தினமணி கொண்டாட்டம்

இரு பூக்கும் தாவரங்கள் கண்டுபிடிப்பு

கோபாலகிருஷ்ணன்


திருச்சியைச் சேர்ந்த தூய வளனார் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் எஸ்.சூசைராஜ் தலைமையிலான குழுவினர் புதிதாக இரு பூக்கும் தாவரங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

நிலத் தாவரங்களில் முக்கிய வகைகளில் ஒன்று பூக்கும் தாவரங்கள். இவை ஒரு வித்திலைத் தாவரம், இரு வித்திலைத் தாவரம் என இரு வகைப்படும். 

தமிழகத்தில் பூக்கும் தாவரங்களில் 5,640 சிற்றினங்கள் உள்ளன. இது நாட்டின் மொத்த பூக்கும் தாவரங்களின் 32 சதவீதமாகும். இவற்றுள் 1,559 சிற்றினங்கள் மூலிகைகள், 260 சிற்றினங்கள் பயிரிடப்படும் பயிர்களின் மூதாதையத் தாவரங்களாகும்.

பொதுவாக, மனிதர்களின் கால் தடங்கள் பதியாத மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள், கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் அடிக்கடி புதிய தாவரங்களைத் தாவரவியல் அறிஞர்கள் கண்டுபிடிப்பர்.  ஆனால் சமதளப் பிரதேசங்களில் புதிய தாவரங்களின் கண்டுபிடிப்பு அரிதானதாகும். 

அந்த வகையில், பேராசிரியர் எஸ். சூசைராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் என். தட்சணாமூர்த்தி, பி. ராஜா, ரேபினாட் ஹெர்பேரிய தலைவர் எல். ஜான் பீட்டர் அருளானந்தம் உள்ளிட்டோர்  இரண்டு புதிய பூக்கும் தாவரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து எஸ். சூசைராஜ் கூறியதாவது:

""தருமபுரி அருகேயுள்ள திம்மம்பட்டியில்  "லெபிடகாதிஸ் டெகுபென்ஸ் ‘ என்ற அக்கான்தேசி குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை இருவித்திலை செடியை கண்டறிந்தோம். இது முள்களுடன் கூடிய இலைகளைக் கொண்ட ஒரு குறு செடியாகும். வறண்ட செம்மண் நிலத்தில் வளரக் கூடியது. வறண்ட காலத்தில் கருகி மழைக்காலத்தில் துளிர்த்து வளரும் தன்மையுடையது.

இதையடுத்து, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகிலுள்ள புதர் நிலங்களிலிருந்து "திரியோபோனம் புலூமி' எனும் ஒருவித்திலை சிறு செடி கண்டறியப்பட்டது. ஏரேசி குடும்பத்தைச் சேர்ந்த கிழங்கு வேர் கொண்ட இச்சிறிய தாவரம் மழைக் காலமான அக்டோபர் மாதத்தில் முளைத்து வளர்த்து, ஜனவரி மாதத்தில் இலைகள் காய்ந்து மறைந்துவிடும். இந்தச் செடியின் பெயர் "லெபிடாகாதிஸ் டெகுபென்ஸ்' . " கார்ல்லுட்மிக் பிலூமி' ஜெர்மனி ஆராய்ச்சியாளரை பெருமைப்படுத்தும் விதமாக வைக்கப்பட்டது.

இந்தச் செடிகளை உலர்த்தி,  பதப்படுத்தி கோவையில் உள்ள "பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா' எனும் அமைப்பிடமும், திருச்சி "ரபிநாத் ஹெர்பாரியம்' என்ற அமைப்பிலும் வைக்கப்பட்டுள்ளன.

இத்தாவரங்கள் பற்றிய குறிப்புகள் பல தரப்பட்ட சர்வதேச அளவிலான தாவரவியல்நூல்களிலும், ஆராய்ச்சி கட்டுரைகளிலும், உலர் தாவர கிடங்குகளிலும்  பல ஆண்டுகளாக ஆராய்ந்தபோது, புதிய வகை தாவரங்கள் என உறுதிசெய்யப்பட்டது.

"லெபிடகாதிஸ் டெகுபென்ஸ் ‘ தாவரத்தைப் பற்றி ஆய்வுக் கட்டுரையாக எழுதப்பட்டு, அடான்சோனியா என்ற பிரெஞ்சு நாட்டு ஆய்வு நூலில் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. "திரியோபோனம் புலூமி' செடி பற்றிய ஆய்வுக்கட்டுரை நோர்டிக் ஜர்னல் அப் பாட்டனி என்ற சுவீடன் நாட்டு ஆய்வு நூலில் வெளியிடப்பட்டது.

எங்களது ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச இதழ்களுக்கு அனுப்பியதில், புதிய தாவரங்கள் என உறுதி செய்து பிரசுரித்து வெளியிட்டுள்ளனர். இதற்கு சில ஆண்டுகளாகும். 

மேற்கண்ட இரு தாவரங்களும் கால்நடைகளை மேய்ச்சல், கட்டுமானங்கள் போன்ற செயல்களால் அழிந்து வருகின்றன. 

இந்தத் தாவரங்கள் உணவுக்கானதாக எனத் தெரியவில்லை.  இவற்றின் பயன்பாடுகள்,  மருத்துவக் குணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT