தினமணி கொண்டாட்டம்

பார்த்தேன்... வரைந்தேன்...

எஸ். சந்திர மௌலி

அண்மையில் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சித் திடலில் நுழைந்தவர்களின் கவனத்தை ஈர்த்தவர் திருச்சியைச் சேர்ந்த ஜேக்கப் பால். இருபத்து எட்டு வயதான இவர், மனிதர்களைப் பார்த்த நேரத்தில், சில நிமிடங்களிலேயே கேரிகேச்சரில் (கோட்டோவியம்) நேர்த்தியாக வரைந்து தள்ளினார்.

காகிதம், பென்சிலோடு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஜேக்கப். தன்னைத் தேடி வந்தவர்களை எதிரே நாற்காலியில் அமர வைத்து, சில நிமிடங்களிலேயே "கேரிகேச்சர்' சித்திரத்தை வரைந்து முடித்து கையெழுத்தும், தேதியும் போட்டு தந்தார்.

அவருடனான சந்திப்பு:

உங்களுக்கு ஓவியம் வரைவதில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?

சிறு வயதில் இருந்தே படங்கள் வரைவதில் ஆர்வம் இருந்தது. பள்ளியில் ஆசிரியர் இல்லாத நேரங்களில் என்னுடைய நோட்டுப் புத்தகங்களில் நிறைய படங்களை வரைந்து கொண்டிருப்பேன். வகுப்பு நேரத்திலும், பாடத்தைக் கவனிக்காமல் படம் வரைந்ததற்காக அடி வாங்கியதும்உண்டு. பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, உடற்பயிற்சி ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு, திருச்சியில் உள்ள பள்ளியில் உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியராகச் சேர்ந்தேன்.

கேரிகேச்சர் வரையும் ஆர்வம் வந்தது எப்படி?

கரோனா காலத்தின்போது, கேரிகேச்சர் ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். முதலில் பிரபலமான மனிதர்களின் படங்களைப் பார்த்து வரைந்து பழகினேன். பின்னர், எனது குடும்பத்தினர், நண்பர்களை அமர வைத்து வரைந்து பயிற்சி செய்தேன். அவர்களின் பாராட்டுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், உற்று கவனித்து, தவறுகளைத் திருத்திக் கொண்டேன். முழு நேர ஓவியராகும் ஆர்வத்துடன் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு இரவில் பணிபுரியும் வகையில் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பகல் நேரங்களில் கேரிகேச்சர் பயிற்சியைச் செய்தேன். பின்னர், அந்தப் பணியையும் விட்டுவிட்டேன். ஒருகட்டத்தில் என் திறமையின் மீது நம்பிக்கை வைத்து, முழு நேர ஓவியராகிவிட்டேன்.

கேரிகேச்சர் முறையை விளக்குங்களேன்?

"போர்ட்ரைட்' என்பது ஒருவரை அவரைப் போலவே வரைவதாகும். கேரிகேச்சரில் ஒருவரைப் பார்த்த நேரத்தில் கவனம் ஈர்க்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். என் எதிரே ஒருவர் அமர்ந்தவுடன் சில விநாடிகள் உற்று கவனிப்பேன். அவரது கண்கள், மூக்கு, காதுகள், உதடுகள், நெற்றிஅமைப்பு, தலைமுடி, கண்ணாடி ஆகியவற்றையும், பெண்கள் என்றால் நகைகளையும் கவனிப்பேன். பின்னர், வரையத் துவங்குவேன். சில நிமிடங்களில் வரைந்து முடித்துவிடுவேன்.

இத்தகைய சித்திரங்களை வரைந்து கொள்ள ஆர்வமாக முன்வருகிறார்களா?

புகைப்படங்களை எடுக்கும் ஆர்வம், ஓவியங்கள் மீது இல்லை. சென்னையிலாவது பரவாயில்லை. பிற ஊர்களில் மக்களுக்கு கேரிகேச்சர் பற்றி தெரியவே இல்லை. ஆனாலும், சென்னைப் புத்தகக் கண்காட்சிகளுக்கு வருகிறவர்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆர்வம் உள்ளது.

மறக்க முடியாத அனுபவங்கள் என்ன?

வரைந்து கொடுத்ததைப் பார்த்துவிட்டு, "என்னைப் போல இல்லை!' என்று சொல்லி பணம் கொடுக்க மறுத்தவர்கள் உண்டு. திறமை, உழைப்பை அங்கீகரித்து அரை மனதோடு பணம் கொடுத்தவர்களும் உண்டு. படத்தைப் பார்த்து, மகிழ்ந்து பாராட்டியவர்களும் உண்டு.

ஒருமுறை புதுச்சேரியில் எண்பது வயது முதியவரை வரைந்து கொடுத்தபோது, அவர் கொடுத்த பணத்தைவிட அவரது முகத்தில் நான் கண்ட சந்தோஷமும், பாராட்டும் நெகிழ வைத்தது.

வழக்கமான ஏ 4 அளவு காகிதத்தில் ஐந்து பேர் வரை வரைந்திருக்கிறேன். ஏ3 காகிதத்தில் பத்து பேர் வரை என்னால் வரைய முடியும்.

எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?

புத்தகக் கண்காட்சிகளில் அரங்கு எடுப்பதற்குப் பணம் கட்ட எனக்கு வசதி இல்லை. திறந்தவெளியில் அமர்ந்து வரையும்போது, "அனுமதி வாங்கினாயா?'' என்று கேட்பார்கள். சேலத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தபோது, முந்தைய கண்காட்சி ஒன்றில் அப்போதைய துணைஆட்சியர் ஊக்கப்படுத்தியது நெகிழச் செய்தது.

இதையே தொழிலாகச் செய்ய முடியுமா?

ஐரோப்பாவில் வெனிஸ் நகரத்தில் கேரிகேச்சர் ஓவியர்கள் வீதிகளில் அமர்ந்து, அங்குவரும் சுற்றுலாப் பயணிகளை வரைந்து கொடுப்பார்கள். அதுபோன்ற வரைய ஆசைப்படுகிறேன். எதையும் சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT