தினமணி கொண்டாட்டம்

பால்கே விருது பெறும் ஆஷா பரேக்

எஸ். சந்திர மௌலி


இந்தியத் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் விருதான "தாதா சாகிப் பால்கே விருது', ஹிந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு வழங்கப்பட்டுள்ளது. 2020- ஆம் ஆண்டுக்கான விருதைப் பெறும் இவர், நடிகை, தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குநர், தயாரிப்பாளர்.. என பன்முக ஆளுமையைக் கொண்டவர்.
இவர் "பத்மஸ்ரீ', "குஜராத் மாநில அரசின் விருது', "வாழ்நாள் சாதனையாளர் விருது', "லாச்சு மகராஜ் புரஸ்கார், ஃபிலிம்பேர் விருது' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
1942-ஆம் ஆண்டு அக். 2-இல் பிறந்த ஆஷா பரேக்குக்கு தற்போது எண்பது வயதாகிறது. 1960, 70-களில் ஹிந்தித் திரை உலகில் மிக அதிக சம்பளம் வாங்கிய நடிகை.
குஜராத்தியை தாய் மொழியாகக் கொண்டவர். சிறு வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இவரது அழகையும், நாட்டியத் திறமையையும் கண்டார் பிரபல இயக்குநர் பிமல் ராய், 1952-இல் குழந்தை நட்சத்திரமாக தனது "மா' என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.
இயக்குநர் விஜய் பட், ஆஷாவை தனது படத்துக்கு வேண்டாம் என நிராகரித்தார். இருப்பினும், ஒரே வாரத்தில் இயக்குநர் நசிர் ஹுசைன் தனது தில்தீ க்தேகோ (இதயத்தைப் பார்) என்ற படத்துக்காகக் கதாநாயகியாகத் தேர்வு செய்தார். ஷம்மி கபூருக்கு ஜோடியாக ஆஷா பரேக், நடித்த அந்தப் படம் நட்சத்திரஅந்தஸ்தை ஏற்படுத்தியது.
அதன்பின்னர், 1961-இல் தொடங்கி அடுத்த பத்தாண்டுகளில் நசிர் ஹுசைனின் இயக்கத்தில் ஆறு படங்களில் நடித்து புகழ் பெற்றார். திரைப்பட விநியோகத்திலும் வெற்றிகளைக் கண்டார்.
ஹிந்தி திரையுலகில் கவர்ச்சியான கதாநாயகியாக வலம் வந்த ஆஷா பரேக்கை இயக்குநர் ராஜ்கோஸ்லா தனது "தோபதான்', "சிராக்', "மெய்ன்துள்சிதேரா ஆங்கன்கி' ஆகிய திரைப்படங்களில் வாய்ப்பு தந்து திறமையான நடிகை என்பதையும் நிரூபித்தார்.
கடிபதங் (1970) என்ற படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றார். சுமார் 80 திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தனது தாய் மொழியானகுஜராத்தியில் மூன்று படங்களிலும், சில பஞ்சாபி, கன்னடப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
தேவ் ஆனந்த், சுனில் தத், ராஜேஷ் கன்னா, ஷம்மி கபூர்... என பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இருந்தபோதும், திலீப் குமாரோடு ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
சிலஆண்டுகள்அம்மா ரோல்களில் நடித்தார். பின்னர், நடிப்புத் துறைக்கு முழுக்குப் போட்டார்.
அதன்பின்னர், குஜராத்தியில் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து இயக்கத் தொடங்கினார்.
1998-ஆம் ஆண்டு முதல் 2001 வரை மூன்றாண்டுகள் திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவராக இருந்தபோதும், அரசிடம் ஊதியம், சலுகைகளைப் பெறவில்லை.
அந்தக் காலகட்டத்தில் அவர் சேகர் கபூரின் எலிசபெத் உள்ளிட்ட சில படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன.
ஆஷா பரேக் திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனால், "தி ஹிட் கேர்ல்' என்ற தனது சுய சரிதையில் சில விஷயங்களைமனம் திறந்து கூறியிருக்கிறார் ஆஷா பரேக்.
""நான் திரையுலகத்தில் கதாநாயகியாகப் புகழ் பெற காரணமாக இருந்தவர் இயக்குநர் நசிர் ஹுசைன். அவர் மீது எனக்குக் காதல் இருந்தது. ஆனால், அவருக்கு ஏற்கனெவே திருமணமாகிவிட்டது. இதனால், அவருடனும், அவரது குடும்பத்தினருடனும் எனது நட்பு தொடர்ந்தது'' என்று ஆஷா பரேக் கூறியிருந்தார்.
ஆஷாபரேக், தனது 35-ஆம் வயதில் மும்பை தாதர் பகுதியில் சமூகச் சேவை மையத்தில் இருந்த இரண்டு வயது ஆண் குழந்தையைப் பார்த்தபோது, அவருடைய மனதில் ஒருவித நெகிழ்வு ஏற்பட்டது. உடனே அவர் தனது பெற்றோரிடம் பேசி, குழந்தையை தத்து எடுத்து, வளர்க்க அனுமதியைப் பெற்றார். ஆனால், அந்தக் குழந்தைக்கு பிறவியிலேயே இதயத்தில் சில குறைபாடுகள்இருந்ததால், தத்தெடுக்க மருத்துவர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் பெரிதும் வருத்தமுற்றார்ஆஷா பரேக்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT