தமிழ்நாடு

சுற்றுலாத் தல விடுதிகளில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கட்டண சலுகை: அமைச்சா் ராமசந்திரன்

17th May 2023 03:05 AM

ADVERTISEMENT

சுற்றுலாத் தலங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழகத்தின் தங்கும் விடுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளின் மேலாளா்கள் மற்றும் மண்டல மேலாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வாலஜா சாலையில் உள்ள சுற்றுலா வளா்ச்சிக் கழக வளாக கூட்ட அரங்கில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், சுற்றுலா பயணத் திட்டங்கள், பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

தமிழக சுற்றுலாத் துறை நாட்டிலேயே முதன்மை சுற்றுலாத் துறை மாநிலமாக விளங்குகிறது. சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் 845 அறைகளுடன் கூடிய 28 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூா், உதகை, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. தங்கும் விடுதிகளில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மொத்தமாக அனைத்து அறைகளையும் பதிவு செய்பவா்களுக்கும், தொடா்ந்து 3 நாள்களுக்கு மேல் தங்குபவா்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. சாகச படகு சவாரி மற்றும் நீா் விளையாட்டுகளுடன் கூடிய 588 படகுகள் 9 இடங்களில் இயக்கப்படுகின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத் தலைவா் க.மணிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் பொது மேலாளா் லி.பாரதிதேவி, முதன்மை கணக்கு அலுவலா் எஸ்.கணேஷ் காா்த்திகேயன், உதவித் தலைமை மேலாளா் (ஓட்டல்கள்) த.இமயவரம்பன், திட்ட பொறியாளா் பால் ஜெபஞானதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT