தினமணி கொண்டாட்டம்

இரண்டாம் எலிசபெத் எழுபதாண்டு சகாப்தம்!

சுஜித்குமார்

மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கீழ் 70 ஆண்டுகள் பணிபுரிந்த பெருமையுடன் தனது 71-ஆவது வயதில் மன்னர் பொறுப்பை ஏற்றார் பிரிட்டன்
இளவரசர் மூன்றாம் சார்லஸ்.

உலகின் பல்வேறு நாடுகளில் மன்னர்கள், அரசிகள் ஆட்சி புரிந்தாலும், ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் அரச வம்சத்துக்குப் பெரும் புகழும், மரியாதையும் உள்ளது. குறிப்பாக, 56 நாடுகளை தனது முடியாட்சியின் கீழ் பிரிட்டன் கொண்டிருந்தது.

கடந்த 1926-ஆம் ஆண்டில் லண்டன் மேஃபேர் என்ற இடத்தில் மன்னர் ஆறாம் ஜார்ஜுக்கும்-அரசி எலிசபெத்துக்கும் பிறந்த இரண்டாம் எலிசபெத்தை தனது வாரிசாக அறிவித்தார் ஜார்ஜ். அவருக்கு தனியாக சிறப்புக் கல்வி அளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது பிராந்திய ராணுவப் பணிகளிலும் எலிசபெத் ஈடுபட்டார்.

1947-இல் கிரீஸ்-டென்மார்க் ராஜகுடும்ப வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் பிலிப்பை மணந்தார்.

கடந்த 2021 ஏப்ரலில் கணவர் பிலிப் இறக்கும் வரை அவர்களது அன்பான திருமண வாழ்க்கை 73 ஆண்டுகள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் மகன்கள் சார்லஸ், ஆன்ட்ரு, எட்வர்ட், மகள் ஆன் உள்ளனர்.

1952-இல் ராணியாக பதவியேற்பு: தந்தை ஆறாம் ஜார்ஜ் 1952 பிப்ரவரியில் காலமான நிலையில், 25-ஆவது வயதில் ராணியாகப் பதவியேற்றார் இரண்டாம் எலிசபெத். ஏறத்தாழ 70 ஆண்டுகள் 214 நாள்கள் என ராணியாகப் பதவி வகித்த அவர் தனது வாழ்வில் பல்வேறு பிரச்னைகளையும் எதிர்கொண்டார். வட அயர்லாந்து பிரச்னை, ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் அவரது மகன்கள் திருமண முறிவு, மருமகள் டயானா இறப்பு உள்ளிட்டவை சோகத்தையும், விமர்சனங்களையும் முன்வைத்தன.

எனினும், பிரிட்டன் மக்களிடம் ராணி எலிசபெத்துக்கு இருந்த செல்வாக்கு அதிகமாக இருந்ததே தவிர குறையவில்லை. அவரது தனிப்பட்ட புகழும் மறையவில்லை.

5 போப்பாண்டவர்களைச் சந்தித்துள்ள இரண்டாம் எலிசபெத், 1977-இல் வெள்ளி விழா, 2002-இல் பொன்விழா, 2012-இல் வைர விழா, 2022-இல் பவள விழாக்களைக் கண்டவர். 56 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்புக்கும் தலைவராகவும் திகழ்ந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் தான் ராணியாகப் பொறுப்பேற்று 70 ஆண்டுகள் ஆனதன் பவள விழாவைக் கொண்டாடினார்.

அதிக ஆண்டுகள் ஆண்டவர்: பிரான்ஸ் அரசர் 15-ஆம் லூயிஸூக்கு பின்னர் ராணியாக அதிக ஆண்டுகள் நீடித்தவர் என்ற பெருமையும் பிரிட்டனை அதிக ஆண்டுகள் ஆண்டவர் என்ற சிறப்பும் அவர் வசம் உள்ளது. பிரிட்டன் அரசியலில் ராணி எலிசபெத் தலையிட்டதே இல்லை. கடைசிவரை நடுநிலையாகத் தான் இருந்தார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஸ்காட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் தனது 96-ஆவது வயதில் (8.9.2022) மூப்பு காரணமாக மறைந்தார். அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது இறுதிச் சடங்குகள் செப். 19-இல் நடைபெறுகின்றன.

பவள விழா வயதில் மன்னர்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மிகவும் பிடித்தமான மகனான மூன்றாம் சார்லஸ் தனது 71-ஆவது வயதில் பிரிட்டன் மன்னராக பதவியேற்க உள்ளார்.

பக்கிங்காம் அரண்மனையில் 1948-இல் ராணி எலிசபெத்தின் மூத்த மகனாகப் பிறந்த சார்லஸ் 70 ஆண்டுகள் ராணிக்கு உற்ற துணையாகத் திகழ்ந்தார். நாடாளுமன்றத்தைக் கூட்டும் போது ராணி எலிசபெத்தை அழைத்துச் செல்வது சார்லஸ் தான். ராணியாக எலிசபெத் பதவியேற்ற போது, சார்லஸூக்கு வயது நான்கு .

ராணியின் நெருக்கடியான அலுவல்கள் மத்தியில் குழந்தை சார்லûஸ தாதியர்களே கவனித்துக் கொண்டனர். எனினும் பின்னர் தாய்-மகன் இடையிலான பிணைப்பு அதிகம் ஆனது.

வயது மூப்பு காரணமாக ராணி தனது பல்வேறு பொறுப்புகளை சார்லஸ் வசம் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில், அவரது மறைவைத் தொடர்ந்து பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்றுள்ளார் மூன்றாம் சார்லஸ்.
உலகிலேயே அதிக வயதில் மன்னர் ஆகும் பெருமை சார்லஸூக்கு கிடைத்துள்ளது.

மகாராணியின் மறுபக்கம்

தனது 96-ஆவது வயதில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் குறித்து ருசிகர தகவல்கள் பல உள்ளன.

பள்ளிக்குச் சென்று பயிலாதவர்: சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போல் எலிசபெத் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. தனி ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில், 1945-இல் லண்டனில் நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தில் சகோதரி மார்க்ரெட்டுடன் இணைந்து பொதுமக்களுடன் கொண்டாடினார் எலிசபெத்.

உறவினரே கணவர்: இரண்டாம் எலிசபெத்தும், அவரது கணவர் பிலிப்பும் உறவினர்கள் ஆவர். தந்தை வழியில் எலிசபெத்தும், தாய் வழியில் பிலிப்பும் விக்டோரியா மகாராணியின் உறவினர்கள். மேலும், கணவர் பிலிப் உள்பட குடும்ப உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் ராணியை அவரது அனுமதியின்றி நினைத்த நேரத்தில் சென்று சந்திக்க அனுமதியில்லை.

பாட்டியைவிட அதிக ஆண்டுகள் ஆண்டவர்: தனது பாட்டி விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் 7 மாதங்கள் பிரிட்டனை ஆண்ட நிலையில், அவரை விட 70 ஆண்டுகள் 214 நாள்கள் ஆண்டவர் என்ற சிறப்பை பெற்றார் பேத்தி இரண்டாம் எலிசபெத்.

இரண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்: ராணி எலிசபெத் உண்மையான பிறந்த நாள் ஏப்ரல் 21 ஆகும். ஆனால் கோடைக்காலத்தில் பிறந்த நாள் ஊர்வலத்தை நடத்துவதற்காக ஜூன் 11-ஆம் தேதியும் பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டது.
15 பிரதமர்கள் கண்டவர்: தனது ஆட்சிக் காலத்தில் தற்போது பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ் முதல் 15 பிரிட்டன் பிரதமர்களையும், 14 வெவ்வேறு அமெரிக்க அதிபர்களையும் கண்ட சிறப்பும் எலிசபெத் வசம் உண்டு.

நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம்: ராணி எலிசபெத்துக்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அவருக்கு கார்ஜிஸ் என்ற குட்டை கால்களுடன் கூடிய நாய்கள் மீது அதிக பிரியம் உண்டு. மொத்தம் 30 கார்ஜிஸ்களை வளர்த்தார். மேலும் அன்னப்பறவை, டால்பின்கள் உள்ளிட்டவற்றின் மீதும் அதிக பற்று கொண்டவர்.

260 வெளிநாட்டுப் பயணங்கள்: ராணி எலிசபெத் தனது வாழ்நாளில் மொத்தம் 260 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டவர்.

மணிபர்ஸ் மூலம் உதவியாளர்களுக்கு குறிப்பு:

குறிப்பாக, ஒரு கூட்டம் அல்லது நிகழ்ச்சியில் இருப்பு கொள்ள முடியாத நிலையில் உதவியாளர்களுக்கு தனது மணிபர்ஸ் மூலம் சமிக்ஞைகளை அனுப்புவார் ராணி. கூட்டத்தை முடித்து கொள்ள இவ்வாறு அவர் செய்வது வழக்கம்.

பிடித்த கார் ரேஞ்ச் ரோவர்: ராணி எலிசபெத் விரும்பி பயன்படுத்திய கார் ரேஞ்ச் ரோவர் ஆகும். அவருக்கு பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமமே தேவையில்லை.

ஒருமுறை ரேஞ்ச் ரோவர் காரை அவரே ஓட்டிச் சென்று சௌதி மன்னர் அப்துல்லாவை அழைத்துச் சென்றார்.

1989 முதல் ஒரே நகப்பூச்சு: கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் ராணி எலிசபெத் ஒரே ஒரு நகப்பூச்சை பயன்படுத்தி வந்தார். வியப்பைத் தரும் வகையில் அந்த நகப்பூச்சு மிகவும் விலை குறைந்ததாகும். அதன் விலை வெறும் 7 டாலர்களாகும். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் ராணி எலிசபெத்தின் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டது.

நிலவுக்கு செய்தி அனுப்பிய ராணி: கடந்த 1969-இல் அப்பல்லோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்னால் ஏராளமான உலகத் தலைவர்கள் வாழ்த்து செய்திகளை அனுப்பினர். சிறிய சிலிக்கான் டிஸ்கில் இடம் பெற்ற செய்திகளில் ராணி எலிசபெத் அனுப்பிய செய்தியும் இருந்தது. அந்த சிலிக்கான் டிஸ்கை விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்க கொடியின் கீழே வைத்தனர்.

வழக்கு தொடர முடியாது: ராணி எலிசபெத்தின் மீது நீதிமன்றத்தில் எவரும் வழக்கு தொடர முடியாது. மேலும் அவரை எந்த வழக்கிலும் சாட்சியாகவும் அழைக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT