தினமணி கொண்டாட்டம்

பொன்னியின் செல்வன் கதையும் பாத்திரங்களும்!

எம்.பாண்டியராஜன்

கல்கி எழுதி எப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள், 292 அத்தியாயங்கள், புத்தகங்களின் அளவைப் பொருத்து ஆயிரங்களில் பக்கங்கள்.

சோழ அரசின் மன்னராக ராஜராஜ சோழன் பொறுப்பேற்கும் காலத்துக்கு முன்,  அவன் அருள்மொழி வர்மனாக இருந்த இளமைக் காலத்தில் சோழ அரியணையைச் சுற்றி நடைபெற்ற புனைவு கலந்த அரசியல் நாவல்தான் பொன்னியின் செல்வன்.
இராஜராஜ சோழனின் இளம் பிராயத்தில் சோழ நாட்டிலும் ஈழ நாட்டிலும் நிகழ்ந்த மகத்தான சரித்திரக் கதை' பொன்னியின் செல்வன் என்றுதான் நாவலைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் கல்கி.

சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ்: சோழ நாட்டைத் தலைநகர் தஞ்சையிலிருந்தவாறு சுந்தர சோழர் (பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ்) ஆண்டு கொண்டிருக்கிறார். அவருடைய பிரதிநிதியாகக் காஞ்சியில் தங்கி ஆட்சி செய்கிறார் இளவரசர் ஆதித்த கரிகாலன். ஆதித்த கரிகாலனிடமிருந்து தந்தை சுந்தர சோழருக்கும் சகோதரி குந்தவைக்கும் ஓலைகளை எடுத்துக் கொண்டு கரிகாலனின் நண்பன் வந்தியத் தேவன் சென்று கொண்டிருக்கிறான்.

வீரநாராயண ஏரியையொட்டி, கடம்பூரில் சம்புவரையர் மகனும் தன் நண்பனுமான கந்தமாறனின் அரண்மனையில் தங்கும் நோக்கில் செல்லும் வழியில், காவிரியில் படகில்வந்த பெரிய பழுவேட்டரையும் உடன் மூடுபல்லக்கில் வந்த ஒரு பெண்ணையும் பார்க்கிறான்.  இவனுடைய செயல்பாடுகளை அறிந்தவனைப் போல பேசும் ஆழ்வார்க்கடியான் நம்பியையும் சந்திக்கிறான். இரவு கடம்பூர் அரண்மனையில் தங்குகிறான் வந்தியத் தேவன்.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்: அரண்மனையில் இரவில் நடைபெறும் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தைக் கவனிக்கிறான். பெரிய பழுவேட்டரையர் (திரைப்படத்தில் சரத்குமார்), சம்புவரையர் மற்றும் சிற்றரசர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், ஆதித்த கரிகாலன் அடுத்து அரச பதவிக்கு வரக் கூடாது என்று பேசப்படுகிறது. அருகிலேயே அந்த மூடுபல்லக்கும் இருக்கிறது.

பின்னால் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான். இலங்கையில் முகாமிட்டிருந்த அருள்மொழி வர்மன் நாடு திரும்புகிறான். அரண்மனையில் ஏராளமான குழப்பங்கள். சுந்தர சோழர் உயிரிழக்கிறார். அருள்மொழி வர்மனே  அரியணையேறுவான் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது உத்தம சோழனுக்கு முடிசூட்டுகிறான் அவன். காவிரித் தாய் காப்பாற்றிக் கொடுத்தவன் என்பதால் அருள்மொழி வர்மன்தான் பொன்னியின் செல்வன், ஆனால், நாவலில் அவன் நாயகன் அல்ல!

வந்தியத் தேவனா கார்த்தி : பொன்னியின் செல்வன் கதையின் நாயகன் எனப்படுபவன், தொடக்கம் முதல் நிறைவு வரை பயணம் செய்பவனும், பின்னாளில் குந்தவையை மணந்துகொள்ளப் போகிறவனுமான வந்தியத் தேவன்தான். வரலாற்றில் வேங்கி நாட்டைச் சேர்ந்த கீழைச் சாளுக்கிய மரபினன்.

வாணர் குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத் தேவன், சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனின் நண்பன். ஒற்றன், சோழகுல சூத்திரதாரியெனக் கருதப்படும் குந்தவையின் காதலைப் பெற்றவன். பின்னாளில் அருள்மொழி வர்மனுக்கும் நெருக்கமான நண்பனாகிறான். முழு நாவலிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் வந்தியத் தேவன்.

நந்தினியாக ஐஸ்வர்யா ராய் : நந்தினியின் பிறப்பு ரகசியம் என்ன? வீரபாண்டியன் எவ்வாறு நந்தினியின் காதலனனான்? நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் என்ன பகை? நந்தினியும் பெரிய பழுவேட்டரையரும் எவ்வாறு, எந்தச் சூழ்நிலையில்  மணம் புரிந்துகொள்கிறார்கள்? உண்மையிலேயே நந்தினி யாரைக் காதலித்தாள், யார் மீதெல்லாம் காதல் கொண்டிருந்தாள், அல்லாமல் நந்தினியை யாரெல்லாம் காதலித்தார்கள்? நாவலில் நந்தினியைச் சுற்றி ஏராளமான புதிர்களும் விறுவிறுப்புகளும் சுழல்கின்றன.

குந்தவையாக திரிஷா : சோழகுல வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருக்கும் குந்தவை, நாவலிலும் மிக முக்கியமான பங்காற்றுகிறார். தந்தை சுந்தர சோழருடைய ஆட்சி, பாதுகாப்பு பற்றியெல்லாம் அக்கறைகொண்டு செயல்படும் குந்தவைக்கு சகோதரர்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் (பின்னாளில் ராஜராஜ சோழன்) ஆகியோரிலும் பெரிய செல்வாக்கு இருக்கிறது. மன்னரான ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரனை மாபெரும் வீரனாக்கியதில் குந்தவைக்கே பெரும் பங்கு. அசாத்தியமான நிர்வாகத் திறன் கொண்ட குந்தவைதான் நாவலிலும் வரலாற்றிலும் அழிக்க முடியாத சாதனைகளைச் செய்திருக்கிறாள். வந்தியத் தேவனைக் காதலித்துக் கரம் பிடிக்கிறாள்.

அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி: நாவலில் இவன் நாயகன் அல்ல என்றாலும் பொன்னியின் செல்வன் இவன்தான், அருள்மொழி வர்மன். நாவலின் இடையில் இலங்கையில் அவன் இருக்கும்போது திரைப் படத்துக்குரிய இலக்கணத்துடன் அறிமுகமாகிறான். பின்னாளில் ராஜராஜ சோழன் என்று முடிசூடி, தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டித் தமிழர் புகழை இன்றுவரையிலும் நிலைத்திருக்கச் செய்தவன். இவனுடைய காதலி, கரம்பிடித்தவள்  கொடும்பாளூர் இளவரசியான வானதி. இவர்களுடைய மகன்தான் மாவீரன் ராஜேந்திர சோழன்.

அரச குடும்ப விசுவாசிகளும் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுதிரண்டு தனக்கே அரியணையை அளிக்க முன்வந்த நிலையிலும் அதிரடியாக ஒன்றுவிட்ட சகோதரன் உத்தம சோழனுக்குத் தானே முடிசூட்டுகிறான் அருள்மொழி. அப்படி முடிசூட்டக் காரணம் என்ன? உத்தம சோழன் யார்? என்பதெல்லாம் நாவலின் முடிச்சுகள்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம் : சோழ மன்னர் சுந்தர சோழரின் மூத்த மகன். பெரும்பாலான போர்களை நடத்தி வென்றவன். வீரபாண்டியனை வெட்டிக் கொன்றவன். அந்தப் பெரும் பகையே  அவனை மட்டுமின்றி, சோழ அரசையும் சூழ்கிறது. காஞ்சியில் தங்கியிருந்து ஆட்சிப் பணியைக் கவனித்துக் கொள்கிறான். கடம்பூர் சம்புவரையர்  அரண்மனையில் கொல்லப்படுகிறான். நாவலுக்கான ஊற்றே இவனிடமிருந்துதான்,  இங்கிருந்துதான். ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணம் என்ன? கொன்றவர்கள் யார்? கொலைச் சதியின் பின்னணி என்ன? வரலாற்றில் புதிரான பக்கங்கள் இவை என்றாலும் நாவலில் சில தெளிவுகளுடன் கொலையையொட்டியே கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. நாவலில் பரிதாபத்துக்குரிய பாத்திரங்களில் ஒன்று ஆதித்த கரிகாலன், மற்றொன்று நந்தினி. 

வானதியாக சோபிதா : கொடும்பாளூர் இளவரசி. குந்தவையின் உற்ற தோழியாகப் பழையாறைக்கு வந்து வசிக்கிறார். மிகவும் பயந்த சுபாவமுடையவள். அருள்மொழி வர்மனின் காதலி, மணமும் செய்துகொள்கிறாள். ஆனால், ஏதோ காரணத்தால் பட்டத்தரசியாகும் வாய்ப்பைத் தவிர்க்கிறாள். இவர்களுடைய மகன்தான் சோழ பரம்பரையை நிலைபெறச் செய்தவனான கங்கைகொண்ட ராஜேந்திர சோழன்.

ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம்: சோழ அரசின் நம்பிக்கைக்குரிய ஒற்றன் முன்குடுமி வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் நம்பி. நாட்டின் நம்பிக்கைக்குரிய முதல் அமைச்சராகத் திகழ்ந்த அன்பில் அநிருத்த பிரம்மராயருடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமாக, கதையின் முக்கியமான தருணங்களிலெல்லாம் தென்பட்டு, ஆவலையும் விறுவிறுப்பையும் கூட்டுபவன்.

பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி : கல்கியின் கற்பனைப் பாத்திரங்களில் ஒன்று பூங்குழலி. கதையை இணைத்துக் கொண்டுசெல்வதில் இவளுக்கும் பெரும் பங்கு. பின்னால் இளவரசனாகும் சேந்தன் அமுதனுடைய காதலி. இலங்கை செல்லும் வந்தியத் தேவனுக்குப் படகு செலுத்துபவள். அருள்மொழி வர்மனால் சமுத்திரகுமாரி எனப் பாராட்டப்பட்டவள். ஓடக்காரப் பெண்ணான இவள் கலங்கரை விளக்கக் காவலர் தியாகவிடங்கரின் மகள்.

நாவலில் இன்னும் ஏராளமான பாத்திரங்கள் - செம்பியன் மாதேவி (ஜெயசித்ரா), மதுராந்தகன் (ரகுமான்), ஊமைராணி, சின்னப் பழுவேட்டரையர் (பார்த்திபன்), ரவிதாசன் (ஆடுகளம் கிஷோர்), தேவராளன், திருக்கோவலூர் மலையமான் (பிரபு), பல்லவன் பார்த்திபேந்திரன் (விக்ரம் பிரபு), பினாகபாணி, கருத்திருமன்... என்று.

ஐந்து பாகங்களில் 292 அத்தியாயங்களைக் கொண்ட இந்த மெகா நாவலை இரு பாகங்களாகப் படமாக்கியிருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT