது. சுதந்திரத்துக்குப் பின்னர், மகாராஜா ஹரி சிங் ஆட்சியின்போது, காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவியது. அப்போது, அவர் இந்தியாவுடன் இணைய ஒப்பந்தம் செய்து கொண்டார்.

லடாக் பகுதியில் இருந்து ஊடுருவல்காரர்களை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அதன்பின்னர், தனி அந்தஸ்து கொண்ட காஷ்மீரின் ஒருபகுதியாக லடாக் விளங்கியது. ஆனால், ஜம்மு-காஷ்மீர்ஆட்சியாளர்கள் லடாக்கின் மீது அக்கறைகாட்டவில்லை. 2019-இல் ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியாகப் பிரித்து,லடாக்கை மத்திய அரசு யூனியன் பகுதியாக்கியது மத்தியஅரசு. அதன்பிறகு, லடாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

லடாக் மக்களின் வாழ்க்கைபற்றி ?

லடாக் சுமார் 60 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. சுமார் 2.75 லட்சம் பேர் வசிக்கின்றனர். கார்கில், லே என்று இரு மாவட்டங்கள் உள்ளன. ஆறு மாதங்கள்தான் விவசாயம் செய்ய முடியும். பார்லி கோதுமை, ஆப்பிள், ஆப்ரிகாட், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை விளைகிறது, அரிசி தான் மக்களின் பிரதான உணவு.

சுற்றுலா சீசனில் லடாக்கின் பொருளாதாரம் செழிப்படையும். பெரும்பாலானோர் பேசும் மொழி லடாக்கி. ஹிந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளைப் பேசுவோரும் உண்டு. ஆண்களில் பெரும்பாலனோர் ராணுவ முகாம்கள் தொடர்பான பணிகளைச் செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.

சென்னையில் என்ன பார்த்தீர்கள்?

மெரீனா கடற்கரைக்குச் சென்றோம். எங்கள் வாழ்நாளில் நாங்கள் இதுவரை பார்க்காத ஒன்று கடல். எனவே, நீண்ட மெரீனா கடற்கரைக்குச் சென்றது புதிய அனுபவமாக இருந்தது. மணற்பரப்பைவிட்டு, கடலில் இறங்கி நின்றபோது, ஓயாத அலைகள் கால்களை வருடிச் சென்றது சுகமாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டால், அந்த அனுபவம் மனத்திரையில் ஓடுகிறது. வாழ்நாளில் மறக்க முடியாதது. ராஜ்பவனில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்திலும் பங்கேற்றோம்.

ஆளுநர் ஆர்.என்.ரவியோடு உரையாடினோம். பின்னர், ராஜ்பவன் பொங்கல் விருந்திலும் கலந்துகொண்டோம்.

தென்னிந்திய உணவு பிடித்திருக்கிறதா?

மதிய, இரவு உணவில் அரிசி, தால் ஆகியன பிரதானமாக இருக்கும். 40 நாள்கள் பயணம் என்பதால், எங்கள் உணவை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம். நாங்கள் சிறு, சிறு குழுக்களாகப் பிரிந்து, சுழற்சி முறையில் சமையல் வேலைகளைச் செய்கிறோம். ரயில் பயணங்களின்போது, உணவை சமைத்து, பொட்டலங்களாகத் தயாரிக்கிறோம்.

அது சிக்கனத்துக்கு சிக்கனம். உடல்நலத்துக்கும் நல்லதுஅல்லவா?

பாரத தரிசனத்தில் வேறு எந்தப் பகுதிக்குச் செல்லவிருக்கிறீர்கள்?

அடுத்து பெங்களூரு, கோவாபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்ப வேண்டும். இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக இருந்தாலும், எங்களுக்கு ஒருசில ஊர்களைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், வாழ்நாளில் இந்த ஊர்களைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT