தினமணி கொண்டாட்டம்

ரோஜர் ஃபெடரரும் கடலூரும்..!

2nd Oct 2022 06:00 AM | பிஸ்மி பரிணாமன்

ADVERTISEMENT

 

கிரிக்கெட்டில் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், ஷான் வார்ன், கால்பந்தாட்டத்தில் பீலே, மாரடோனா, கிறிஸ்டினா ரொனால்டோ போன்ற ஜாம்பவான்கள் இருக்கின்றனர். இவ்வாறே டென்னிஸ் ஆட்டத்தில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் ரோஜர் ஃபெடரர்.
இதுவரையில் 20 கிராண்ஸ்ட்லாம் போட்டிகளில் ரோஜர் ஃபெடரர் வென்றுள்ளார். ரோஜரின் 24 ஆண்டு கால ஆட்டங்களில், 310 வாரங்கள் தொடர்ந்து உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். 6 ஏடிபி பட்டங்கள், 28 மாஸ்டர்ஸ் பட்டங்கள் என்ற சாதனைகளுக்கும் ரோஜர் சொந்தக்காரர். தொடர்ந்து 8 விம்பிள்டன் தொடர்களில் வெற்றி பெற்ற சாதனையை உருவாக்கியவரும் ரோஜர்தான்!
முழங்கால்களில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகளால் பல முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், தொடர்ந்து ஆட முடியாமல் 41-ஆம் வயதில் டென்னிஸ் ஆடுவதிலிருந்து கண்ணீருடன் பிரியா விடை பெற்றார். பரிசுத் தொகை, விளம்பரங்களில் தோன்றியதற்காகக் கிடைத்த ஊதியத்தைச் சேர்த்தால் சுமார் ரூ.4,300 கோடி சம்பாதித்துள்ளார்.
டென்னிஸ் மைதானத்தில் பந்து எடுத்துப் போடும் சிறுவனாக ஆரம்ப வாழ்க்கையைத் தனது 18-ஆம் வயதில் தொடங்கிய ரோஜர், பின்னாளில் திறமையான ஆட்டக்காரராக மாறி சாதனைகளைக் குவித்தார். ரோஜர் ஃபோர்ஹேண்ட் ஷாட், ஏஸ் சர்வீசுகள், பந்தை கட் செய்வது போன்ற எதிராளி கணிக்க முடியாத மாயாஜாலங்களை டென்னிஸ் மைதானத்தில் நிகழ்த்தி உலக அளாவிய ரசிகர்களை ரோஜர் பெற்றிருந்தார்.
ரோஜர் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்தவர். டென்னிஸ் ஆடுவதில் பிசியாக இருந்தாலும், ரோஜர் தனது அறக்கட்டளை மூலம் நலிந்த குழந்தைகளுக்கு உதவி வந்தார்.
இவருக்கும், தமிழகத்தின் கடலூருக்கும் தொடர்பு இருந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரும்.
2004-இல் சுனாமி அலைகள் தமிழகத்தின் பல பகுதிகளை கபளீகரம் செய்தது. இதைத் தொடர்ந்து சீரமைப்பு, மக்கள் நலப் பணிகள் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றன. 2006-ஆம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பின் சார்பாக, ரோஜர் ஃபெடரர் கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட வந்திருந்தார்.
பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகள் அரசு குழந்தைகள் காப்பக விடுதிகளில் வளர்ந்து வந்தன. காப்பகத்தில் குழந்தைகள் வாழ்வதற்கான வசதிகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ரோஜர் விடுதிக்கும் சென்றிருந்தார். "குழந்தைகளுக்கு குடிக்க வழங்கப்படும் தண்ணீர் தரமானதா?' என்று குடித்தும் பார்த்தார். அப்போது, அந்த விடுதியில் வளர்ந்து வந்த அபிநயா என்ற சிறுமி ரோஜரைக் கவர, ரோஜர் அந்தச் சிறுமியுடன் கொஞ்ச நேரம் விளையாடினார். மடியில் கிடத்தி கொஞ்சினார். பிறகு அந்த விடுதியில் வாழும் சிறார்களுடன் கிரிக்கெட் ஆடினார்.
ரோஜர் வாழ்வில் மறக்க முடியாத இன்னொரு நிகழ்ச்சி. 2017-இல் நடைபெற்றது. ரோஜர் டென்னிஸ் ஆட அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது டென்னிஸ் ஆடும்
சிறுவன் ""மிஸ்டர் ரோஜர். கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து விளையாடுங்கள்.. நான் பெரியவன் ஆனதும் உங்களுடன் டென்னிஸ் விளையாட வேண்டும்..'' என்று கேட்டுக் கொள்ள, சிறுவனின் தைரியத்தைப் பாராட்டிய ரோஜர் ""அதற்கென்ன விளையாடலாம்..'' என்றார்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரோஜர் அமெரிக்கா சென்றபோது, இஸ்யான் அஹ்மத் எனும் சிறுவனுக்கு 11 வயது ஆகியிருந்தது. இஸ்யான் டென்னிஸில் இளையோர் பிரிவில் ஒற்றையர் பிரிவில் "நம்பர் ஒன்'னாக உயர்ந்திருந்தார். ரோஜர் இஸ்யானுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற அவனுடன் நட்பு டென்னிஸ் விளையாடினார்.
ரோஜர் டென்னிஸின் ஆளுமையாக இருந்ததற்கு காரணம் பந்தை அநாவசியமாக டிராப் செய்யும் வித்தைதான்.
அவர் நீண்ட ரேலி அமைத்து வலையை விரிப்பார். பந்தை அங்கும் இங்கும் அடித்து எதிராளியை பந்தை அடிக்க இடம்-வலம், முன்-பின் ஓடச் செய்வார். இந்த வேடிக்கை கொஞ்ச நேரம் தான். பந்தை எதிராளி ஆடும் இடத்தின் கடைசி எல்லை வரை பந்தை அடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று வேகத்தைக் குறைத்து வலையின் மறுபுறம் ஒட்டி விழுமாறு பந்தை இறக்கி அடிப்பார். இதை எதிர்பார்க்காத எதிராளி வலை நோக்கி ஓடி வந்து பந்தை அடிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார். போட்டிகளில் பெரும்பாலான சமயங்களில் ரோஜர் டிஃபென்ஸ் கேம் தான் ஆடுவார்.
ரோஜர் இரு இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தை. முதல் இரட்டையர் மகள்கள். இரண்டாம் இரட்டையர் மகன்கள். மனைவி மிர்கா முன்னாள் டென்னிஸ்
வீராங்கனை.
மிர்காவும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்தவர். ரோஜர் மிர்காவை 2000-இல் நடைபெற்ற சிட்னியில் நடந்த ஒலிம்பிக்ஸிற்காக ஸ்விட்சர்லாந்து சார்பாக டென்னிஸ் விளையாடும் குழுவில் ரோஜரும், மிர்காவும் இடம் பெற்றிருந்தனர். அப்போதுதான் ரோஜர் மிர்கா சந்திப்பு நட்பாகி காதல் ஆனது. 9 ஆண்டுகள் தொடர்ந்த காதல் 2009-இல் திருமணத்தில் முடிந்தது.
""கால்களில் எத்தனையோ பிரச்னை. அடிக்கடி அறுவை சிகிச்சை. என்னை இத்தனை நாள் டென்னிஸ் ஆட மனைவி மிர்கா அனுமதித்ததே பெரிய விஷயம்'' என்கிறார் ரோஜர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT