தினமணி கொண்டாட்டம்

மன்னர் சார்லஸூக்கு பிடித்த டார்ஜிலிங் டீ!

25th Sep 2022 06:00 AM | எஸ்.சந்திரமௌலி

ADVERTISEMENT

 

பிரிட்டன் இளவரசராக வலம் வந்த சார்லஸ் பிலிப் அர்துர்ஜார்ஜ், தனது 73-ஆவது வயதில் மூன்றாவது சார்லஸ் மன்னராக அரியணையில் அமர்ந்திருப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவருக்கு மிகவும் பிடித்தது டார்ஜிலிங் டீ!

1625-இல் மன்னர் முதலாம் ஜேம்ஸை அடுத்து, முதலாம் சார்லஸ் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மன்னராக முடிசூட்டப்பட்டார். 1660-இல் அரியணை ஏறிய இரண்டாம் சார்லஸ் கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செய்து மறைந்தார். இப்போது மூன்றாம் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றுள்ளார்.

அவரைப் பற்றிய ருசிகர தகவல்கள்:

ADVERTISEMENT

ராஜ குடும்ப வழக்கத்துக்கு மாறாக, சார்லஸ் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கல்வி கற்றவர். விடுதியிலும் தங்கியவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் திரினிடி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அடுத்த ஆண்டில் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-இல் பிறந்தவர்சார்லஸ். முதிய வயதில் அரசரானவரும் இவர்தான்.

அரசக் குடும்பத்தில் முதன் முதலாக விவாகரத்து பெற்றவர். காதலித்து மணந்த டயானாவை 1996-இல் விவாகரத்து செய்தார். அதன்பின்னர் ஓர் ஆண்டு கழித்து கார் விபத்தில் டயானா மரணமடைந்தார். இதையடுத்து, இங்கிலாந்து சர்ச், சார்லஸ் மறுமணம் செய்துகொள்வதற்கான விதிகளைத் தளர்த்தியதன் அடிப்படையில் 2005-இல் கமீலா பார்கர் பெளவெல்ஸை திருமணம் செய்து கொண்டார்.

சார்லஸ் சிறந்த ஓவியரும்கூட! வாட்டர் கலரை பயன்படுத்தி இயற்கைக் காட்சிகளையே அவர் வரைகிறார். 1997-ஆம் ஆண்டு முதல் சார்லஸின் ஓவியங்கள் 30 லட்சம் டாலருக்கு விற்பனை ஆகியுள்ளன. இந்த வருவாய்" பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஃபவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தில்சார்லஸூக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.

"டச்சி ஒரிஜினல்ஸ்' என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலமாகத் தனது பண்ணையில் விளையும் பொருள்களை அவர் விற்பனை செய்கிறார்.

சார்லஸின் 21-ஆவது பிறந்த நாள் பரிசாக, தனது தாய் அளித்த ஆஸ்டன் மார்டின் காரையே இன்றும் பயன்படுத்துகிறார். அந்த கார் ஒயினிலிருந்து தயாரிக்கப்படும் தாவர எரிபொருளில்தான் ஓடுகிறது. அவரிடம் ஜாகுவார், ஆடி, ரேஞ்ச் ரோவர்ஸ் உள்ளிட்ட சில கார்கள் பயோ எரிபொருளில் தான் ஓடுகின்றன.

சார்லஸின் தந்தை பிலிப் கண்டிப்புக்குப் பெயர் போனவர். ஒருமுறை இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான விவாதம் ஏற்பட்டபோது, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்லஸ் 1980-ஆம் ஆண்டில் "தி ஓல்டு மேன் ஆஃப் லோச்னகர்' என்ற ஒரு சிறுவர்களுக்கான கதைப் புத்தகம் எழுதி இருக்கிறார். அந்தக் கதை பின்னர் அனிமேஷன் படமாகவும் எடுக்கப்பட்டது. அதில், சார்லஸ்தான் பின்னணிக் குரல் கொடுத்தார்.

தினமும் மாலை நான்கு மணிக்கு சார்லஸ் டீ குடிக்கும்போது கூடவே அவித்த முட்டையை சாப்பிடுவார். அவர் சாப்பிடும் காய்கறிகளை வேக வைக்க, குறிப்பிட்டமினரல் தண்ணீரைத்தான் பயன்படுத்தப்படுகிறது. அவருக்கு மிகவும் பிடித்தது பாலும், தேனும் கலந்து தயாரித்த டார்ஜிலிங் டீ.

கடற்படையில் பணியாற்றியுள்ள சார்லஸ் தேர்ச்சி பெற்ற ஹெலிகாப்டர் பைலட்டும்கூட. மேஜிக் செய்வதில் ஆர்வம் கொண்ட இவர், "லண்டனின் மேஜிக் சர்க்கிள்' என்ற அமைப்பில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். அரியணை ஏறுவதற்கு முன்பு வரை சுமார் 400 கலை, இலக்கிய, இதர அமைப்புகளின் தலைவராக இருந்திருக்கிறார்.

இவரது சொத்து மதிப்பு 400 மில்லியன் டாலர். இதில், 1.30 லட்சம் ஏக்கர் நிலமும் அடக்கம்.

2000-ஆம் ஆண்டில் காரனேஷன் ஸ்ட்ரீட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஒருமுறை தோன்றி இருக்கிறார். 2009-இல், போரிஸ்ஜான்சன், பராக் ஓபாமா ஆகியோரை தோற்கடித்து, "மிகச் சிறந்த ஆடை அணிந்த ஆண்' என்ற எஸ்கொயர் பத்திரிகையின் விருதைப் பெற்றார் சார்லஸ்.

73 வயதாகும் சார்லஸ் நாட்டின் மூத்த குடிமகன் என்ற வகையில், அரசு பென்ஷன் பெறுகிறார். அவரும், அவரது அதிகாரபூர்வ அரசியல் வாரிசு இளவரசர் வில்லியம்ஸ் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என்பது மரபு.

ADVERTISEMENT
ADVERTISEMENT