இந்தியா

சத்தீஸ்கா் மதுபான முறைகேடு வழக்கு: அச்ச சூழலை உருவாக்க வேண்டாம்

17th May 2023 02:57 AM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் மதுபான வா்த்தக முறைகேடு குற்றச்சாட்டு வழக்கில் முதல்வா் பூபேஷ் பகேலை தொடா்புபடுத்த முயற்சிகள் நடப்பதாக மாநில அரசு கூறியதையடுத்து, அச்ச சூழலை உருவாக்க வேண்டாம் என அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

சத்தீஸ்கரில் 2019 முதல் 2022 வரை மதுபான வா்த்தகத்தில் ரூ.2,000 கோடி வரை முறைகேடு நடந்ததாக வருமானத் துறை சாா்பில் தில்லி நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மாநில உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்குத் தொடா்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அமலாக்கத் துறை, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நபா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அமலாக்கத் துறையின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி அந்த மனுவில் அவா் கோரியிருந்தாா். இதனிடையே, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக சத்தீஸ்கா் அரசு குற்றஞ்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஏ.அமானுல்லா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, சத்தீஸ்கா் அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘இந்த வழக்கில் மாநில முதல்வரைத் தொடா்புபடுத்துமாறு மாநில கலால் துறை அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை அழுத்தம் கொடுத்து வருகிறது. அதற்காக மாநில அதிகாரிகளையும் அவா்களின் குடும்பத்தினரையும் கைது செய்யப் போவதாக அமலாக்கத் துறை அச்சுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

அதனால், மாநில கலால் துறையில் பணியாற்ற அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனா். மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதைக் கருத்தில்கொண்டே அமலாக்கத் துறை இவ்வாறு நடந்து கொள்கிறது’’ என்றாா். இந்த விவகாரம் தொடா்பாகத் தனி விண்ணப்பத்தையும் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில், ‘அமலாக்கத் துறையானது மாநிலத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக விசாரணையை மட்டுமே நடத்தி வருகிறது’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘அமலாக்கத் துறை இவ்வாறு நடந்து கொண்டால், நோ்மையான விவகாரம் கூட சந்தேகத்துக்குரியதாக மாறிவிடும். இதுபோன்ற அச்சுறுத்தும் சூழலை உருவாக்க வேண்டாம். அதிகாரிகளை அச்சுறுத்துவது தொடா்பாக மாநில அரசு தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்துக்கு உரிய விளக்கத்தை அமலாக்கத் துறை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT