தினமணி கொண்டாட்டம்

வியக்க வைக்கும் அலங்கார மாலைகள்!

25th Sep 2022 06:00 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

 

மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, பிச்சிப்பூ .. இப்படி பூ வகைகளில் தான் அலங்கார மாலைகள் செய்து விற்பனையாவதைப் பார்த்திருப்போம். ஆனால், காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, ஏலக்காய், மஞ்சள் கிழங்கு, மயிலிறகு, பட்டு நூல் உள்பட 12 வகையான பொருள்களில் அலங்கார மாலைகளைச் செய்து அசத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம், திருத்தணி, ராமேசுவரம், சிதம்பரம்... என பல்வேறு ஊர்களிலும் உள்ள பிரபலமான கோயில்களுக்கு இவர்கள் செய்து கொடுத்துள்ள மாலைகள் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு அவை பக்தர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளன.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் சின்ன ஐயங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இந்தச் சகோதரர்களில் மூத்தவரான ப.முருகானந்தம் (30), அம்மனாச்சி அம்மன் கோயில் பூஜகராகவும், இவரது தம்பி ப.லோகநாதன்(26) , திரிபுரசுந்தரி சமேத பெரியதம்பிரான் என்ற சிவன் கோயிலிலும் பூஜகராக இருந்து கொண்டே அலங்கார மாலைகளும் செய்து தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அலங்கார மாலைகள், சுவாமிகளுக்கு கவசங்கள், வெற்றிலைக் கிளிகள், பூச்செண்டு, கிரீடம், சாமரம், விசிறி, பெண்கள் அலங்கார சடைகள், மணமக்களுக்கான கல்யாண மாலைகள்... இப்படியாக இவை எவற்றுக்கும் பூக்களே இல்லாமல் மற்ற பொருள்களில் இவர்களின் தயாரிப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

இதுகுறித்து ப.முருகானந்தம் கூறியதாவது:

""எந்தவித வேதிப்பொருளும் இல்லாமல்,கடையில் கிடைக்கும் பொருள்களின் நிறத்தையும் மாற்றாமல் இயற்கையானதாகவும்,வித்தியாசமானதாகவும் எதையாவது செய்ய வேண்டும்,அதுவும் கோயில் உபயோகத்துக்குப் பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் அடிமனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.

முதலில் பட்டு நூலில் மாரியம்மனுக்கு மாலை செய்து பார்த்தோம். அது மிகுந்த பாராட்டைத் தந்தது. இது கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்ததால் அதேபோல பட்டு நூல் மாலை செய்து தருமாறு பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போது ஜாதிக்காய், உலர் திராட்சை, பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கிராம்பு, வெட்டிவேர், செயற்கை கற்கள்,மஞ்சள் கிழங்கு, ஜாதிப் பத்திரி, வெற்றிலை உள்பட மொத்தம் 15-க்கும் மேற்பட்ட பொருள்களில் அலங்கார மாலைகள் தயாரித்து பல கோயில்களுக்கு ஆர்டரின் பேரில் மட்டும் கொடுத்து வருகிறோம்.

இதே பொருள்களில் கிளிகள், சுவாமிக்கு விதவிதமான கவசங்கள், கிரீடங்கள்,விசிறி,சடைகள்,பூச்செண்டு,மணமக்களுக்கான கல்யாண மாலைகள் என பலவற்றையும் ஆர்டர் கொடுப்பவர்கள் கொடுக்கும் தொகைக்கு ஏற்ப செய்து தருகிறோம்.

ஆர்டர் கொடுத்த 3 நாள்களில் எந்தப் பொருளாக இருந்தாலும் கைகளாலேயே கோர்த்து தயாரித்து தருகிறோம்.

கோயில் நிர்வாகிகள்,அர்ச்சகர்கள், பூ வியாபாரிகள் ஆகியோர் எங்களது வாடிக்கையாளர்கள். தேவைப்பட்டால் கொரியர் மூலமாகவும் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். நாங்கள் தயாரித்தவற்றை பயன்படுத்திய பிறகும் பிரித்து சொந்த உபயோகத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.

ப.லோகநாதன் கூறியதாவது:

""நாங்கள் தயாரிக்கும் பொருள்கள் மகாலட்சுமி வாசம் செய்யக்கூடியவை.மங்களகரமானவை, வாழை நார் அல்லது ஊசி நூலில் கோர்த்துத்தான் மாலைகளை வடிவமைக்கிறோம்.

வேதிப்பொருள்கள் எதுவும் சேர்ப்பதில்லை. முக்கியமான கோயில்களுக்கு மாலைகள் தயாரிக்கும்போது, விரதம் இருந்து கொள்வோம். இப்போது மணமக்கள் திருமண நாளன்று அணிந்து கொள்ளும் மயிலிறகு மாலைகள் அதிகமாக செய்து தருமாறு ஆர்டர்கள் வருகின்றன. இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

பல கோயில்களுக்கு மூலவர், உத்ஸவர்களுக்கு சாற்றும் வகையில் கவசங்களும் இதே பொருள்களில் செய்து கொடுக்கிறோம். குங்குமப்பூ,பட்டு நூல், உலர்பழங்கள், வெட்டி வேர், பாதாம்பருப்பு ஆகியனவற்றில் சுவாமி கவசங்கள் தயாரிக்கிறோம். இதையும் 4 நாள்களில் செய்து கொடுக்கிறோம்.

காஞ்சி காமாட்சி,திருத்தணி முருகன், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், குமரகோட்டம் முருகன், சிதம்பரம் நடராஜர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட பல கோயில்களுக்கு எங்களது தயாரிப்புகள் சென்றுள்ளன'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT